கம்பளையில் காணாமல் போகும் பஸ் நிலையம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கம்பளையில் காணாமல் போகும் பஸ் நிலையம்!


கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கம்பளை நகர சபை பிரதேசத்தில் காணப்படும் கம்பளை நுவரெலியா பிரதான பாதையில் பாலத்தின் அருகில் காணப்படும் பஸ்தரிப்பிடம்; நாளுக்கு நாள் காணாமல் போய் வருகின்றது. இதனால் பிரயாணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் இந்த இடத்தில் கம்பளை நகரசபை கடைத்தொகுதி ஒன்று அமைத்தது என பிரயாணிகள் தெரிவிப்பதுடன் ஆரம்ப காலங்களில் இந்த பிரச்சனை இருக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.

மேற்படி பஸ்தரிப்பிடத்தில் தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டது. நாளுக்கு நாள் அதன் பகுதிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த பஸ் தரிப்பிடத்தில் கொழும்பு கண்டி, குருநாகல், யாழ்ப்பானம் போன்ற இடங்களில் இருந்து கம்பளை, நாவலபிட்டிய, ஹட்டன், நுவரெலியா, பூண்டுலோயா, தலவாகல்ல, பண்டாரவளை, வெலிமட, பதுளை, கதிர்காமம் போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களும் கம்பளையில் இருந்து நுவரெலியா, பதுளை, பூண்டுலோயா, புஸ்ஸல்லாவ, புப்புரஸ்ஸ, தொலுவ ஊடாக கண்டி துனுக்கேஉல்ல, தொரகல கலத்த போன்ற பல இடங்களுக்கும் கிராம புறங்களுக்கும் செல்லும் சுமார் 300 க்கு மேற்பட்ட தனியார் மற்றும் அரச பஸ்கள் இங்கு நிறுத்தப்படுகின்றன.

இந்த பஸ்கள் வரும் வரைக்கும் காத்திருக்கும் பிரயாணிகளுக்கு இந்த இடத்தில் எவ்வித வசதியும் இல்லை. இவர்கள் தடுத்து இருப்பதற்கு ஆரம்ப காலங்களில் இருந்த இடமும் தற்போது கம்பளை நகர சபையின் கடை அமைப்பினால் இல்லாமல் போய் உள்ளது. இதனால் மழைக்காலங்களிலும் ஏனைய காலங்களிலும் இந்த பஸ் தரிப்பிடத்தை பாவித்து வரும் பொது பிரயாணிகளும் பாடசாலை மாணவர்களும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். அதனால்; முன்னர் இருந்தது போல் இந்த பஸ் தரிப்படத்தை சீர் செய்து தருமாறு பிரயாணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.