Breaking News


அண்மைக்காலமாக முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனால் முல்தை்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கடல்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அத்துமீறல் செயற்பாடுகளை விரைவில், உரிய அதிகாரிகள் கட்டுப்படுத்தத் தவறினால், இந்திய இழுவைப்படகுகள் தாக்கி அழிக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் லோ.ஜூட்நிக்சன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது முல்லைத்தீவு மாவட்டதினைப் பொறுத்தவரையில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பெருங்கடலை நம்பி வாழ்ந்துவருகின்றனர்.

தற்போது இறால் பிடிப்பதற்கான பருவகாலமாக காணப்படுகின்றது. இந் நிலையில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் இந்தியன் இழுவைப் படகுகள் எமது கடற்பரப்பிற்குள் வருகைதந்து எமது கடல் வளங்களை அழிக்கும் செயற்பாட்டை வழமையாக கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் இம்முறையும் ஐந்நூறிற்கும் மேற்பட்ட இந்தியன் இழுவைப்படகுகள் முள்ளிவாய்க்கால் கடல்பரப்புத் தொடக்கம், சாலை வரையான கடற்பரப்பில் எமது வளங்களை அழிக்கும் வகையில் இழுவை மடிகளைப் பயன்படுத்தி மீன்குஞ்சுகள் இறால்குஞ்சுகள் என்பவற்றுடன் பெரிய மீன்களையும் அள்ளிச் செல்கின்றனர்.

எனவே எமது மக்கள் கொரோனா காரணமாக முடங்கியுள்ள நிலையிலும், கடல்சீற்றம் காரணமாக கடலுக்குச் செல்லமுடியாத சூழ்நிலையினைப் பயன்படுத்தி அத்துமீறி இவ்வாறான செயற்பாடுகளில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

தற்போது இறால் பருவகாலம் என்பதால் அதற்குரிய தயார்ப்படுத்தலில் எமது மீனவர்கள் ஈடுப்பட்டிருக்கும்போது, இந்திய மீனவர்களின் இத்தகைய அத்துமீறிய செயற்பாட்டால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எமது வளங்களை அழிக்கின்ற இந்திய இழுவைப்படகுகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதேவேளை இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துமாறு கடற்றொழிலாளர் சமாசம் மற்றும் சம்மேளனம் இணைந்து மாவட்டசெயலாளர், கடற்றாழெில் உதவிப்பணிப்பாளர் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றோம். அவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்மிடம் தெரியப்படுத்தியிருந்தனர். எனினும் இதுவரையில் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந் நிலையில் மாவட்ட கடற்றொழில் சம்மேளனம் மற்றும் சமாசம் சார்பில் உரிய அதிகாரிகளுக்கு நாம் வேண்டுகோள் விடுப்பது என்னவெனில், உடனடியாக இப் பிரச்சினைக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும்.

அவ்வாறு இவ்விடயத்தில் உரிய தீர்வுகள் கிடைக்காவிடில் நாங்கள் நேரடியாக இறங்கி இந்திய இழுவைப் படகுகளைத் தாக்கி அழிக்கவேண்டிய நிலை ஏற்படும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.