மரணதண்டனை கைதியான பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட கஹவத்தை பிரதேசசபை தலைவர், தன்னையும் சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.
அவரது கோரிக்கை சிறைச்சாலை சட்டங்களிற்கு உட்பட்டிருக்காததால், இந்த விவகாரத்தில், சிறை சீர்திருத்தங்கள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனையை கோரியுள்ளார் சிறைச்சாலைகள் ஆணையாளர்.
மரண தண்டனை கைதியும், கஹவத்த பிரதேச சபையின் தலைவருமான வஜிர தர்ஷன டி சில்வாவே, பிரதேச சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதி கோரியுள்ளார்.
அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு கஹவத்தையில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
இந்த விவகாரத்தில் வஜிர தர்ஷன டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர மற்றும் மற்றொரு நபருக்கு இரத்னபுரி உயர் நீதிமன்றம் மரண தண்டனை மற்றும் 47 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சம்பவத்தின் ஒரு குற்றவாளியான பிரேமலால் ஜெயசேகர பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.