பிரபாகரனை போல மக்கள் செல்வாக்கு பெற முடியவில்லையென்ற வெப்பியாரமே டக்ளஸின் விமர்சனம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

பிரபாகரனை போல மக்கள் செல்வாக்கு பெற முடியவில்லையென்ற வெப்பியாரமே டக்ளஸின் விமர்சனம்!


எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை நீத்த ஒரு தியாகிக்கு டக்ளஸ் போன்ற அரசின் அடிவருடிகள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களுக்காகப் போராடிய ஒரு அமைப்பினையும் அதன் தலைவரையும் அவதூறு கதைப்பதென்பது தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்றத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் விடுதலைப் புலிகள் தொடர்பிலும், திலீபன் தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரையும் அதன் போராளிகளையும் பற்றிக் கதைப்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு என்ன அருகதை இருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்காகப் போராடிய ஒரு அமைப்பினையும் அதன் தலைவரையும் அவதூறு கதைப்பதென்பது தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும்.

டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்க்கை வராலாறுகள் தற்போது மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படவில்லை. இவரை மக்கள் மறந்து விட்டார்கள், புலிகளை போல செல்வாக்கு பெற முடியவில்லை என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு கதைத்தாரோ தெரியவில்லை. அவ்வாறு அவர் நினைப்பாராயின் அது அவரின் வரலாற்றுத் தவறாகும். இனத்திற்கான துரோகிகளை மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள.

டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சொல்லப்பட்ட விடயங்கள் ஒரு சிங்களப் பாராளுமன்ற உறுப்பினரால் சொல்லப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் எம்மினத்தில் இருந்து வந்து எம்மினத்தை பெரும்பான்மைக்கு அடிபணிய வைக்கின்ற அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற டக்ளஸ் போன்ற புல்லுருவிகள் சொல்வதென்பது. அவருக்கு வாக்களித்த மக்களின் வாக்கினை கேள்விக்குட்படுத்துவனாக அமையும்.

இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள். போரினால் பாதிப்புற்ற எமது இனம் இவர்கள் காட்டிய அபிவிருத்தி மாயையை நம்பி ஏமாந்து சற்று அதிகப்படியான வாக்குகளை வழங்கி விட்டது. அதனை வைத்து வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைத்து விடலாம் என்று நினைக்கின்றார்கள் போல.

எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை நீத்த ஒரு தியாகிக்கு டக்ளஸ் போன்ற அரசின் அடிவருடிகள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்களும் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறானவர்களை தேர்ந்தெடுத்த எமது மக்கள் தான் இது குறித்து வருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.