Breaking News


இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய பொதுச்செயலாளர் யார் என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுந்துள்ளது.

கட்சியின் பொதுக்குழுவிலேயே செயலாளர் தீர்மானிக்கப்படுவார், அதுவரை யாரும் அவசரப்படாதீர்கள் என கட்சி இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் தெரிவித்து வருகிறார்கள். எனினும், நவீன தமிழ் அரசு கட்சியின் பாரம்பரியத்தில் அப்படி ஜனநாயக முறைப்படியான தேர்வு எதுவும் இடம்பெறுவதில்லை. கட்சியின் ஒரு சிலர் எடுக்கும் முடிவை- நுட்பமாக ஜனநாயக முலாம் பூசி, மெருகேற்றும் பணியே இடம்பெறும். தற்போதுள்ள தமிழ் கட்சிகளில் மோசமான முறையில் ஜனநாயகம் துஷ்பிரயோகம் செய்யப்படுவது இலங்கை தமிழ் அரசு கட்சியிலேதான். தற்போது, மாவை கலகம் அதில் ஏதாவது நல்ல விளைவை காட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதனால், அடுத்த பொதுக்குழு எப்பொழுது கூடும், யாருடைய பெயரை முன்மொழிவார்கள் என்று காத்திருப்பதில் அர்த்தமில்லை. அதனால், தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்களிடம் செயலாளர் பதவி குறித்து பேசினோம். அப்போது கிடைத்த சில தகவல்களை தருகிறோம்.

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் மாவை- சுமந்திரன் அணி மோதல் தொடங்கியதும், சுமந்திரன் தரப்பின் முழுமையான வழிநடத்தலிலேயே செயலாளராக இருந்த துரைராசசிங்கம் இயங்கினார். சொந்த புத்தி இல்லாமல், யாராலும் இயக்கப்படுபவர்கள், இயக்கப்படுபவர்களின் தேவைக்கேற்ப கைவிடப்படுவார்கள். துரைராசசிங்கத்திற்கும் அதுதான் நடந்தது.

மாவை சேனாதிராசாவிற்கு எதிராக கொம்பு சீவிவிடப்பட்ட துரைராசசிங்கம், செயலாளர் பதவியை துறக்க மாட்டேன் என உறுதியாக இருந்தார். கடைசியாக நடந்த மத்தியகுழு கூட்டத்தில், செயலாளர் விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு செல்வோம் என்ற சாரப்பட எம்.ஏ.சுமந்திரன் திரும்பதிரும்ப கூறி வந்ததும் துரைராசசிங்கத்தை உசுப்பேற்றியிருந்தது.

துரைராசிங்கத்தின் செயலாளர் பதவிதான் இரண்டு தரப்பின் பலப்பரீட்சை களமாக இருந்தது. நீக்கியே தீருவோம் என மாவை தரப்பும், முடிந்தால் நீக்கிப் பாருங்கள் என சுமந்திரன் தரப்பும் கோதாவில் குதித்திருந்தனர்.

எனினும், கட்சி குழப்பத்தை சீர்செய்ய இரா.சம்பந்தன் எடுத்த முடிவையடுத்து, துரைராசசிங்கம் பதவிவிலகினார்.

மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் இரண்டு தரப்புடனும் இரா.சம்பந்தன் பேசியிருந்தார். கட்சி தலைமைக்கு தெரியாமல் தேசியப்பட்டியல் விவகாரத்தை கையாண்ட விதம் மிகப்பெரிய மோசடி. மாவையை சமரப்படுத்த, துரைராசசிங்கத்தை பதவிவிலக வைக்கும் திட்டத்தை இரா.சம்பந்தனே செயற்படுத்தினார்.

மாவை சேனாதிராசாவை சில தினங்களின் முன்னர் திருகோணமலைக்கு அழைத்து பேச்சு நடத்திய இரா.சம்பந்தன், மாவையை சாந்தப்படுத்த, துரைராசசிங்கத்தை மாற்றி புதிய செயலாளரை நியமிக்கலாம் என்ற திட்டத்தை தானே முன்வைத்துள்ளார். பின்னர் செயலாளர் பதவியை துறக்கும்படி துரைராசசிங்கத்திற்கும் அறிவித்தல் கொடுத்தார்.

இரா.சம்பந்தன்- மாவை பேச்சு நடந்த மறுநாள், துரைராசசிங்கம் பதவியை துறந்தார்.

இனி மாவை கோபம் அடங்கிவிடுவார் என இரா.சம்பந்தன் கருதுகிறார். தனக்கு எதிரான சதி முயற்சியின் பின்னணியை முழுமையாக அறிந்திருந்த மாவை, சதி சூத்திரதாரிகளுடன் தொடர்ந்து கோபமாக செயற்படுவாரா அல்லது அதில் கருவியாக பயன்படுத்தப்பட்ட துரைராசசிங்கத்தின் விலகலுடன் அமைதியாகி விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதேவேளை புதிய செயலாளர் கிழக்கை சேர்ந்தவராகவே இருப்பார். துரைராசசிங்கத்தை தவிர்த்தால் தற்போது, கட்சிக்குள் இரா.சம்பந்தனின் விருப்பத்திற்குரிய- தனது சொற்படி இயங்குவார்கள் என நம்பும் இருவரும் கிழக்கை சேர்ந்தவர்கள்தான். ஒருவர் மட்டக்களப்பு ஸ்ரீநேசன். மற்றவர் திருகோணமலை குகதாசன். இருவரிலும் இரா.சம்பந்தனிற்கு ஒரு கண் உள்ளதாக தகவல்.

அதிலும், குகதாசன் கடந்த பொதுத்தேர்தலில் இரா.சம்பந்தனுடன் கொஞ்சம் முரண்பட்டு விட்டார். தனது விருப்பு வாக்கை முன்னிலைப்படுததி செயற்படுகிறார் என சம்பந்தனிடமே பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதனால் ஸ்ரீநேசனிற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

அதேவேளை, கிழக்கிலுள்ள பெரும்பான்மையான பிரமுகர்களின் தெரிவாக பா.அரியநேத்திரன் உள்ளார். விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் இணைந்த பயணித்த- தமிழ் அரசு கட்சியிலுள்ள ஓரிருவரில் முதன்மையானவர், கட்சிக்கு நெருக்கடியேற்பட்ட போதும், மாவட்டத்தில் கட்சியை விழ விடாமல் பார்த்துக் கொண்டவர் என்ற பெயருள்ளவர். செயலாளர் தெரிவில் அவரது பெயரும் முன்மொழியப்படும்.

எனினும், செயலாளர் பதவியென்பது செயற்பாட்டு வரலாற்றிற்கல்லாமல் தலைமைக்கு நம்பிக்கையானவரிற்கே என்பதால், முடிவிற்கு பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments

Note: Only a member of this blog may post a comment.