Breaking News


எதிர்காலத்தில் மாகாணசபை அமைச்சு, மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், போன்ற பதவிகளை எதிர்பார்த்திருக்கின்ற சிலர் சுமந்திரனைத் தீவிரமாக ஆதரிக்கின்றோம் என்ற போர்வையில் அவரது கருத்தோடு ஒத்துப் போகாத அனைவரையும் படு மோசமாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக கட்சியின் ஒழுக்காற்றுக் குழு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இலங்கை தமிழ் அரசுகட்சியின் வாலிபர் முன்னணியின் முக்கியஸ்தர் கருணாகரன் குணாளன்.

அண்மையில் குணாளன் மீது, எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்திருந்த குற்றச்சாட்டுக்களிற்கு பதிலாக அனுப்பி வைத்துள்ள விளக்க கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த கடிதம் வருமாறு-

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவரும், ஒழுக்காற்று நடவடிக்கைக் குழுத் தலைவரும், வடக்கு மாகாணசபை அவைத்தலைவருமாகிய திரு. சி.வி.கே. சிவஞானம் அவர்களுக்கு,

29.08.2020 அன்று வவுனியாவில் நடைபெற்ற எமது கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கருணாகரன் குணாளன் ஆகிய என்னை எந்தவித விசாரணையுமின்றி உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக்கட்சி உறுப்பினர் திரு. ஆபிரஹாம் சுமந்திரன் பகிரங்கமாகக் கோரிக்கைவிடுத்தமை தொடர்பாகவும், அங்கு அது தொடர்பான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தமை தொடர்பாகவும்;

திரு. ஆ.சுமந்திரனுக்கும் எனக்கும் இதுவரை எந்தவிதமான கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளோ அல்லது தனிப்பட்ட பிரச்சினைகளோ ஏற்பட்டிருக்கவில்லை. 2015 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா பகிரங்கமாக ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். மேற்படித் தேர்தலில் சுமந்திரனுடைய வெற்றி மிக அவசியம் என்றும் தீர்வுத்திட்டப் பணிகளை முன்னெடுப்பதற்காக அவரை வெற்றி பெறச்செய்ய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டுமென்று கேட்டிருந்தார். அதனை சிரமேற்கொண்டு பணியாற்றியவர்களில் நானும் ஒருவன். விருப்பு வாக்குத்தெரிவில் மூன்று வேட்பாளர்களில் ஒருவராக அவரையும் மக்கள் முன் கொண்டு சென்றிருந்தோம்.

விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலைகளை முன்னெடுத்தார்கள், காணாமல் போனோர் தொடர்பாக விடுதலைப்புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் போன்ற கருத்துக்களை 2014 காலத்திலேயே திரு. ஆபிரஹாம் சுமந்திரன் முன்வைத்திருந்த போதிலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்காக எமது கட்சியின் சார்பில் ஆபிரஹாம் சுமந்திரன் பிரதானமானவராக அடையாளப்படுத்தப்பட்டிருந்தபடியால் அவர் தொடர்பான விமர்சனங்களை 2018 வரை நான் முன்வைத்திருக்கவில்லை. 2018 உள்ளூராட்சித் தேர்தலில் கட்சித் தலைமையின் முடிவுகளை மீறி பல்வேறு தவறான செயற்பாடுகளை சுமந்திரன் மேற்கொண்டிருந்தார்.

தனது உதவியாளராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற திரு.கே.சயந்தன் என்பவரை முன்னிலைப்படுத்துவதற்காக தென்மராட்சி பிராந்தியத்தில் செல்வாக்கு மிகுந்தவராக விளங்கிய கட்சியின் தொகுதிக்கிளைத் தலைவர் திரு.க.அருந்தவபாலனை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார்.

தமிழ் அரசியல்வாதிகளை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக கொலை செய்து வந்தனர். இக்கொலை முயற்சியிலிருந்து தப்புவதற்காகவே தமிழ் அரசியல் தலைவர்கள் விடுதலைப்புலிகளுடன் ‘டீல்’ மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்ததாக பகிரங்க மேடையொன்றில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் என்பவர் உரையாற்றியிருந்தார். மேற்படி ‘டீல்’ உரை, உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் அரசியல் கட்சியின் கோட்டையாக விளங்கிய சாவகச்சேரித் தொகுதியில், சாவகச்சேரி நகரசபையை நாம் சைக்கிள் கட்சியிடம் இழந்தோம். திரு.சயந்தன் வாழ்ந்து வருகின்ற தேர்தல் வட்டாரத் தொகுதியிலே நாங்கள் படுதோல்வி அடைந்துள்ளோம். ஆனாலும் சயந்தன் மீது கட்சி எந்த ஒழுக்காற்று நடவடிக்கையையும் இதுவரை எடுத்திருக்கவில்லை.

