அதிகாலையில் நித்திரை விட்டடெழுந்ததும் கஜேந்திரனின் தொலைபேசி உத்தரவு…. யாழ் மாநகரசபை அமர்வில் கலந்து கொண்டார் மணிவண்ணன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

அதிகாலையில் நித்திரை விட்டடெழுந்ததும் கஜேந்திரனின் தொலைபேசி உத்தரவு…. யாழ் மாநகரசபை அமர்வில் கலந்து கொண்டார் மணிவண்ணன்!


அகில இலங்கை தமிழ் காங்கிரசின் அதிஉச்சபட்ச எதிர்ப்பு முயற்சிகளையும் மீறி, வி.மணிவண்ணன் இன்று (29) யாழ் மாநகரசபை அமர்வில் கலந்து கொண்டார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார்- கஜேந்திரன் அணியின் 3 மாநகரசபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் அந்த கோரிக்கையை நிராகரித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்தும், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் மணிவண்ணனை நீக்கிய காங்கிரசின் தலைமையிலுள்ள கஜேந்திரகுமார், கஜேந்திரன் கூட்டணி, அவரை அரசியலில் இருந்தும் ஒதுக்க பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டனர்.

மணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையிலிருந்தும் நீக்கும்படி தெரிவித்தாட்சி அலுவலருக்கும் கடிதம் அனுப்பினர். அதை ஏற்ற தெரிவித்தாட்சி அலுவலர், மணிவண்ணனின் உறுப்புரிமை வறிதாவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மணிவண்ணனின் மாநகரசபை உறுப்புரிமை நீக்கத்திற்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் தரப்பினரால் 2 வருடத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட மனு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதேவேளை, மணிவண்ணனை கட்சியை விட்டு நீக்கும் முடிவிற்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்கால தடைவிதித்தது.

இந்த நிலையில் இன்று யாழ் மாநகரசபை அமர்வில் கலந்து கொள்ளவுள்ளதாக நேற்று மணிவண்ணன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மநகரசபை உறுப்பினர்களை இன்று காலையில் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு உத்தரவொன்றை இட்டிருந்தார்.

மணிவண்ணன் சபை அமர்வில் கலந்து கொள்ள வந்தால், எமது உறுப்பினர் கிருபாகரன் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார். மணிவண்ணன் கலந்து கொள்வதை காங்கிரசின் அனைத்து உறுப்பினர்களும் எதிர்க்கிறார்கள் என அவர் தெரிவிப்பார், அதற்கு மாறாக யாரும் எழுந்து கதைக்கக்கூடாது, மீறி கதைத்தால் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்போம் என ஒரு மிரட்டல் விட்டிருந்தார்.

இந்த நிலையில் வி.மணிவண்ணன் இன்று சபை அமர்வில் கலந்து கொள்ள வந்தார்.

எனினும், மணிவண்ணனிற்கு எதிராக சுமந்திரன் தொடர்ந்த வழக்கின் பிரதி இன்னும் மாநகரசபைக்கு கிடைக்கவில்லையென்பதால் மணிவண்ணன் கலந்து கொள்ள முடியாது என முதல்வர் ஆனல்ட் தெரிவித்தார்.

இதையடுத்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீளப்பெறப்பட்டது என்ற வழக்கின் பிரதியை தனது சட்டத்தரணி மூலமாக பெற்ற மணிவண்ணன், இன்று சபை முதல்வரிடம் சமர்ப்பித்தார். அதை முதல்வர் ஆனல்ட் ஏற்றுக்கொண்டு, அமர்வில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லையென அறிவித்தார்.

எனினும், முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களின் கஜேந்திரகுமார்- கஜேந்திரன் குழு ஆதரவாளர்களான 3 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனைய உறுப்பினர்கள் மணிவண்ணன் ஆதரவாளர்கள். அவர்கள் மௌனமாக இருந்தனர்.

மணிவண்ணனை கட்சியை விட்டு நீக்கியது என குறிப்பிட்டே சுமந்திரன் வழக்கை வாபஸ் பெற்றார். மணிவண்ணன் எமது கட்சி அல்ல என அவர்கள் குறிப்பிட்டனர்

எனினும், மணிவண்ணன் அமர்வில் கலந்து கொள்வதில் சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லையென்பதை சுட்டிக்காட்டிய முதல்வர ஆனல்ட், மணிவண்ணனை அனுமதித்தார்.

இதையடுத்து, 2 வருடங்களின் பின்னர் மணிவண்ணன் மீண்டும் மாநகரசபை அமர்வில் கலந்து கொண்டார்.

இளம் தமிழ் அரசியல்வாதியான மணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து நீக்க வேண்டுமென ஆரம்பத்தில் எம்.ஏ.சுமந்திரனும், தற்போது கஜேந்திரகுமார், கஜேந்திரன் கூட்டணியும் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தவகையானவர்களின் அரசியல் தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது