கரவெட்டி இராஜகிராமத்தை முடக்கிய போதும், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விட்டு வெளியேறி, இன்றும் நெல்லியடி நகரில் சரளமான நடமாட்டத்தில் அந்த பகுதியினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதேவேளை, நெல்லியடி பொதுச்சந்தையை மூட பாதுகாப்பு தரப்பு விரும்பவில்லையென அறிய முடிகிறது. இதனால் சந்தையை மூட முடியாமல் பிரதேசசபை திண்டாடி வருகிறது.
இராஜகிராமத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நெல்லியடி சந்தையில் கணிசமானளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லியடி பேருந்து நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் கணிசமான முச்சக்கர வண்டிகளை இயக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, முடக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதுடன், நகரிலும் சரளமாக நடமாடி வருகிறார்கள்.
இதையடுத்து, நெல்லியடி சந்தை, பேருந்து நிலையங்களை முடக்க கோரி கரவெட்டி தவிசாளர் த.ஐங்கரன் அவசர கடிதங்களை வடக்கு ஆளுனர், யாழ் அரச அதிபர், வடக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எனினும், அவர்களும் உரிய முடிவெடுக்க முடியாமல் திண்டாடி வருவதாக அறிய வருகிறது. இரண்டு நாட்களாகியும் அது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவர்கள் திண்டாடி வருகிறார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அனைத்து முடிவுகளையும் பாதுகாப்பு தரப்பின் ஆலோசனையின் பெயரிலேயே செய்ய வேண்டியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.