தமிழ் அரசு கட்சிக்குள் குழு செயற்பாடு தொடர்ந்தால் கூட்டமைப்பை விட்டு வௌியேறுங்கள்: இரகசியமாக கூடி ரெலோவிற்கு அங்கீகாரமளித்தது தலைமைக்குழு! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

தமிழ் அரசு கட்சிக்குள் குழு செயற்பாடு தொடர்ந்தால் கூட்டமைப்பை விட்டு வௌியேறுங்கள்: இரகசியமாக கூடி ரெலோவிற்கு அங்கீகாரமளித்தது தலைமைக்குழு!


இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரன்- சி.சிறிதரன் கூட்டு தொடர்ந்து கூட்டமைப்பு செயற்பாடுகளிற்கு எதிராக செயற்பட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய தமிழ் தேசிய அணியொன்றை உருவாக்க தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு நேற்று (24) அங்கீகாரம் அளித்துள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு நேற்று வவுனியாவில் கூடியது.

வழக்கத்தை போல ஆர்ப்பாட்டங்களின்றி காதும் காதும் வைத்ததை போலவே இந்த தலைமைக்குழு கூடியது.

இதன்போது, எட்டு தலைமைக்குழு உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.

கட்சியின் தேசிய மாநாடு நடந்து 2 வருடங்களாகும் நிலையில், நவம்பர் 2ஆம் திகதிக்கு முன்பாக தேசிய மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மாநாட்டை நடத்துவதில்லையென தீர்மானிக்கப்பட்டது.

விரைவில் கட்சியின் வெற்றிடமாக உள்ள பதவிகளை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், கோடீஸ்வரன் ஆகியோர் வகித்த பொதுச்செயலாளர், தவிசாளர், உப பொருளாளர் பதவிகளிற்கு ஆட்களை நியமிப்பதென முடிவாகியது.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ரெலோவிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பொறுப்புக்களிற்கு எதிராக அண்மை நாட்களாக எம்.ஏ.சுமந்திரன்- சிறிதரன் கூட்டணி செயற்பட்டு வருவது குறித்து ஆராயப்பட்டது.

கூட்டமைப்பிற்குள் உரிய அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில், கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டது. பின்னர் இது குறித்து நீண்ட வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

அதன்படி, கூட்டமைப்பிற்குள் உரிய அங்கீகாரம் தரவில்லையென்றால் ரெலோ கூட்டமைப்பிலிருந்து விலகலாமென தலைமைக்குழு அங்கீகரித்தது.

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுடன் பேசி இதற்கு தெளிவான முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. அனைத்து கட்சிகளுடன் பேசி, வலுவான முன்னெடுப்பை ரெலோவே மேற்கொள்ளுமென தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் 3ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இது குறித்து ஆராயவுள்ளதால், 3ஆம் திகதிக்கு பின்னர் இந்த விவகாரத்தில் இநுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது