Breaking Newsஇலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் முற்றியுள்ள குடுமிப்பிடி சண்டைகளை நிறுத்த , அதிரடியாக சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளார் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா . இதன்படி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர் . இலங்கையில் மட்டுமல்ல- உலகிலேயே எங்குமில்லாத விசித்திரமான கட்சி செயற்பாடு , இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார் . அவர் முடிவெடுப்பதற்கு முன்னரே கட்சிக்குள் உள்ளவர்கள் முடிவெடுத்து விடுவார்கள் . அதில் உச்சமாக- அவருக்கு எம்.பி பதவி வழங்குவதா இல்லையா என்பதை கட்சிக்குள் இருக்கும் சிலரே தீர்மானித்து , தமது முடிவு சரியானது என சுமந்திரன் செய்தியாளர் சந்திப்பை நடத்தும் விசித்திர சம்பவங்கள் நடந்தன . 

இரண்டு அணிகளாக பிரிந்து நின்று பகிரங்கமாக மோதினர் . போதாதற்கு கிளிநொச்சியில் தனி ஜமீனை சிறிதரன் உருவாக்கி நிர்வகித்தார் . ஒவ்வொரு தரப்பும் மறுதரப்பை பகிரங்கமாக விமர்சித்தனர் . தமக்கு ஒவ்வாத தரப்பினர் கட்சிக்குள் பதவிகளிற்குள் வரக்கூடாதென , இரா.சம்பந்தனுடன் உள்ள நெருக்கத்தை பாவித்து சுமந்திரன் தடுத்தார் . இப்படி மோதல் , குழப்பம் , குழிபறிப்பு , கதிரைப் போட்டி , அதிகார மோகம் என கடைந்தெடுக்கப்பட்ட கடைத்தனங்களின் மொத்த கூடாரமாக தமிழ் அரசு கட்சி மாறி வந்தது .

பூட்டிய வீட்டுக்குள்ளும் , பொது இடங்களிலும் இவ்வளவு அரசியல் சீரழிவுகளிலும் ஈடுபட்டு விட்டு , தேர்தல் என வந்தவுடன் , தமிழ் தேசிய சட்டையை போட்டுக்கொண்டு , புறப்படுவது என வழக்கத்தை வைத்திருந்தனர் . இந்த குழப்பங்களிற்கு முடிவு கட்டும் பெரிய முயற்சியின் , சிறு அடியை இப்பொழுது இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எடுத்துள்ளார் . இதன்படி , எம்.ஏ.சுமந்திரன் அணியில் இருந்து ஒருவர் , அதற்கு எதிர்தரப்பில் இருந்த கட்சி அணியிலிருந்து ஒருவர் என இருவரை கட்சியிலிருந்து ஒரு வருடத்திற்கு இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதை அறிந்தது . இந்த இடைநிறுத்தம் நிரந்தரமல்ல . தற்காலிகமானது . ஒழுக்காற்று நடவடிக்கை .

 சுன்னாகத்தில் எம்.ஏ.சுமந்திரனின் பிரச்சார கூட்டமொன்றில் ( ஆனால் ஏற்பாட்டாளர்கள் அதற்கு வேறு பெயர் சொன்னார்கள் ) கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவை கடுமையான விமர்சித்தார்கள் . அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்- ஏற்கனவே கூட்டமைப்புக்கு எதிராக சதி செய்தவர் , சிங்கள பாலியல் தொழிலாளியொருவருடன் சிக்கியவரான பிரகாஷ் . அவருக்கும் நடவடிக்கை காத்துள்ளது . அந்த கூட்ட ஏற்பாட்டில் முக்கிய பங்கு வகித்ததுடன் , கட்டுரை எழுதுகிறேன் பேர் வழியென , சுமந்திரனிற்கு எதிரணியை முகப்புத்தகத்தில் தீவிரமாக விமர்சித்து வந்த ஹரிகரன் ஒரு வருடத்திற்கு நீக்கப்பட்டுள்ளார் . இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒழுக்காற்றுகுழு தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் , கட்சி பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் , ஒழுக்காற்று குழு உறுப்பினர்கள் ஞா.சிறிசேன் , பொ.கனகசபாபதி உள்ளிட்டவர்கள் கூடி இந்த முடிவை எடுத்தனர் . இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் , ஒழுக்காற்றுகுழு தலைவர் , ஒழுக்காற்றுகுழுவின் முடிவை கடிதம் மூலம் அறிவித்தார் . இதவரை கட்சிக்குள் நடந்து கொண்டதை போல அவரவர் விரும்பியதை போல நடந்து கொள்ளலாமென நினைத்தோ என்னவோ , ஹரிகரன் பதில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் . அதில் ஒழுக்காற்றுகுழு தலைவர் நடவடிக்கையெடுக்க முடியாது என்ற சாரப்பட வித்தகத்தை காண்பிக்க முயன்றார் . எனினும் , அதற்கு சட்டத்தில் இடமுண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் , செயலாளரும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்து , அவரது வாயை மூட வைத்துள்ளனர் . அத்துடன் , இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞரணி பிரமுகர் நா.குணாளனும் தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார் . அவர் பகிரங்கமாக முகப்புத்தகத்தில் சி.சிறிதரன் , எம்.ஏ.சுமந்திரனிடம் பல கேள்விகளை எழுப்பி
வந்தார் . இருவர் தொடர்பாகவும் போதிய ஆதாரங்கள் ஒழுக்காற்று குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் , அவர்களிடம் விளக்கம் கோரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை . நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் அண்மைய நாளில் இரண்டு அணிகளாக பிரிந்து உக்கிரமாக மோதிய இரண்டு தரப்பிலும் தலா ஒவ்வொருவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்கள் . இதன்மூலம் , கட்சிக்குள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தலாமென கட்சி தலைமை நம்புவதாக தெரிகிறது . இதில் சுவாரஸ்யம் ஒன்றுள்ளது . கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் செயலாளராக இருந்த துரைராசசிங்கத்தை நீக்க முயன்றபோது , கூட்டத்தில் பேசிய சுமந்திரன் , மத்திய குழுவில் நீக்கினால் நீதிமன்ற வழக்கிற்கு செல்லலாம் என தெரிவித்தார் . சுமந்திரன் அணியிலிருந்து இப்பொழுது நீக்கப்பட்ட ஹரிகரன் கட்சி ஒழுக்காற்று குழுவிற்கு எழுதிய கடிதத்திலும் நீதிமன்ற நடவடிக்கை பற்றி பிரஸ்தாபித்துள்ளார் .

No comments

Note: Only a member of this blog may post a comment.