Breaking News



சட்டத்தரணி வி.மணிவண்ணன் விவகாரத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்பிருந்தாலும் நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும் என நினைத்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கு தற்போதைய நிலைமை மேலும் தலையிடியை அதிகரிக்க வைத்துள்ளது . ஆரம்பத்தில் மௌனமாக இருந்த கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் மணிவண்ணன் விவகாரத்தில் தலைமை தவறாக நடந்ததாக இப்பொழுது கருத ஆரம்பித்துள்ளனர் . அண்மை நாட்களில் பலர் மணிவண்ணன் அணியுடன் தம்மை பகிரங்கமாக இணைத்துக் கொண்டுள்ளனர் . இது கட்சியின் தலைமைக்கு புதிய தலையிடியை ஏற்படுத்தியுள்ளது . 

மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்குவதென - கஜேந்திரனின் விருப்பத்தை ஏற்று கஜேந்திரகுமாரும் முடிவெடுத்திருந்தார் . இதற்கு சகல மட்டங்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது . எனினும் , நாளாக ஆக எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் , எல்லா வசைகளையும் பல்கலைக்கடித்துக் கொண்டு கேட்டு சகித்துக் கொண்டிருந்தது முன்னணி தலைமை . தமது நிலைப்பாடு குறித்து முன்னணி தலைமையும் விளக்கமளித்தது . 

மணிவண்ணனும் விளக்கமளித்தார் . பிரச்சனையின் ஆரம்ப கட்டத்தில் , உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளாமல் பல உறுப்பினர்கள் இருந்தனர் . எனினும் , ஆரம்பநாள் சர்ச்சைகள் ஓய்ந்த பின்னர் , இரண்டு தரப்பும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்து தமது தரப்பை விளக்கமளித்து வருகிறார்கள் . இதில் , இரு தரப்பு பிரச்சனையும் கொள்கை சார்ந்ததல்ல- வெறும் பெறாமை சார்ந்தது மட்டுமே என்ற உண்மையான விடயம் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் பலர் அறிந்திருந்தனர் . 

பிரச்சனையின் அடிமுடியை அவர்கள் நன்கறிந்திருந்தனர் . முன்னணி தலைமை தமது தரப்பு விளக்கத்தை அளிக்கும் சமயத்தில் , யாழ் மாநகரசபை உறுப்பினர்களின் பிரசன்னம் இருக்காமல் கச்சிதமாக பார்த்துக் கொண்ட விபரம் , பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிற்கு தாமதமாகவே புரிந்தது . இந்த சந்தேகத்தின் தொடர்ச்சியாக , பிரச்சனையின் அடி முடியை அவர்கள் ஆராய்ந்து நிலைமையை அறிய முற்பட்டது , மணிவண்ணன் தரப்பினர் நிலைமையை புரிய வைத்தது என எல்லாமாக சேர்ந்து பிந்திய நிலவரமாக , மேலும் பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மணிவண்ணனை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர் . தற்போதைய நிலைமையில் சுமார் 40 இற்கும் குறையாத உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மணிவண்ணனை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள் . 

அண்மைய நாட்களில் மட்டும் 8 உறுப்பினர்கள் தமது முந்தையை நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு மணிவண்ணனை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர் . கிட்டத்தட்ட முன்னணியின் பாதி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மணிவண்ணனை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர் . இந்த நிலைமையில் மணிவண்ணன் தரப்பு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை ஒன்றுகூட்டுவது தரப்பில் ஆராயப்பட்டு வருகிறது . 

கட்சி தலைமை எடுத்த பிழையான முடிவை சுட்டிக்காட்டுவதுடன் , அந்த பிழையான முடிவை மாற்றிக் கொள்வதுடன் , இந்த சிக்கலிற்கு பிரதான காரணமாக செ.கஜேந்திரன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற புதிய நிலைப்பாட்டை வலியுறுத்த ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர் . முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட அரைவாசிப் பேர் எடுத்துள்ள புதிய முடிவினால் கட்சித்தலைமை பெரும் தலையிடியில் உள்ளதாக தகவல் .

No comments

Note: Only a member of this blog may post a comment.