தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலரிற்கு எதிராக பொலிசாரால் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (2) வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுட்டிக்க முயன்றார்கள் என குற்றம்சாட்டி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன், தி.சரவணபவன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில், பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட ஆறு பேரையும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், சங்கரப்பிள்ளை சார்பில் சட்டத்தரணி பிரேம்நாத் முன்னிலையாகுவார். ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன், தி.சரவணபவன் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகுவார். சுமந்திரனின் வழக்குகளில் “பின்தொடர்பவர்களாக“ செல்லும் கே.சயந்தன், கி.துரைராசசிங்கம் போன்றவர்கள் முன்னிலையாகுகிறார்கள்.
இன்று சுமார் 10 இற்கும் அதிக சட்டத்தரணிகள் முன்னிலையாகுவார்கள் என தெரிகிறது.
இதேவேளை, இன்றைய வழக்கில் திடீரென எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகுவது மாவட்ட தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்களிற்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 6 பேருக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்கல் செய்ததும், சட்டத்தரணி கே.வி.தவராசாவை தொடர்பு கொண்டே அவர்கள் சட்ட ஆலோசனை பெற்றுள்ளனர். அவரது ஆலோசனை படி மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில், இரா.சாணக்கியனால் மூவர் சார்பில் முன்னிலையாகுமாறு எம்.ஏ.சுமந்திரனிடம் கோரப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கைக்கு ஏனையவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிய முடிகிறது