Breaking News


இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அண்மைய நடவடிக்கைகளினால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் அதிருப்தியுடன் உள்ளார் என்பதை தமிழ்பக்கம் மிக நம்பகரமாக அறிந்தது.

சுமந்திரன் தன்னிச்சையாக- தமக்கு தெரியாமல் செயற்பட்டு வருகிறார் என கட்சிக்குள் பிற முக்கியஸ்தரால் கடந்த பல வருடங்களாக குற்றம்சுமத்தப்பட்டு வந்தது. இந்த அடிப்படை முரண்பாடுதான் கூட்டமைப்பில் பல முறை உடைவு ஏற்பட காரணமாகியது.

இதே கருத்தையே தற்போது இரா.சம்பந்தனும் கொண்டிருக்கிறார். தனக்கு தெரியாமல் எம்.எ.சுமந்திரன் செயற்பட ஆரம்பித்துள்ளார் என இரா.சம்பந்தன் கருத ஆரம்பித்துள்ளார். இது தொடர்பில் கூட்டமைப்பு வட்டாரங்களிற்குள் அவர் பேசியுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் அதிருப்தியடைந்து, இரா.சம்பந்தன் பேசும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

அண்மையில் அரச தரப்பு தலைவர்கள் சிலருடன் எம்.ஏ.சுமந்திரன் பேசிய தகவல் இரா.சம்பந்தனிற்கு கிடைத்த பின்னர் இந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன், எம்.ஏ.சுமந்திரன் அண்மைக்காலத்தில் சில இரகசிய சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார். அது பற்றி இரா.சம்பந்தனும் அறிந்திருக்கவில்லையோ என்ற கேள்வியை, அவரது அதிருப்தி எழுப்புகிறது.

“அவரது நடவடிக்கைகள் இப்பொழுது பிழையாக போய்க்கொண்டிருக்கிறது போல படுகிறது. எனக்கும் தெரியாமல் சந்திப்புக்களை நடத்த ஆரம்பித்துள்ளார். அனைத்தையும் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் இதற்கு முடிவெடுப்பேன்“ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட கலந்துரையாடலொன்றில் இரா.சம்பந்தன் வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் மாற்றப்பட வேண்டும், செல்வம் அடைக்கலநாதன் பேச்சாளராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இரா.சம்பந்தன் எடுத்ததன் பின்னணியும் இதுதான் என தெரிகிறது.

இதேவேளை, வரலாற்றில் முதல்முறையாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் அனைவருமே ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உறவை கொண்ட சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது இரா.சம்பந்தனை உள்ளூர பீதியடைய வைத்திருக்கலாம்.

இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்த எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநதன், இரா.சாணக்கியன் ஆகியோர் அரச தரப்புடன் மிக நெருக்கமான உறவை கொண்டவர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இரா.சாணக்கியன் இதுவரை மஹிந்த முகாமில் இருந்தவர். அவர் நாடாளுமன்றத்திற்குள் கூட்டமைப்பு தரப்பினருடன் நேரத்தை கழிப்பதைவிட, பெரமுன தரப்பினருடனே நேரத்தை கழிப்பதாக ஏற்கனவே எம்.பிக்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர். பெரமுனவின் இளைய உறுப்பினர்கள் அனைவரும் சாணக்கியனின் நெருக்கமான நண்பர்கள்.

சாணக்கியன் எம்.பி இல்லாத சந்தர்ப்பத்தில், ராஜபக்ச குடும்பத்தில்- மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சவின் மிக நெருக்கமான நண்பர் வன்னி எம்.பி, சாள்ஸ் நிர்மலநாதன்தான். இருவருக்குள்ளும் “மச்சான்“ போட்டு பேசும் உறவுண்டு. அவ்வளவு நெருக்கம் இருவருக்குள்ளும்.

பிரபாகரன் போல கையை நீட்டுவது, பிரபாகரன் யாழ் இடப்பெயர்வில் உலகக்கிண்ணம் பார்த்தார் என அடித்து விடுவது என புலிகளின், இப்போதைய “வெர்சன்“ என சி.சிறிதரன் எம்.பி காண்பிக்க முயன்றாலும், தமிழ் தேசிய பரப்பில் உளவுத்துறை வட்டாரங்கள் அவருடன்தான் அதிகமான நெருக்கத்தை பேணுவதாக கூறப்படுவதுண்டு.

மேற்படி 3 பேரையும் போலல்லாமல், அரசியல் ரீதியான நெருக்கத்தை கடந்த அரசிலும், இப்போதைய அரசிலும் எம்.ஏ.சுமந்திரன் வலுப்படுத்தியுள்ளார். கடந்த ரணில் ஆட்சியை போலவே, தற்போதைய கோட்டா ஆட்சியும் அவரை விரும்புகிறது. கடந்த பொதுத்தேர்தலில் யாழில் எம்.ஏ.சுமந்திரன் வெற்றியடைவது அரசியல்ரீதியாக தமக்கு உபயோகமானது, அவர் வெற்றியடைய வேண்டுமென ராஜபக்ச நிர்வாகம் விரும்பியது.

இந்த பின்னணியில், அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவில், இரா.சம்பந்தன் எவ்வளவோ சொல்லியும் தமிழ் அரசு கட்சி தரப்பில் அதை கேட்காமல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இந்த பின்னணியிலேயே இரா.சம்பந்தனிடம் இந்த கருத்து ஏற்பட்டுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.