Breaking News



வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் இன்று ( 17) காலை மீட்கப்பட்டன . பெரும் வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சடலங்கள் மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கொலை சந்தேகநபரான இளைஞன் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார் . மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரான கோபால் குகதாசன் ( 40 ) , மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன் ( 34 ) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டனர் . சுப்பிரமணியம் சிவாகரன் என்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . 

இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்கலாமென கருதப்படுகிறது .
இன்று காலை , கொலை நடந்த வீட்டிற்கு அயலிலுள்ள வீடொன்றிற்கு சென்ற சந்தேகநபர் , வீட்டிலுள்ளவர்களை அழைத்து , அவர்களிடம் வாங்கிய காட்டு கத்தியை ஒப்படைத்துள்ளார் . இதன்போது , " அங்கு இருவரையும் போட்டுள்ளேன் . தேவையென்றால் போய் பாருங்கள் " என்று கூறிவிட்டு சென்றுள்ளார் . பின்னர் சம்பவம் நடந்த வீட்டிலிருந்த தனது ஆடைகள் உள்ளிட்ட சில பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கால்நடையாக கிளம்பியுள்ளார் . 

அவரது தகவலால் அச்சமடைந்த அயலவர்கள் , சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்றுள்ளனர் . அங்கு இருவர் உயிரிழந்த நிலையிலும் , மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் குற்றுயிராகவும் காணப்பட்டுள்ளார் . இதையடுத்தே , ஓமந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் , நோயாளர் காவு வண்டியில் படுகாயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார் . 

இதையடுத்து , கிராம மக்கள் சிலர் சந்தேகநபரான இளைஞனை தேடிச் சென்றனர் . இளைஞன் நடந்து சென்று கொண்டிருந்ததை அவதானித்தனர் . அவரிடம் ஆயுதங்கள் ஏதாவது இருக்கலாமென்ற அச்சத்தில் , அவரை பின்தொடர்ந்து சென்று , சற்று தொலைவில் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிசாரிடம் விடயத்தை தெரிவித்தனர் .

இளைஞனை போக்குவரத்து பொலிசார் மடக்கிப் பிடித்தனர் . சம்பவம் நடந்த வீட்டில் மதுபான போத்தல்கள் பல காணப்பட்டன . மது அருந்திய இடத்தில் விபரீதம் நடந்திருக்கலாமென்ற தோற்றத்தை ஏற்படுத்தும் சூழல் அங்கு காணப்பட்டது . கைதான இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , கொலையை தானே புரிந்ததாக அவர் ஒப்புக் கொண்டார் . இளைஞனின் வாக்குமூலத்தில்- " நாம் நான்கு பேரும் நேற்று இரவிலிருந்து மது அருந்தினோம் . அவர்களிற்கு போதை ஏறியதும் , என்னை தாக்கினார்கள் . இதனால் ஆத்திரமடைந்து இரவு 1 மணியளில் வீட்டை விட்டு வெளியேறினேன் . வீட்டுக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டு , மீண்டும் சென்றேன் . வீடொன்றில் வாங்கிய காட்டு கத்தியிருந்தது . அதிகாலை 4 மணியளவில் அங்கு சென்றபோது மூவரும் போதையில் தூங்கிக் கொண்டிருந்தனர் . கத்தியாலும் , கோடாரியாலும் அவர்களை வெட்டினேன் " என வாக்குமூலமளித்துள்ளார் . 

கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன் உழவு இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்யவிருந்தார் . இன்று உழவு இயந்திரம் கொள்வனவு செய்யப்படவிருந்தது. இதை முன்னிட்டு நேற்று இரவு அவர்கள் மது அருந்தியுள்ளனர். இந்த மது விருந்தே அவர்களிற்கு எமனாக அமைந்து விட்டது.

எனினும், இளைஞன் கொலைக்காக கூறிய காரணம் உண்மையானதா, வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பதை பொலிசார் தொடர்ந்தும் விசாரித்து வருகிறார்கள்.





No comments

Note: Only a member of this blog may post a comment.