Breaking Newsதமிழ் தேசிய கட்சிகளிற்குள் பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தி , கட்டமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது . அடுத்த ஓரிரு தினங்களில் இந்த குழு நியமிக்கப்படும் . தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிற்கிடையில் இன்று ( 17 ) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இது குறித்து ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது . 

நினைவேந்தல் உரிமைக்காக ஓரணியில் திரண்ட தமிழ் கட்சிகள் , அதன் தொடர்ச்சியாக ஓரணியாக- ஒரே கட்டமைப்பிற்குள் இணைந்து செயற்படுவது குறித்து ஆராய இன்று யாழில் ஒன்றுகூடினர் . நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் காலை 11 மணிக்கு சந்திப்பு நடந்தது . இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா , சீ.வீ.கே.சிவஞானம் , எம்.எ.சுமந்திரன் , சி.சிறிதரன் , ஈ.சரவணபவன் , த.கலையரசன் ஆகியோரும் , ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) சார்பில் த.சித்தார்த்தன் , பா.கஜதீபன் , தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ ) சார்பில் விந்தன் கனகரட்ணம் , சபா குகதாஸ் ஆகியோரும் , தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் , தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன் , சிற்பரன் , தமிழ் தேசிய கட்சி சார்பில் என்.சிறிகாந்தா , எம்.கே.சிவாஜிலிங்கம் , தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் சார்பில் அனந்தி சசிதன் கலந்து கொண்டிருந்தார் . எனினும் , எம்.ஏ.சுமந்திரன் கூட்டத்தில் கலந்து கொண்டதை ஆட்சேபித்து வெளிநடப்பு செய்தார் . வடக்கு கிழக்கில் தீவிரமடைந்துள்ள காணி சுவீகரிப்பு விவகாரம் , தமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒரே கட்டமைப்பாக இயங்குவது குறித்து இன்று பிரதானமாக ஆராயப்பட்டதை தமிழ்பக்கம் அறிந்தது . 

முல்லைத்தீவில் , மட்டக்களப்பில் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு விவகாரம் ஆராயப்பட்டது . வடக்கு , கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்களிற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக குறிப்பிட்ட எம்.ஏ.சுமந்திரன் , இந்த பகுதிகளில் தமிழ் மக்களை சிறுபான்மையிராக்குவதற்காக அரசு திட்டமிட்டு காணி அபகரிப்பை மேற்கொள்வதாக குறிப்பிட்டார் . முல்லைத்தீவு காணி அபகரிப்பு விவகாரமாக அண்மை நாட்களில் வடக்கில் சில முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . அது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கினார் .

எல்லைக் கிராமங்களை காப்பாற்ற அங்கு மக்களை குடியேற்றலாமென ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது . ஆனால் , அதன் சாத்தியமின்மை பற்றி பலரும் சுட்டிக்காட்டினர் . கணிசமான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்துள்ள நிலையில் , நகரங்களில் குடியிருக்க விரும்பும் தமிழ் மக்கள் தூர இடங்களிற்கு செல்ல விரும்பாத நிலையில் , எல்லைக்கிராமங்களில்குடியேற்றம் சாத்தியமில்லையென சுட்டிக்காட்டப்பட்டது . அதுதவிர , அரசு தனது நிர்வாக இயந்திரங்கள் மூலம் அதை தடைசெய்யும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது . 

இதன்பின்னர் , அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் செயற்படுவது குறித்து ஆராயப்பட்டது . ஒரு பொதுவான கட்டமைப்பின் கீழ் அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டுமென மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்தார் . எனினும் , தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இவ்வளவு சிக்கல்களையும் வைத்துக் கொண்டு எப்படி ஓரணியில் வரப் போகிறீர்கள் என சுரேஷ் கேள்வியெழுப்பினார் . ஆனால் , அந்த பிரச்சனைகளை கடந்து தம்மால் ஓரணியில் செயற்பட முடியுமென மாவை தெரிவித்தார் .

எப்படி ஓரணியில் செயற்படுவதென ஆராயப்பட்டது . ஒரே கட்டமைப்பாக மாறும் முயற்சி வெற்றியடைக்கிறதோ , தோல்வியடைக்கிறதோ- அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் , ( செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் பக்கத்துடன் இணைந்திருங்கள் ) இப்போதைக்கு பிரச்சனைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது . இதேவேளை , ஒரே கட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படுவது எப்படி ?, அதற்கான முன்னேற்பாடுகள் என்ன ? என்பதை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட முடிவெடுக்கப்பட்டது . ஒவ்வொரு கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகளை நியமிக்க கோரப்பட்டது . 

எனினும் , எந்த கட்சியும் இன்று பிரதிநிதிகளை சிபாரிசு செய்யவில்லை . கட்சிக்குள் ஆலோசித்து விட்டு , பின்னர் ஒருவரின் பெயரை பிரேரிப்பதாக தெரிவித்தனர் .

 தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 2 , தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் 2 , தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் ஒருவர் என , ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது . எதிர்வரும் 1 ஆம் திகதி குழு மீண்டும் கூடவுள்ளது .

No comments

Note: Only a member of this blog may post a comment.