Breaking News


அகில இலங்கை தமிழ் காங்கிரசில் இருந்து மேலும் 4 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான கடிதம், தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வி.மணிவண்ணனின் ஆதரவாளர்களான உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கையை தமிழ் காங்கிரசின் கஜேந்திரகுமார், கஜேந்திரன் அணி முன்னெடுத்து வருகிறது.

இதன்படி, மணிவண்ணனை கட்சியை விட்டு நீக்க முயற்சித்த பின்னர், யாழ் மாநகரசபை உறுப்பினர் ம.மயூரனை நீக்க முயற்சித்தது. எனினும், இரண்டு முயற்சிக்கும் நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில் யாழ் மாநகரசபை உறுப்பினர்களான டென்ஷி, தர்சிபா ஆகிய இரண்டு பேரையும், சாவகச்சேரி பிரதேசசபையில் அங்கம் வகிக்கும் நிதர்சன், கானு என்ற இரண்டு பேரையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்தாட்சி அலுவலருக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, இரண்டு உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கியதை தொடர்ந்து, வடக்கிலுள்ள சில புத்திஜீவிகள், மத தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய குழு, தமிழ் காங்கிரசின் கஜேந்திரகுமார், கஜேந்திரன் தரப்பை சந்தித்து, முட்டாள்தனமான நடவடிக்கையில் ஈடுபடாதீர்கள் என அறிவுரை கூறினர். தனிநபர் அரசியலை தவிர்த்து, இனமாக சிந்திக்க பழக வேண்டுமென்றும் அவர்களிற்கு அறிவுரை கூறினர். இதை இருவரும் ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சமரச முயற்சியில் ஈடுபட்ட ஒரு மத குருவை சற்று முன்னர் தொடர்பு கொண்டு, காங்கிரசின் நடவடிக்கையை குறிப்பிட்டு, கருத்து கேட்டது. “கெடு குடி சொல் கேளாது. இவர்களுடன் இனி நான் பேசவிரும்பவில்லை“ என தொடர்பை துண்டித்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.