அதன் பின்னரும் கூட அவர் தனது முகநூலில் விடுதலைப்புலிகளை மறைமுகமாக கொச்சைப்படுத்தி வந்தார். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களையும் கொச்சைப்படுத்தி வந்தார். சொந்த வட்டாரத்தில் கட்சியை வெல்ல வைக்க முடியாதவரே இன்று சாவகச்சேரி தொகுதிக்கிளைத் தலைவர் என்னும் பதவியைக் குறுக்கு வழியில் பிடித்து வைத்துள்ளார்.

இவரது நெருங்கிய நண்பரே திரு.நடராசா திலீபன் என்பவர் ஆவார். மேற்படி திலீபன் என்பவர் தொடர்ச்சியாக இலங்கை தமிழ் அரசுக்கட்சித் தலைவர் மாவை. சேனாதிராசா, அவரது மகன் கலையமுதன், சி.வி.கே.சிவஞானம், ஈஸ்வரபாதம் சரவணபவன், கே.வி.தவராசா, இ.ஆனோல்ட், யோகேஸ்வரன், ஸ்ரீநேசன், அரியநேத்திரன், கோடீஸ்வரன், சிவமோகன், கருணாகரன் குணாளன், விமலேஸ்வரி, மிதிலைச்செல்வி உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்களையும் செல்வம் அடைக்கலநாதன், தருமலிங்கம் சித்தார்த்தன் போன்ற கூட்டமைப்பு பங்காளிக்கட்சித் தலைவர்களையும் கொச்சைப்படுத்தி வருகிறார்.

அது தொடர்பான ஆதாரங்களையும் நான் சமர்ப்பிக்கின்றேன்.

சுமந்திரன், சயந்தன் போன்றோர் நடராசா திலீபன் என்பவர் கட்சி உறுப்பினர் அல்லாத போதிலும் கட்சி சார்ந்த பல செயற்பாடுகளில் அவருக்கு முன்னுரிமை வழங்கியிருந்தனர். அது தொடர்பான ஆதாரங்களை அவரது முகநூலிலும், பல இணையத்தளங்களிலும் பார்க்க முடியும். இவர்கள் பல்வேறு போலி முகநூல் கணக்குகளை ஆரம்பித்து கட்சி உறுப்பினர்களை வசைபாடி வருகின்றனர்.

2018இல் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற உள்ளூராட்சித்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த ஆதரவாளர்களையே சுமந்திரனின் பாதுகாப்புப் பிரிவினர் (விசேட அதிரடிப்படையினர்) ஆடைகளைக் களைந்து சோதனைக்குட்படுத்தியிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் முதற் பக்கத்தில் வெளியாகி எமது வாக்கு வங்கிக்கு பாரிய சரிவை ஏற்படுத்தியிருந்தது.

வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் சுமந்திரனே பிரதான பாத்திரத்தினை வகிக்கின்றார் என்கிற ஒரு மாயை வெளி உலகத்தில் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் மாகாணசபை அமைச்சு, மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், போன்ற பதவிகளை எதிர்பார்த்திருக்கின்ற சிலர் சுமந்திரனைத் தீவிரமாக ஆதரிக்கின்றோம் என்ற போர்வையில் அவரது கருத்தோடு ஒத்துப் போகாத அனைவரையும் படு மோசமாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக கட்சியின் ஒழுக்காற்றுக் குழு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தன்னைவிட தகுதியான ஒருவர் தமிழ் அரசுக் கட்சிக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதில் சுமந்திரன் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருகின்றார். 2017இல் தமிழ் அரசுக்கட்சியின் சட்டத்துறைச் செயலாளராக கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலான குழுவினரே ஜெனிவாவுக்கு செல்ல வேண்டுமென்று கட்சி முடிவெடுத்திருந்த நிலையில் தான்தோன்றித்தனமாக தன்னிச்சையாக செயற்பட்ட சுமந்திரன் தன்னோடு சேர்த்து நிரான் அங்கற்றல், சுரேன் பெர்னான்டோ போன்ற சிங்கள சட்டத்தரணிகளை எமது பிரச்சினைகளைக் கையாளுவதற்காக ஜெனிவாவுக்கு அழைத்து சென்றார்.

