Breaking News


விக்னேஸ்வரன் தமிழ் மொழியின் தொன்மையை சொல்லிக் கொண்டிருப்பது தமிழ் மக்களிற்கு எந்த நன்மையையும் கொடுக்காது. நாங்கள் இலங்கையை கைப்பற்றிய பண்டைய தமிழர்கள் அல்லவென்பதையே சிங்களவர்களிற்கு உணர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார் வடக்கு முன்னாள் ஆளுனரும், பெரமுன கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன்.

தனியார் வானொலியொன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் அனைவருக்கும் தமது கருத்தை சொல்ல உரிமையுள்ளது. நீங்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று சைவர்கள் அரக்கர்கள் எனலாம். அப்படியான ஜனநாயக கட்டமைப்பு நாடாளுமன்றத்தில் உள்ளது.

ஆனால், ஹன்சார்டில் எழுதப்பட்ட படியினாலே அது நீதியாகாது. அது உண்மையாகாது. தமிழ் மொழியின் தொன்மையை கூறியவர், அதை ஆக்கிரமிப்பு மொழியான ஆங்கிலத்திலேயே கூறினார்.

தமிழ் தொன்மையானது. உலகத்தின் பழமையான 10 மொழிகளில் தமிழும் ஒன்று. என்ன விடயமென்றால், தமிழ் மொழியின் பழையை சொல்லியே 21ஆம் நூற்றாண்டின் அரசியலை செய்ய முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். 50,000 வருடங்களின் முன் தமிழ் மொழி இருந்ததென்றால், அது தமிழுக்கு பெருமை. ஆனால் நாம் அங்கிருந்து 21ஆம் நூற்றாண்டிற்கு நாம் வர வேண்டும். அதுவும் இலங்கைக்கு வர வேண்டும். இலங்கையில் உள்ள அரசியலை பார்க்க வேண்டும்.

ஆகவே பழைமையின் உரிமையை சொல்வது இப்போதைய பேச்சுவார்த்தைக்கு சாதகமாக உள்ளதா, பாதகமாக உள்ளதா என்பதை பார்ப்பதே அவசியம். ஆனால், அதனால் தமிழ் மக்கள் மீது சிங்களவர்களிற்கு உள்ள வைராக்கியம் எப்படி அதிகரிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அமைதியாக இருக்கும் குளத்தில் கல்லெறிவது எனது விருப்பமாக இருக்கலாம். எறிந்த பின் என்ன நடக்கிறது என்பதை யோசிக்க வேண்டும்.

சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழ் அரசியல் என்னவென்பது, இரண்டு சனசமூகங்கள் தங்களுடைய உரிமையை பற்றி, பாரம்பரியத்தை பற்றி பேசுகிறார்கள். ஒருவரையொருவர் குற்றம்சாட்டாமல் இலங்கையென்ற அரசை கட்டியெழுப்புவது குறைவாகவே உள்ளது.

தற்போது தேவையானது சிங்களவர்கள் மத்தியில் ஆணித்தரமாக சொல்ல வேண்டியது- தமிழினம் ஒரு தேசிய இனம். நாட்டை பிரிக்காமல், சம அந்தஸ்துடன் வாழ விரும்பும் இனம் என்பதை. ஆகவே சமனான இனத்திற்கு கொடுக்கும் வாய்ப்பை கொடுப்பது சிங்களவர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்த தமிழர்கள் இடம்கொடுக்க மாட்டார்கள் என்பதை சிங்களவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

வரலாற்றின் அடிப்படையில் இலங்கை அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் ஏனைய அரசுகளை தென்னிந்தியாவிலிருந்து தமிழ் அரசர்கள் ஆக்கிரமித்தார்கள் என்றுதான் உள்ளது. இதுதான் வரலாறு. இந்திய வரலாறும் அதுதான். இங்கிருக்கும் தமிழர்கள் அங்கு படையெடுக்கவில்லை.

தேரவாத பௌத்தத்தில் கூறப்பட்டுள்ளது, தமிழர்கள் இந்த தேசத்தை ஆக்கிரமித்தார்கள். அநுராதபுர அரசை வீழ்த்தினார்கள். பொலன்னறுவை நாகரிகத்தை வீழ்த்தினார்கள். அந்த பயம் இன்னும் சிங்களவர்களிடம் ஆழமாக உள்ளது.

21ஆம் நூற்றாண்டில் வாழும் தமிழர்கள் ஆக்கிரமிக்கும் தமிழர்கள் அல்ல, அவர்கள் உங்களோடு சமமாக வாழ்ந்து, இந்த நாட்டை கட்டியெழுப்ப விரும்பும் இலங்கைக்குடிகள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு முரணான விடயங்களை செய்து கொண்டு, சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

சிங்களவர்கள் ஒன்றை உணர வேண்டும். தமிழர்கள் என்ற வரலாற்று பழைமையான இனம் இல்லாமல் இலங்கை ஜனநாயகமாக மாறாது.

ஜனாதிபதியோ, பிரதமரோ மகாநாயகர்களிற்கு சமமாக உட்கார முடியாது. விக்னேஸ்வரனை மகாநாயக்கர்கள் அவமதித்தார்கள் என்பது, சிங்கள கலாச்சாரத்தை அறிந்து கொண்டு அவர் அங்கு சென்றிருக்க வேண்டும். விக்னேஸ்வரனை தரையில் அமர வைக்கப்பட்டாரோ தெரியவில்லை. ஆனால், மகாநாயக்கர்களிற்கு சமமாக யாரும் உட்கார முடியாதென்பதே வரலாறு.

இலங்கையின் அரசியலும் ஆன்மிகமும் ஒன்று. அது புரியாமல் நடக்கிறோம் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.