அரச தரப்பு எம்.பியின் தலையீடு - யாழ். பல்கலையில் கிழித்தெறியப்பட்ட அழைப்பிதழ்கள்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

அரச தரப்பு எம்.பியின் தலையீடு - யாழ். பல்கலையில் கிழித்தெறியப்பட்ட அழைப்பிதழ்கள்!


அரச சார்புத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தில், எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைக்கப்படவிருந்த விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வு மையக் கட்டடத் தொகுதியின் நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் அச்சிடப்பட்ட நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்களைக் கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதியை எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டத்தின் கீழ் 1.6 பில்லியன் ஜப்பானிய ஜென் ( இலங்கை ரூபாயில் 2.2 பில்லியன்) பெறுமதிக்கு கட்டடங்கள் மற்றும் ஆய்வு கூட உபகரணங்கள் மற்றும் நவீன விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன.

கட்டுமானப் பணிகள் கடந்த வருடம் நிறைவு பெற்ற பின்னரும், பாவனைக்கு விடாதமை குறித்துக் கவலையடைந்த ஜப்பானிய அரசாங்கம், அதனை விரைவில் திறந்து பாவனைக்கு விடுமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அழுத்தம் கொடுத்ததையடுத்து, இந்தக் கட்டடத் தொகுதியை இந்த மாத்த்தின் இறுதியில் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவுக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தனிகர் அகிரா சுகியமா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவார்கள் என்றும், அதற்கேற்றவாறான நிகழ்ச்சி நிரலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னையும் விருந்தினர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உயர் மட்ட அழுத்தம் கொடுத்ததாகவும், அதனையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விருந்தினர் பட்டியலில் அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருப்பதாகவும் அறிய வருகிறது.

இந்த அறிவிப்பினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டுள்ளதாகவும், அச்சிடப்பட்ட நூற்றுக் கணக்கான அழைப்பிதழ்களைக் கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்தது.