பிட்டுடன் நண்டுக்கறி, கோழிக்கறி, இறால்கறி, சொதி, மாம்பழம், பலாப்பழம், வெந்தயக்குழம்பு, வெங்காயப்பொரியல், சொதி என நீளும் தமிழர்களின் பாரம்பரிய உணவான பற்றியெல்லாம் – சீனிச்சம்பலும், கட்டைச்சம்பலும் சாப்பிட்ட பிரசாத் பெர்னாண்டோ புரிந்து கொள்ள வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.
இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிட்டு தமிழ் மக்களின் பாரம்பரிய தேசிய உணவு. அதை பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் கேவலப்படுத்தும் விதமாக பேசியது விசமத்தனமானது. அவர் சிந்திக்கின்ற அடிப்படையில் தான் அதை சொல்லியுள்ளார்.
தமிழ் இந்து பாரம்பரியத்தில் பிட்டுக்கு மண் சுமந்த கதை உள்ளது. செம்மனசெல்விக்காக அணை கட்ட வந்த சிவபெருமான், கூலியாக பிட்டை கேட்டார் என அந்த கதையிலுள்ளது. வேலையை செய்யாமல் உறக்கத்தில் இருந்த சிவபெருமானிற்கு மன்னன் அடித்த அடி உலகத்தார் எல்லோர் முதுகிலும் விழுந்ததாகவும், அதுதான் முதுகில் உள்ள பள்ளமென்றும் அந்த கதையிலுள்ளது. பிரசாத் பெர்னாண்டோ தனது முதுகை தடவிப்பார்த்தால், பாண்டிய மன்னனின் அடியின் அகோரத்தை அவருக்கு சொல்லும்.
திருவெம்பாவையின் 6ஆம் பூசை புட்டு பூசை.
1986இல் மன்னாரில் இரண்டு இராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் பிடித்திருந்தனர். அப்போது சந்திரிகாவின் கணவர் விஜேகுமாரதுங்க, ஒஷி அபேகுணசேகர, கோட்டை தளபதி கப்டன் கொத்தலாவல ஆகியோர் இது தொடர்பில் பேச வந்தனர். அவர்களிற்கு வழங்கப்பட்ட விருந்து தயிர் சாதம். விருந்தின் பின்னர் அவர்கள் தயிர்சாதத்தை புகழ்ந்து பேசியிருந்தனர்.
வடை தமிழர்களின் பாரம்பரியத்தில் முக்கியமானது. நல்லது, கெட்டது அனைத்திலும் உண்டு.
அப்படியானவர்களை பார்த்து நீதிமன்றத்தில் பிரசாத் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் சொல்கிறார், பிட்டும் வடையும் சாப்பிட்டவர்களிற்கு பீட்ஸா காட்டியிருக்கிறாராம். ஒரு இனத்தின் உணவை ஏளனம் செய்வது இனத்திற்குரிய பண்பாக நான் கருதவில்லை என்றார்