Breaking News


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று (9) இடம்பெறும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், கொறடா பொறுப்புக்களில் மாற்றம் செய்வது அவசியம் என்ற கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வலுத்துள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்ற பதவிக்காலத்திலும் இந்த பொறுப்புக்களில் மாற்றம் செய்வது வழக்கம் என்ற அடிப்படையிலும், இம்முறை மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பு சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இம்முறை அது ரெலோவிற்கு செல்வதே இயற்கை நீதி.

அதுபோல, கொறடா பொறுப்பை கடந்த நாடாளுமன்ற பதவிக்காலத்தில் வகித்த சி.சிறிதரன், அதை கட்சிக்காக பயன்படுத்தியதை விட, தனக்காகவே அதிகம் பயன்படுத்தினார். மற்றவர்களிற்கு நாடாளுமன்ற பேச்சு அனுமதி இல்லாமல் போகும் விதமாகவும், தனக்கு நீண்டநேரம் கிடைக்கும் விதமாகவும் நூதனமாக செயற்பட்டு வந்தார்.

இந்த நிலையில், அவருக்கு பதிலாக நியாயமாக செயற்படும் ஒருவரை நியமிக்கலாமென இரா.சம்பந்தனும் பச்சைக்கொடி காண்பித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற பதவிக்காலத்தில் பேச்சாளர், கொறடா பொறுப்புக்கள் தமிழ் அரசு கட்சி பெற்றிருந்ததால், இம்முறை அவற்றை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது.

தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களில் நீண்டகால போராட்ட வரலாற்றை சித்தார்த்தனே கொண்டிருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பதவிநிலைகளில் புளொட்டிற்கு இதுவரை முக்கிய பொறுப்பெதுவும் வழங்கப்பட்டிருக்காத நிலையில், கொறாடா பொறுப்பு புளொட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது.

எனினும், இன்றைய கூட்டத்தில் புளொட் தரப்பில் த.சித்தார்த்தன் கலந்து கொள்ள மாட்டார். ரெலோ தரப்பில் நாளை 3 எம்.பிக்களும் கலந்து கொள்கிறார்கள்.

தமது கட்சிக்கு பேச்சாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென்பதில் ரெலோ இன்று மிக இறுக்கமாக நிற்கும் என தெரிகிறது. எனினும், பேச்சாளர் மற்றும் கொறடா பொறுப்பை தக்க வைப்பதில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் தரப்பு பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்காக கட்சி எம்.பிக்களிடம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

மன்னார் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதனுடனும் இது பற்றிய பேச்சை, சிறிதரன் தரப்பு முன்னெடுத்து வருவதாக தெரிகிறது.

இதனால், நாளைய கூட்டம் சூடாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஒருவேளை, தமிழ் அரசு கட்சி எம்.பிக்களை சுமந்திரன்- சிறிதரன் தரப்பு வளைத்துப் போட்டு, பேச்சாளரை தீர்மானிக்க வாக்கெடுப்பிற்கு செல்வோம் என குழப்பத்தில் ஈடுபட முயன்றால், இன்று ரெலோ கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யுமென தெரிய வருகிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.