தேவைப்பட்டால் மட்டும் வாழைச்சேனைக்கு ஊரடங்கு; மீன்பிடி துறைமுகம் மூடல்: பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

தேவைப்பட்டால் மட்டும் வாழைச்சேனைக்கு ஊரடங்கு; மீன்பிடி துறைமுகம் மூடல்: பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்!


கொழும்பு பேலியகொட மீன் சந்தைக்கு வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து மீன் கொண்டு சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பி.சி.ஆர் பரிசோதனை செய்தவர்களில் பதினொரு பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தியதையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பிரதேச உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட மாநாடு இன்று சனிக்கிமை (24) இடம் பெற்றது.

பதினொரு நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக பி.சி.ஆர் பரிசோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அடையாளப்படுத்தப்பட்ட பதினொரு பேரும் கொரோனா சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற உள்ளதாகவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான பதினொரு பேரும் வசித்துவரும் வீதிகள் தனிமைப்படுத்த பிரதேசமாக மாற்றுவதுடன் தேவை ஏற்படின் இன்று சனிக்கிழமை மாலை தொடக்கம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று உள்ளவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர்கள் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் பி.சி.ஆர். மாதிரிகளும் பெறுவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜெயசுந்தர தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, ஏறாவூர் மற்றும் கரடியனாறு, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதேசபை உறுப்பினர்கள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் வர்த்தக சங்கங்களின் தலைவர்கள் இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதே வேளை இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரை எந்த தொழுகையும் பள்ளிவாயல்களில் இடம் பெறாது என்று பள்ளிவாயல்களில் ஒலி பெருக்கியில் அறிவித்தல் செய்யப்படுகின்றது.

வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை, செம்மன் ஓடை, மீராவோடை போன்ற கிராமசேகர் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்னர்.

பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி முகக் கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் வீதிகளில் தேவையில்லாமல் செல்வதனை தவீர்க்குமாறும்,அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் இருந்தால் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்குமாறும்  இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதேவேளை தகவல் அறிந்த பொதுமக்கள் அச்சமடைந்து காணப்பட்டனர். வாழைச்சேனை சந்தைப் பகுதியில் முண்டியயடித்துக்கொண்டு பொருட்களை வாங்கினர்.