மட்டு மேய்ச்சல் தரை விவகாரத்தை ஆராய குழு; முல்லை காணி சுவீகரிப்பு நிறுத்தம்: தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் சமல் ராஜபக்ச இணக்கம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மட்டு மேய்ச்சல் தரை விவகாரத்தை ஆராய குழு; முல்லை காணி சுவீகரிப்பு நிறுத்தம்: தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் சமல் ராஜபக்ச இணக்கம்!


வடக்கு, கிழக்கில் மகாவலி அதிகாரசபையின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்புக்களை நிறுத்துவதென அமைச்சர் சமல் ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், அமைச்சரிற்குமிடையிலான சந்திப்பின்போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டது.

தமிழ் கட்சிகளின் சார்பில் -தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பிற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர் பூ.பிரசாந்தன், சட்டத்தரணி மங்களேஸ்வரி, பொதுஜன பெரமனவின் ச.வியாழேந்திரன், சு.கவின் சுரன் ராகவன்ஈ அம்பாறை எம்.பிக்கள் டி.வீரசிங்க, திலக் ராஜபக்ச ஆகியோரை சமல் ராஜபக்ச அழைத்திருந்தார்.

அத்துடன், மட்டக்களப்பு மேய்சல் தரை விவகாரத்துடன் தொடர்புடைய தமிழ், சிங்கள மக்கள் பிரதிநிதிகள் சிலர், முல்லைத்தீவில் மகாவலி அதிகாரசபையினால் சுவீகரிக்க திட்டமிடப்பட்டிருந்த செம்மலை முதல் கொக்குளாய் வரையான காணிகளின் உரிமையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி சிவில் செயற்பாட்டாளர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மேய்ச்சல் தரையில் சிங்களவர்களிற்கு காணி வழங்கப்படுவதால் ஏற்படும் கேடுகளை தமிழ் மக்கள் பிரதிநிதிகள், சிவில் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். ஆனால், சிங்கள சிவில் பிரதிநிதிகள் அதை அடியோடு நிராகரித்து தம்மிடம் காணி உரிமை உள்ளதாக காண்பித்து, நீண்டகாலமாக தாம் அங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடுதாக தெரிவித்தனர்.

இரு தரப்பிலும் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்ததால், இதில் முடிவற்ற தன்மை ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுன எம்.பிக்கள் வீரசிங்க, திலக் ராஜபக்ச, மட்டக்களப்பு கூட்டமைப்பு எம்.பிக்கள் கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரச அதிபர்கள், மகாவலி அதிகாரசபை பிரதிநிதிகள், தொடர்புடைய பிரதேச செயலாளர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த வாரம் வெலிக்கந்தையில் கூடி இந்த விவகாரம் தொடர்பாக ஆராயும்.

முல்லைத்தீவில் செம்மலை தொடக்கம் கொக்குளாய் வரையான காணிகளை மகாவலி அதிகாரசபையிடம் கைளிக்குமாறு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளருக்கு அண்மையில் உத்தரவிடப்பட்ட விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.

அந்த காணிகளை கையகப்படுத்த வர்த்தமானி அறிவித்தல் அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகவிருந்தது.

இது குறித்து ஆராயப்பட்ட போது, அந்த காணி சுவீகரிப்பை தற்போதைக்கு நிறுத்த உத்தரவிடுவதாக சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை அடுத்த கட்டமாக ஆராய்ந்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்