தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தமிழ் கட்சிகள் கூட்டாக வலியுறுத்த, தம்மை தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளாக பிரகடனப்படுத்திய கட்சிகள் ஒன்றுகூடியுள்ளன.
அஞ்சலி உரிமையை வலியுறுத்தி, தமிழ் கட்சிகள் இன்று ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அனுப்பவுள்ளன.
எனினும், இந்த விவகாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து கொள்ளவில்லை. தியாக தீபம் திலீபனிற்கு அஞ்சலிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்த்த மற்றைய கட்சிகள் கையெழுத்திட்ட ஆவணம் அனுப்பப்படவுள்ளது.
முன்னணியின் தலைவர்கள் கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரை சந்திப்பிற்கு அழைப்பதற்கு மாவை சேனாதிராசா கடந்த பல நாட்களாக முயன்று வருகிறார். தனது தனிப்பட்ட கையடக்க தொலைபேசியிலிருந்து கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் பல முறை அழைப்பேற்படுத்த முயன்று வருகிறார். எனினும், இரண்டு கஜாக்களும் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, இரண்டு நாட்களின் முன்னர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், முன்னணிக்கான அழைப்பு கடிதத்தை எடுத்துச் சென்று, கஜேந்திரனிடம் நேரில் ஒப்படைத்து, சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
நேற்றும், சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோது, கூட்ட தீர்மானங்களை கலந்துரையாட, மண்டபத்திலிருந்தபடியே இருவரையும் தொடர்பு கொள்ள மாவை சேனாதிராசா முயன்றார். ஆனால் பலனில்லை.
இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞரணியினால் முன்னணி தலைவர்களிற்கு குறுந்தகவல் அனுப்பி, தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் பதிலில்லை.
இதேவேளை, நேற்றைய கலந்துரையாடலின் போது, அஞ்சலி தடைக்க எதிராக சர்வதேச சமூகத்திடம் முறையிடுவது பற்றி கலந்துரையாடப்பட்டது. அப்போது, கருத்து தெரிவித்த ஒரு பிரதிநிதி-
“இதை நாம் சர்வதேச சமூகத்திடம் முறையிடலாம். ஒருவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலோ அல்லது வேறு அரங்கத்திலோ இந்த விவகாரம் எழுப்பப்பட்டால், முன்னணியின் நிலைப்பாட்டை காரணம் காட்டி கோட்டா அரசு தப்பிக்கலாம். அதி தீவிர தமிழ் தேசிய நிலைப்பாடுடையதாக தம்மைத்தாமே சொல்லிக்கொள்ளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியே, திலீபன் நினைவேந்தல் தடையை ஆதரித்து, மற்றைய கட்சிகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. அந்த கட்சிக்கும் 2 எம்.பிக்கள் உள்ளனர். ஆகவே, நினைவேந்தல் விவகாரத்தில் தடையை விலக்கிக் கொள்வது அனைத்து தமிழர்களின் நிலைப்பாடு அல்ல என கூறி தப்பிக்க வாய்ப்புள்ளது. அதற்கு இடமளிக்க வேண்டாம். கோட்டாவின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டாமென அவர்களை கூட்டாக வலியுறுத்துவோம்“ என்றார்
No comments
Note: Only a member of this blog may post a comment.