இலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாறுகிறது கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

இலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாறுகிறது கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி!


கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இரண்டாவது கொரோனா சிகிச்சை நிலையமாக கோப்பாய் கல்வியியற் கல்லூரி மாற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு 50 நோயாளர்கள் சிகிச்சை பெற முடியும். அந்த வைத்தியசாலை முழுமையாக நிரம்பி விட்டது.

இந்த நிலையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியை கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு 300 கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தனிமைப்படுத்தல் மையமாக உள்ள தேசிய கல்வியியற் கல்லூரியை, கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.

இராணுவத்தினர் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு சிகிச்சையளிக்கும் நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள். கோப்பாய் கொரோனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர்களே கோப்பாயில் பணியாற்றவுள்ளனர். அவர்கள் ஒரு சுற்றில் 10 நாள் அங்கு பணியாற்றிய பின்னர் 14 நாள் தனிமைப்படுத்தலின் பின்னர் மீண்டும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

300 பேருக்கு சிகிச்சையளிக்கும் வசதியுடன் தற்போது இலங்கையில் மிகச்சில கொரோனா வைத்தியசாலைகளே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைதீவில் மாங்குளம் வைத்தியசாலை இந்த வாரமும், கிளிநொச்சியில் கிருஷ்ணபுரம் பகுதியில் அடுத்த வாரமும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.