அங்கு இந்த அணியோடு நிமல்கா பெர்ணான்டோ, நளினி ரட்ணராஜா, அம்பிகா சற்குணநாதன் போன்ற அரச ஆதரவுத்தரப்பினரும் இணைந்து இலங்கை அரசுக்கு சாதகமான முடிவுகளை எடுத்திருந்தனர். சுமந்திரனின் கனிஷ்ட சட்டத்தரணியான நிரான் அங்கற்றல் என்பவரே ஐந்து தமிழ் மாணவர் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னகொடவுக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகியவர். இத்தகைய சட்டத்தரணியான நிரான் அங்கற்றல் என்பவர் எவ்வாறு தமிழர்கள் மீது அக்கறைகொண்டவராக இருக்கமுடியும்? மேற்படி நிரான் அங்கற்றலை தமிழ் அரசுக்கட்சியின் சட்டத்துறை குழுவிலும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளடக்கியிருந்தார் சுமந்திரன். அதே போன்று சட்டத்தரணி சுரேன் பெர்னான்டோ நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேஹாஜ (ஐக்கிய மக்கள் சக்தி) கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளராக பெயரிடப்பட்டவர்.

2010இல் நாடாளுமன்றத் தேர்தலில் ஹிஸ்புல்லாவினால் மட்டக்களப்பில் களமிறக்கப்பட்ட சுயேட்சைக் குழுவில் ஐந்து முஸ்லீம்களோடு ஒரு வேட்பாளராகப் போட்டியிட்டவரே நளினி ரட்ணராஜா. மேற்படி சுயேட்சைக் குழு 40 வாக்குகளையே பெற்றிருந்தது. மேற்படித் தேர்தல் காலம் முதல் 2018 வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை படுகேவலமாக விமர்சித்து வந்தவரே நளினி என்பவர் ஆவார். அத்தோடு இன்று வரை புலிநீக்க அரசியலையே முன்னெடுத்து வருகிறார். அதே போன்று மைத்திரி-ரணில் அரசில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஐந்து ஆணையாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்த செல்வி அம்பிகா சற்குணநாதன் ஜெனிவாவில் தமிழினப்படுகொலை தொடர்பாக உள்ளக விசாரணை பொறிமுறையை வலியுறுத்தியவர். சர்வதேச விசாரைணப் பொறிமுறை விசாரணையே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியவாதிகளின் கொள்கையாகும்.

மேற்குறிப்பிட்டவர்கள் எல்லோரும் சுமந்திரனுடன் இணைந்து நீலன் திருச்செல்வம் ஞாபகார்த்த அறக்கட்டளையில் பணிபுரிபவர்கள் ஆவர். தமிழ்த் தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பின் மத்தியில் இவர்களை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்குவதற்கு மிகத்தீவிரமான முயற்சிகளை எடுத்திருந்தார் சுமந்திரன். அம்முயற்சிகள் வெற்றியளிக்காத நிலையில் தேசிய பட்டியல் வேட்பாளர் பட்டியலில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் பெயர் முதலிடத்தில் இருந்த நிலையிலும் அதனைப் பின்தள்ளி அம்பிகா சற்குணநாதனின் பெயரை முதலிடத்தில் பதிவு செய்திருந்தார். இச்செயற்பாடு கட்சியினர் மத்தியில் பாரிய குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக நானும் பல விமர்சனங்களை முகநூலுடாக முன்வைத்திருந்தேன். பல தொலைக்காட்சி சேவைகள் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு என்னை அழைத்திருந்த போதிலும் நான் மறுத்திருந்தேன் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் பின்னர் சுமந்திரனுடைய ஆதரவாளர்களாகக் கருதப்படுகின்ற சில முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரல்லாதவர்கள், சில புலம்பெயர்ந்தவர்கள், ஊடகவியலாளர் என்று சொல்லிக் கொள்கின்ற டீ.பி.எஸ்.ஜெயராஜ், புருசோத்தமன் தங்கமயில் போன்றோர் என்மீது தனிப்பட்ட ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் வதந்திகளை உருவாக்கி தங்களுடைய இணையத்தளங்கள், முகநூல்கள், போலி முகநூல் கணக்குகள், பேஸ்புக் மெசெஞ்சர், வைபர், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களூடாகவும் தரக்குறைவான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தனர். அதே போன்று நான் மேற்படித் தேர்தலில் நேரடியாக ஆதரவு தெரிவித்திருந்த மாவை. சேனாதிராசா, சரவணபவன், ஆனோல்ட் போன்றவர்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தொடர்பாகவும் தவறான பிரச்சாரங்களையும், விமர்சனங்களையும் முன்னெடுத்திருந்தினர். இதன் காரணமாகவே நானும் என்னிலை சார்ந்து சில தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது என்பதனை கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை குழுவிற்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கனம்
உண்மையுள்ள

கருணாகரன் குணாளன்

No comments

Note: Only a member of this blog may post a comment.