தனது பணியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் நடு வீதியில் இறக்கி விட்டு சென்ற வர்த்தகர்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

தனது பணியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் நடு வீதியில் இறக்கி விட்டு சென்ற வர்த்தகர்!


தனது வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்ததும், அவரை பொது இடமொன்றில் இறக்கி விட்டு சென்ற வர்த்தகர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹன்வெல்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இளைஞன் இறக்கி விடப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (28) இந்த சம்பவம் நடந்தது.

பேலியகொட மீன் சந்தையில் மீன் வாங்கி, மீகொட பகுதியில் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார். அவரது வர்த்தக நிலையத்தில் ஹன்வெல்ல, வலவத்த பகுதியில் வசிக்கும் 18 வயதான இளைஞன் பணிபுரிந்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, இப்பகுதியில் மீன் வர்த்தகர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

அவர்களின் மாதிரிகள் ஹோமாகம மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது. இதில் மீன் விற்பனை நிலையமொன்றில் பணிபுரியும் 18 வயதான இளைஞன் தொற்றிற்குள்ளானது தெரிய வந்தது.

இந்தச் செய்தியை அறிந்ததும், தனது வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய அந்த இளைஞனை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற வர்த்தகர், அவிசாவளை, மணியங்கம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்க முயற்சித்துள்ளார். எனினும், வீட்டின் உரிமையாளர்கள் அதற்கு உடன்படவில்லை.

இதையடுத்து, இளைஞனை வலவத்தையிலுள்ள தனது வீட்டில் தங்க வைப்பதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற வர்த்தகர், ஹன்வெல்லவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையம் அருகே அவரை இறக்கி விட்டு சென்றதாக, ஹன்வெல்ல பொது சுகாதார பரிசோதகர் லக்ஷ்மன் ராஜபக்ஷ நேற்று (29)  தெரிவித்தார்.

இளைனிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பொதுசுகாதார பரிசோதகர்கள், பொலிசார் தேடுதல் நடத்தினர். மீன் வர்த்தகரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, இளைஞன் அங்கிருக்கவில்லை.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஹன்வெல்ல, வலவத்த பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து இளைஞன் பிடிக்கப்பட்டார்.

அந்த வீடு பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டு, இளைஞன் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

மீன் வர்த்தகரும் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்