Breaking News


போலி விமானப்பொறியியலாளராக தன்னை காண்பித்து ஊரை ஏமாற்றி வந்த கில்லாடியொருவரை பொலிசார் கைது செய்தனர். போலி விமான பொறியியலாளராக அறிமுகம் செய்தே, அவர் 3 திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கட்டுநாயக்க, கோவின்ன பகுதியில் வைத்து கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

புஷ்பகுமார என்ற அந்த நபர் களுத்துறையை சேர்ந்தவர். 2 வருடங்களின் முன்னர் வீடொன்றை வாடகைக்கு பெற்று குடியிருந்து வருகிறார். விமான பொறியிலாளராக தன்னை கூறிக்கொண்டதுடன், 15,000 ரூபாய் வாடகைக்கு வீட்டை பெற்றார்.

50 வயதுடையவர் என்றாலும், அவர் ஒரு இளைஞனைப் போல தோற்றமளிக்கிறார். இதன்மூலம் பல மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்.

எந்த வேலைக்கும் செல்லாமல் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார், அவரது வீட்டிற்கு பலர் அடிக்கடி வந்து செல்கிறார்கள் என அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

விமான பொறியியலாளர் போல தோற்றமளிக்கும் புகைப்படங்கள் வீடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விமானி போல, வெளிநாட்டு விமானிகளுடன் என பல விதமான புகைப்படங்கள் காணப்பட்டன.

கார், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களையும் வைத்திருந்தார்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போலி நாணயத்தாள்கள், அச்சிட உதவும் கருவி, போலி ஊரடங்கு அனுமதி பத்திரங்கள், போலி பதக்கங்கள் மற்றும் ஆசியாவின் சிறந்த வானூர்தி பொறியாளர் என புஷ்பகுமார பெற்ற சான்றிதழ்கள் மற்றும் இரண்டு திருமண சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஊரடங்கு அனுமதி பத்திரங்களில் கட்டுநாயக்கவிற்கு பொறுப்பான OIC இன் கையொப்பம் போலியாக இடப்பட்டிருந்தது.

விமானியாக காணப்படும் அவரது புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 வருடங்களின் முன் துப்புரவு சேவையில் பணிபுரிந்தேன். அப்போது ஏரோநொட்டிகல் இன்ஜினியர்களைப் பார்த்து அவர்களை போல மாற ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. இறுதியில் விமானிகள், பொறியியலாளர்களின் படங்களை பெற்று அவற்றில் எனது தலையை பொருத்தி, படங்களை வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளேன்“ என விளக்கமளித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளில் புஷ்பகுமார பல மோசடிகளில் போலியான படங்களை பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

புஷ்பகுமாரவின் சொந்த இடம் வென்னப்புவ என்பது தெரியவந்தது. அவரது சட்டபூர்வமான மனைவி வென்னப்புவவில் ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். ஆனால் மனைவியை விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார்.

பின்னர், இரத்தினபுரியிலுள்ள செல்வந்த குடும்ப பெண்ணொருவரை, தன்னை விமான பொறியிலாளராக காண்பித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சமநேரத்தில், விமான பொறியிலாளராக நடித்து மொரட்டுவவை சேர்ந்த பெண்ணொருவரையும் திருமணம் முடித்துள்ளார். மூன்றாவது மனைவியுடன் தங்கியிருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டார்.

புஷ்பகுமார தில்லாங்கடி மனிதர் என்பதை 3வது மனைவி அறிந்திருந்தாலும், அவர் கைதான பின்னர்தான், அவரது 3வது மனைவியே தான் என்பது மொரட்டுவ பெண்ணுக்கு தெரிய வந்தது.

இரத்தினபுரயை சேர்ந்த இரண்டாவது மனைவி தொழிலிற்காக சிங்கப்பூர் சென்று விட்டார். அவர் 3வது மனைவியுடன் வாழ்வது குறித்து எதுவும் தெரியாத அவர், சொந்த வீடு கட்டுவதற்காக மாதாந்தம் புஷ்பகுமாரவிற்கு பணம் அனுப்பி வருகிறார். இதன்படி, இரத்தினபுரியில் நிலம் வாங்கி, வீடொன்றை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஏன் பல பெண்களை மணந்தார் என்று பொலிசார் அவரிடம் கேட்டபோது, ​​அது சாதாரணமான விடயம்தானே என பதிலளித்துள்ளார்.

கணனி தொழில்நுட்பங்களின் மூலம் போலியான இந்த ஆவணங்களை தயாரித்துள்ளார். இடையிடையே கோழி ஏற்றிச்செல்லும் வாகன சாரதியாகவும் செயற்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொதுசுகாதார பரிசோதகர் ஒருவரினதும், பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினதும் தயாரித்து வைத்திருந்துள்ளார்.அவர் விமான பொறியிலாளர் என நம்பி கொழும்பிலுள்ள நிலத்தை அவரது பெயருக்கு தனது குடும்பத்தினர் எழுதிக் கொடுத்து விட்டனர் என 3வது மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.