20 ஆபத்தானதென்றால் 19 மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் - அங்கஜன் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

20 ஆபத்தானதென்றால் 19 மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் - அங்கஜன்


20ஆவது திருத்தச்சட்டம் ஆபத்தானதென தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்குபவர்கள் 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் என குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஒரு வருடத்தில் புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்நிலையில், ஏன் 20ஆவது திருத்தச்சட்டம் அவசரமாக நிறைவேற்றப்படுகிறது?. 19இல் அதிகாரம் இழுபறி நிலையில் இருந்தது.

17,19ஆவது திருத்தச்சட்டங்களில் நிறைவேற்று அதிகரத்தை குறைப்பதாகவே கொண்டுவரப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த சந்தர்ப்பத்திலேயெ இவை கொண்டுவரப்பட்டன. ஐ.தே.கவில் இருந்து ஜனாதிபதி ஒருவர் உருவாக முடியாது என்பதை அடிப்படையாக கொண்டே அவர்கள் இந்தத் திருத்தங்களை கொண்டுவந்தனர்.

அதேபோன்று 52 நாள் ஆட்சி இழுபறியில் நடந்தவற்றை நாம் பார்த்தோம். ஆனால் மீண்டும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவானார். சுயாதீன ஆணைக்குழுகள் பற்றி பேசுகின்றனர். உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு பொலிஸ் மா அதிபரை மாற்றமுடியாத நிலை உள்ளது. அவ்வாறெனின் இது எவ்வாறு மக்களுக்கான சட்டமாக இருக்க முடியும்.

20ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு ஆபத்து எனக் கூறுகின்றர். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு மற்றும் அதன் பின்னர் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம், தமிழ் மக்கள் பெற்றுக்கொண்டது என்ன?. இதுவொரு மாயையாகும்.

கடந்தகால பாடங்களை உண்ர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி அதிகாரத்தை குறைக்க மக்கள் ஆணை வழங்கினார்கள் எனக் கூறப்பட்டாலும் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவரப்படுவதற்கான ஆணையே 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கினர் என்றார்.