முஸ்லிம் எம்.பிக்களின் துணையுடன் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு பௌத்த பிக்குகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கோட்டாபயவை ஜனாதிபதியாக்க உழைத்த பௌத்த பிக்குகளின் யோசனையை ஏற்காமல், முஸ்லிம் எம்.பிக்களின் துணையுடன் நிறைவேற்றப்பட்டதே இந்த திருத்தம் என புடுகல ஜினவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மத மற்றும் சமூக பணிகளில் தம்மை அர்ப்பணித்த பௌத்த பிக்குகளின் கடும் எதிர்ப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அரசு 20வது திருத்தத்தை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.
ருவான்வெலிசாயவில் ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்வதற்கு முன்னதாக,
அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை நாட்டின் தலைவராக்கிய மகா சங்கத்திற்கும்,
சிங்கள பௌத்த மக்களினதும் எதிர்பார்ப்பிற்கு இணங்க செயல்படுவேன் என்று இரண்டு முறை இந்த நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். பௌத்த பிக்குகள் அடங்கிய ஆலோசனைக் குழு நிறுவப்பட்டது. ஆனால், அரசியலமைப்பின் 20வது திருத்தம் குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கும் சட்டத்தை இயற்றுவதற்கும் ஆதரவை பெற்ற சிறுபான்மை எம்.பி.க்களுக்கு பல்வேறு பதவிகளை இந்த அரசு எதிர்காலத்தில் வழங்கும். எனவே, சிங்கள பௌத்த மக்களின் நம்பிக்கைகள் ஒவ்வொன்றாகக் சிதைந்து வருகின்றன.
தேர்தலுக்கு முன்னர், முஸ்லிம் எம்.பி.க்களின் துணையுடன் ஒருபோதும் சட்டம் இயற்ற மாட்டோம் என இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். முஸ்லிம் எம்.பிக்கள் அரசாங்கத்தில் இணைந்தால், ஒரு நிமிடம் கூட அரசில் இருக்க மாட்டோம் என சொன்னார்கள். ஆனால், இந்த அரசாங்கமும் சிங்கள பௌத்த அப்பாவி மக்களின் நம்பிக்கையை சிதைத்து சிறுபான்மையினரின் செல்வாக்கோடு முன்னேறி வருகிறது என்றார்.