Breaking News


உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு உலக மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள கூடியதாக அமைந்ததாகவும், அவை அனைத்திற்கும் அமரர் சந்திரசிறி கஜதீரவின் அரசியல் அறிவு மற்றும் நற்பண்பு என்பன காரணமாக அமைந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

யுத்தம் நிறைவடையும் காலத்தின்போது சந்திரசிறி கஜதீர சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார். இந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக சரணடைந்தனர். இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது. அவரது தலைமையில் 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டனர் என பிரதமர் கூறினார்.

மாத்தறை உயன்வத்த எச்.கே.தர்மதாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு பிரதமர், சந்திரசிறி கஜதீரவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்து கொள்ளும் போது எனக்கு இந்நாட்டின் அரசியல் வரலாறு நினைவிற்கு வருகிறது. இந்நாட்டின் இடதுசாரி அரசியலில் ஒரு முன்னோடி கதாபாத்திரமாக மாத்தறை எஸ்.ஏ.விக்ரமசிங்க விளங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் எஸ்.ஏ.விக்ரமசிங்க காணப்பட்டார். தெற்கு அரசியலுக்கு எஸ்.ஏ.விக்ரமசிங்கவிடமிருந்து கிடைத்த உத்வேகத்தை ஒருபோதும் மறக்க முடியாது. இன்று நாம் ஆண்டு நினைவு விழா அனுஷ்டிக்கும் சந்திரசிறி கஜதீர, முற்போக்கான அரசியல் தலைவரான விக்ரமசிங்கவின் வழியை பின்பற்றி செயற்படும் ஒருவர் என்று நான் கூற வேண்டும்.

இன்று அரசியல் புலமை பற்றி நம் நாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் பேசுகிறார்கள். இருப்பினும், சந்திரசிரி கஜதீர நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இருந்து இந்நாட்டின் புலமைவாய்ந்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். அதுமாத்திரமின்றி அவர் பண்புமிகுந்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்று நான் கூற வேண்டும். அரசியலில் புலமைத்துவம் மிகவும் முக்கியமானது. கல்வியறிவும் மிக முக்கியமானது. அதுபோன்று சிறந்த பண்பும் அவசியம் என்பதை நவீன தலைமுறையினருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். அரசியலுக்கு புலமை மற்றும் சிறந்த பண்பு அவசியம் என்பதை சந்திரசிறி கஜதீரவிடமிருந்து, இன்றைய அரசியல் உலகில் உள்ளவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சந்திரசிறி கஜதீர வித்யோதய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்போதுதான் அரசியல் செய்ய ஆரம்பித்தார். பல்கலைக்கழகத்தில் இலங்கை தேசிய மாணவர் சங்கத்தின் பிரதிநிதியாக அரசியலில் நுழைந்து பட்டம் பெற்றார். ஒரு ஆசிரியராக அரச சேவையில் இணைந்தார். 1988 ஆம் ஆண்டு மாத்தறை நகர சபை உறுப்பினராக பொது அரசியலைத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு அவர் முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 1994 அரசாங்கம் என்பது 17 ஆண்டுகளாக நீடித்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பிய அரசாங்கமாகும். எங்களுக்கு நினைவிருக்கின்றது அந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கு பாரிய தியாகத்தை எம்மை போன்றே இடதுசாரி இயக்கத்தின் கம்யூனிஸ்ட் கட்சியும், சமசமாஜ கட்சியும் செய்தது. சந்திரசிறி கஜதீர, தீவிர பயங்கரவாதத்தின் மத்தியில் தோட்டாக்களுக்கு மத்தியில் ஜனநாயகத்தை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மாத்தறை மாவட்ட பிரதிநிதி என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

சந்திரசிறி கஜதீர, புலமை, கல்வியறிவு மிகுந்தவர் என்றாலும், அதனை பிரசாரம் செய்துக் கொண்டிராது நாட்டிற்காக வேலை செய்தார். அதனால்தான் அவருடைய பெயர் எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருக்கிறது.

சந்திரசிறி கஜதீர, பதவியை பற்றி சிந்திக்கவில்லை. அவர் எப்போதும் அரசியல் பற்றியே சிந்தித்தார். அதற்கு எனக்கு ஒரு நல்ல உதாரணம் இருக்கிறது. கஜதீர 1994 ல் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதன் பின்னர் அவர் பிரதி அமைச்சரானார். 2001 உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது எமக்கு மாத்தறை நகர சபையில் வெற்றி பெறச் செய்வதற்கு சிறந்த பிரதிநிதியொருவர் தேவைப்பாட்டார். அதன்போது அவரை நகர மேயர் தேர்தலில் போட்டியிடுமாறு கோரினோம். அவர் வகித்த உறுப்பினர் பதவிகள், அமைச்சு பதவிகளைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. அவர் அரசியலுக்காக நகர சபை தேர்தலில் போட்டியிட்டு மேயர் பதவியை ஏற்றுக்கொண்டார். அமைச்சுப் பதவியில் இருந்த ஒருவர் அரசியலுக்காக இதுபோன்ற முடிவை எடுப்பது மிகவும் அரிது. அதனால்தான் கஜதீர தனது பதவியை விட அரசியலைப் பற்றி அதிகம் சிந்தித்தார் என்று நான் சொல்கிறேன். அதன்பிறகு அவர் மாத்தறையில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு வந்து மீண்டும் அமைச்சரவை அமைச்சராக பணியாற்றினார்.

சந்திரசிறி கஜதீர அமைச்சரவை அமைச்சராக இருந்தபோது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்தோம். சந்திரசிறி கஜதீர அந்த தேசிய அரசாங்கத்தின் உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சராக பணியாற்றினார். அவரது அமைச்சராக விளங்கியவர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வந்து எம்முடன் இணைந்திருந்த உறுப்பினரொருவர் ஆவார்.

அமைச்சர்களுக்கும் பிரதி அமைச்சர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு சிறிய பனிப்போர் காணப்படும். அமைச்சர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும், பிரதியமைச்சர் மற்றொரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் காணப்படின் அப்போர் மேலும் தீவிரமடையும். இருப்பினும், சந்திரசிறி கஜதீர ஒரு முதிர்ச்சி மிகுந்த மற்றும் அரசியல் ரீதியாக சிந்திக்கக்கூடியவர் என்ற நபராகவும் விளங்கியதால் தனது அமைச்சருடன் எந்த மோதலும் இல்லாமல் மிகச் சிறப்பாக பணியாற்றியது மட்டுமல்லாமல் அவரது அமைச்சரால் பாராட்டப்பட்டார். கஜதீரவின் உன்னத தன்மை காரணமாக அவ்வாறு செய்ய முடிந்தது.

அவர் யுத்தம் நிறைவடையும் காலத்தின்போது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக காணப்பட்டார். அவரிடம் 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவதற்காக சரணடைந்தனர். அது மிகவும் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டிய கடமையாக அமைந்தது. அவருடைய காலத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் கஜதீர அவர்களின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அதன் மூலம், மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு உலக மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள கூடியதாக அமைந்தது. அமரர் சந்திரசிறி கஜதீர அவர்களின் அரசியல் அறிவு மற்றும் நற்பண்பு என்பன காரணமாகவே அவை அனைத்தையும் மேற்கொள்ள முடியுமானதாக அமைந்தது என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க, நிபுண ரணவக்க, முன்னாள் அமைச்சர் டிவ் குணசேகர, மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே, சந்திரசிறி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.