பேரதிர்ச்சி: தனிமைப்படுத்தலை கணக்கிலெடுக்காத இராஜகிராம மக்கள்; நெல்லியடி முழுவதும் சரள நடமாட்டம்; சந்தை, பேருந்து நிலையம் இழுத்து மூடப்படும்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

பேரதிர்ச்சி: தனிமைப்படுத்தலை கணக்கிலெடுக்காத இராஜகிராம மக்கள்; நெல்லியடி முழுவதும் சரள நடமாட்டம்; சந்தை, பேருந்து நிலையம் இழுத்து மூடப்படும்!கரவெட்டி இராஜகிராமத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து , அந்த கிராமத்தின் ஒரு பகுதி நேற்று ( 29 ) முதல் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது . எனினும் , அந்த அறிவித்தலை கணக்கில் எடுக்காமல் வழக்கம் போல நெல்லியடி நகரின் பல வர்த்தக நடவடிக்கைகளில் அந்த கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள் . 

இந்த நிலைமையினால் அதிர்ச்சியடைந்துள்ள அதிகாரிகள் இன்றுதான் மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர் . இராஜகிராமத்தில் இருந்த ஒருவர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்டு , கொரோனா தொற்றிற்குள்ளானார் . அவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டார் . நேற்று முன்தினம் நடந்த பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது . தனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் சிறிதும் சமூகப்பொறுப்பற்ற விதமாக நடந்த அந்த நபர் பல இடங்களிற்கும் சென்று வந்துள்ளார் . 

அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் , அவர் சென்று வந்ததாக கூறும் இடங்கள் பற்றிய பெரிய பட்டியலே வெளியானதால் அதிகாரிகள் திண்டாடிப் போயுள்ளனர் .

இந்த நிலையில் , இன்று இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் நெல்லியடி சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டனர் . அத்துடன் , பேருந்து தரிப்பிடம் , முச்சக்கர வண்டி தரிப்பிடங்களிலும் காணப்பட்டனர் . 

இதையடுத்து , அவசர நடவடிக்கையெடுத்துள்ள கரவெட்டி பிரதேசசபை நெல்லியடி சந்தை , பேருந்து நிலையம் , முச்சக்கரவண்டி தரிப்பிடம் ஆகியவற்றை மூடுமாறு வடக்கு ஆளுனர் , உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது . சம்பந்தப்பட்ட தரப்புக்களிடமிருந்து விரைவுகதியில் பதில் வராவிட்டால் , நாளை தற்துணிவாக அவற்றை மூட பிரதேசசபை தீர்மானித்துள்ளது .

 தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியதையடுத்து , தற்போது துரித நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது . சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் , பொதுச்சுகாதார பரிசோதகர்கள் , பொலிசார் , இராணுவத்தினர் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வீடுவீடாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் . 

ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப அட்டை பரிசோதிக்கப்பட்டு , குடும்ப அட்டையில் உள்ள பெயரிற்குரியவர் வீட்டில் தங்கியிருக்கிறாரா என்பதை பரிசோதித்து வருகிறார்கள் . குறிப்பிட்ட நபர் வீட்டில் இல்லையென்றால் , அவர் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது .