Breaking Newsஇலங்கையின் முன்னாள் கிரிகெட் விளையாட்டு வீரரான முத்தையா முரளிதரன் வெறுமனே விளையாட்டு வீரர் மட்டும் இல்லை என்பதை விஜய்சேதுபதிக்கு தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வாளர்கள் யாரும் முரளிதரன் பட விவகாரத்தில் இன்னும் எடுத்துச் சொல்லாதது ஏன்? ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நட்சத்திரப் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக வெளிவரவுள்ள நிலையில் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த படம்பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே, ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துவரும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என ஈழத்தமிழர்களும் தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்களும் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பின்னர் யாரையும் காயப்படுத்தும் காட்சிகளில் தான் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி பதிலளித்திருந்தார்.

இதேவேளை சமீபத்தில், கொழும்பில் கோத்தபய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முரளிதரன் 2009 -ல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வில் முக்கியான நாள் என கூறியமை , ஈழ உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.

அதைத் தொடர்ந்து, ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன், காஷ்மீர் மக்களுக்காகவும் தமிழகத்தின் விளிம்புநிலை மக்களின் பிரச்னைகளுக்காகவும் தீர்க்கமாகக் குரல் எழுப்பும் விஜய் சேதுபதி, ஈழத்தமிழர்களைப் புண்படுத்தும் இந்த விஷயத்தில் மட்டும் நழுவுவது ஏன்? என கட்டுரை எழுதியிருந்தார்.

அவரின் அந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக தொடர்ச்சியாக அவருக்கு மிரட்டல்களும் ஆபாச அர்ச்சனைகளும் வந்தபடி இருக்கின்றன.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வந்த நாள் முதலாகவே அதை எதிர்த்து வருகிறோம் என்றும் ஒரு கிரிக்கெட் வீரராக முத்தையா முரளிதரன் கொண்டாடப்படக் கூடியவராக இருந்தாலும், அவரது வாழ்வும் கருத்துகளும் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஈழ இனத்திற்கு எதிரானது ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் கூறியுள்ளார்.

அத்துடன் ஈழ மக்களைக் கொன்றொழித்த கோத்தபயவின் தேர்தல் மேடைகளில் வலம்வரும் முரளிதரன் போற்றத்தக்க ஒரு மனிதரில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் தனது உழைப்பால் முன்னேறி இன்று தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி அடையாளத்தோடு இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது எனக் கோரிக்கை வைத்தபோதும், சமூக ஒற்றுமையை முன்னிறுத்துகிற படம்தான் அது, எனினும் யாரையும் காயப்படுத்தும் வகையில் நடிக்கமாட்டேன் என கூறியிருந்தார்.

அவர் நடிக்கு திரைப்படத்தால் எங்களுடைய பிரச்னை, திரைப்படத்தின் மூலமாகச் சொல்லப்படும், கருத்துகள் எங்கள் மனதை புண்படுத்தும் என்பதல்ல. மாறாக, திரைப்படம் எடுத்து போற்றத்தக்க வகையில் முரளியின் வாழ்வு இல்லை என்பதே என தீபச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால்தான் விஜய்சேதுபதி அதில் நடிக்கக்கூடாது என தான் மீண்டும் வலியுறுத்திய நிலையில், ராஜபக்‌ஷேவின் ஆதரவாளர்களும் முரளிதரனின் ஆதரவாளர்களும் எனக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுத்து வருகின்றதோடு, அடுத்து வருவது எங்களின் ஆட்சிதான், அப்போது இதற்கான பதிலைக் கூறவேண்டிவரும் என மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தீபச்செல்வன் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என நான் சொல்வதை, முரளிதரனுக்கு எதிரான ஒன்றாக மட்டும் சிங்கள அரசியல் தலைவர்கள் பார்க்கவில்லை என்றும் முரளி இலங்கையை ஆட்சி செய்த பெரும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவானவர் என்ற அடிப்படையில் அவரை விமர்சிக்கும்போது, தங்கள் மீதான விமர்சனமாகவே அதைப் பார்க்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முரளி, ஈழத்தமிழர்கள் விஷயத்தில் பேசிய விஷயங்கள் இலங்கை அரசை, இலங்கையில் ஆட்சி செய்த குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையிலான பேச்சுகள் என சுட்டிக்காட்டிய தீபச்செல்வன், புலிகளுக்கு எதிரான, ஈழ மக்களின் வலியைக் கொச்சைப்படுத்தும் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதில் விஜய் சேதுபதி இவ்வளவு ஆர்வம் காட்டுவது கவலை தருவதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.