இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பலை கடத்த முயன்ற குழுவினரை இங்கிலாந்து கொமாண்டோக்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர். 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திடீர் அதிரடி நடவடிக்கையாக கடல் வழியாகவும், வான் வழியாகவும் கப்பலிற்குள் நுழைந்த கொமாண்டோக்கள் 9 நிமிடத்தில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த எண்ணெய் கப்பல் கிரேக்க நிறுவனமான ஃபோலெக்ராண்டோஸால் இயக்கப்படுகிறது. 19 நாள் பயணத்தின் பின்னர் நேற்று இங்கிலாந்தை அண்மித்தது. நேற்று இரவு கடத்தல் முயற்சி நடந்துள்ளது. கடத்தல் சந்தேகநபர்கள் நைஜிரியர்கள் என கருதப்படுகிறது.
நேற்று இரவு ஹெலிகொப்டர் வழியாக கொமாண்டோக்கள் கப்பலில் தரையிறங்கினர். இரண்டு படகுகளிலும் சென்ற கொமாண்டோக்கள் கப்பலில் ஏறினர்.
கைதான 7 பேரும் ஹாம்ப்ஷயர் பொலிசாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்.
நாவ் ஆண்ட்ரோமெடா என்ற இந்த கப்பலின் கப்டன், கப்பல் குழுவினரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உதவி கோரியதையடுத்து, கொமாண்டோக்கள் தரையிறங்கினர்.
டேனரி கேனரி தீவுகளில் உள்ள லாஸ் பால்மாஸிலும் பின்னர் பிரான்சின் மேற்கு கடற்கரையில் செயிண்ட்-நாசாயருக்கு தெற்கிலும் கப்பல் தரித்துள்ளது. கடைசியாக ஒக்டோபர் 5 ஆம் திகதி நைஜீரியாவின் லாகோஸில் நிறுத்தப்பட்டது. இந்த தரிப்பிடங்களில் கடத்தல்காரர்கள் கப்பலில் ஏறினார்களா என்பது தெரியவில்லை. இன்று காலை 10.30 மணிக்கு சவுத்தாம்ப்டனுக்கு வர திட்டமிடப்பட்டது.
நேற்றிரவு கப்பலின் உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், இந்த சம்பவம் “100 சதவீதம் கடத்தல் அல்ல” என்றார்கள்.
கப்பல் கடத்தல் விவகாரம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல, ஒழுங்கற்ற நடத்தையில் விளைவு என தற்போது தெரிவிக்கப்படுகிறது