Breaking News


பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை பாதாள உலககுழு தலைவன் சுனில் காமினி அல்லது பொன்சேகாவை தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல பாதாள உலககுழு தலைவன் பொன்சேகா(52), இலங்கையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தியதாக தமிழக பொலிசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த பொன்சேகா, தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி, இந்திய குடிமகனுக்கான ஆவணங்களையும், போலி பாஸ்போர்ட்டையும் பெற்றுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனது அடையாளத்தை மாற்றி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

சென்னையில் கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆவடி, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருக்கிறார். இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த பொன்சேகா, பின்னர் பெங்களூருவில் தலைமறைவானார். இதனையடுத்து பொன்சேகாவை பெங்களூருவில் வைத்து தமிழக க்யூ பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இன்று பொன்சேகாவை தமிழக க்யூ பிரிவு போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் கிம்புல எல குணாவின் நெருங்கிய சகாவான இவர், விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்தவர் என இலங்கை புலனாய்வு பிரவுகள் சந்தேகித்தன. 1999ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா மீதான குண்டுவெடிப்பு தாக்குதலில் புலிகளிற்கு இவர் ஒத்துழைத்ததாக புலனாய்வுத்துறையினரால் தேடப்பட தொடங்கிய போது இந்தியாவிற்கு தப்பியோடினார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Note: Only a member of this blog may post a comment.