20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை விட்டு நீக்காதவரை அவர்களுடன் இணைந்து செயற்பட மாட்டோம்: எம்.ஏ.சுமந்திரன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை விட்டு நீக்காதவரை அவர்களுடன் இணைந்து செயற்பட மாட்டோம்: எம்.ஏ.சுமந்திரன்!


20வது திருத்தத்தில் முஸ்லிம் கட்சிகளின் இரண்டினதும் தலைவர்களும் சேர்ந்து தான் நாடகம் ஆடியிருக்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகம் எழுந்திருக்கிறது. தாங்கள் வாக்களிக்காமல், தமது கட்சிக்காரரைக் கொண்டு வாக்களித்து சட்டமூலத்தை நிறைவேற்ற உதவியிருக்கிறார்கள் என்கின்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது. ஆதரவாக வாக்களித்த முஸ்லீம் கட்சிகள் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, கட்சியில் இருந்தும் பாராளுமன்றத்தில் இருந்தும் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பார்களேயானால், நாங்கள் சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து, கொள்கைப் பயணத்திலே தொடர்ந்து பயணிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், பொம்மைவெளி, வசந்தபுரம் கிராமத்தில், அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு ஐம்பது மலசல கூடங்களை ஐந்து மில்லியண் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர்களின் கோள்விகளுக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் குழப்பகரமான நிலமை ஏற்பட்டிருக்கிறது. சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும், சிறிலங்கா மக்கள் காங்கிரசும் இதனை எதிர்ப்பதாக சொல்லியிருந்தார்கள்.

எங்களுடனும் பேசியிருந்தார்கள். இந்த ஜனநாயக விரோத தன்மை குறித்து அனைவருக்கும் தெரிந்த விடயம். குறிப்பாக முஸ்லீம் காங்கிரசின் தலைவர் தானாகவே முன் வந்து இந்த சட்ட மூலத்திற்கு எதிராக தானாகவே ஒரு மனு தாக்கல் செய்து, தனக்குத் தானே ஆஜராகி இதனை மும்முரமாக எதிர்த்தவர்.

18 வதிலே நாங்கள் செய்த பாவத்துக்கு பிராயச்சித்தமாகத்தான் தான் நாங்கள் 19வதுக்கு ஆதரவாக வாக்களித்தோம். தொடர்ந்தும் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு காரணமும் அது தான். நாங்கள் ஒரு சிறிய கட்சி. அதனால் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது. அதனால் நீதிமன்றம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டவர். அப்படிச் செய்து விட்டு, தன்னுடைய கட்சியில் இருந்த மீதி நாலு பேரும் வாக்களித்தது எப்படி என்று அவர் மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

ஏனென்றால் பாரிய சந்தேகம் எழுகிறது. இரண்டு கட்சித் தலைவர்களும் சேர்ந்து தான் நாடகம் ஆடியிருக்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகம் எழுந்திருக்கிறது. தாங்கள் வாக்களிக்காமல், தமது கட்சிக்காரரைக் கொண்டு வாக்களித்து சட்டமூலத்தை நிறைவேற்ற உதவியிருக்கிறார்கள் என்கின்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது.

சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக முஸ்லீம் கட்சிகளுடன் இணைந்து செயற்பட போதாக ஒரு பேச்சு இருந்தது, அது எவ்வாறு அமையும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது,

இந்ந திருத்தச் சட்டத்துக்கு எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது பற்றி முழுமையாக அறிய வேண்டும். ஏனென்றால் எமது முகத்துக்கு முன்னால் ஒன்றை சொல்லிக் கொண்டு, செயற்பாட்டிலே வித்தியாசமாக இயங்கியிருந்தால், சேர்ந்தியங்குவது, நம்பகத் தன்மை தொடர்பில் பாரிய பிரச்சினை உண்டு. நாங்கள் கொள்கை அடிப்படையில்த் தான் தீர்மானங்களை எடுக்கிறோம். கொள்கைக்கு அமைவாக சேர்ந்து வருபவர்களோடு நாங்கள் பயணிக்க எப்பவுமே தயார்.

அந்த வகையிலே திரு.மனோ கணேசன், திரு அரவிந்தகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்க்கத்தக்து. அந்த வகையில் அவர்களேடு சேர்ந்து பயணிக்கத் தயார்.

அது போன்று மற்றைய இரு கட்சிகளும் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, கட்சியிலேயும் பாராளுமன்றத்திலேயும் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பார்களேயானால், நாங்கள் அந்த கொள்கைப் பயணத்திலே தொடர்ந்து பிரயாணிக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.