உள்நாட்டு தகவல் தொடர்பாடல் சேவை வழங்கல் கம்பனிகளால் சீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விசனத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைக் குறைத்துக்கொள்ளுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது.
இலங்கையில் டெலிகொம் மற்றும் இணையவசதி வழங்கல் சேவைகளுக்காக சீன தொழில்நுட்பம் உபயோகிக்கப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று அந்த சங்கம் எச்சரித்திருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் எமது நாட்டில் முக்கிய பங்கொன்றை வகிப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், வங்கி விபரங்கள் உள்ளடங்கலாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தரவுகளை பதிவேற்றம் செய்து வைப்பதற்கு மேற்படி தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.
ஆகவே தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் சம்பந்தப்பட்ட டெலிகொம் மற்றும் ஏனைய அரச முகவர் நிலையங்களினால் பயன்படுத்தப்படும் சீன தொழில்நுட்பம் தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் நாட்டின் புலனாய்வுப் பிரிவுகளிடம் வலியுறுத்தியிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, இரகசியத்தன்மை பேணப்பட வேண்டிய விடயங்களில் சீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைக் குறைத்துக்கொள்ளுமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.