Breaking News
இலங்கைக்கு கிழக்கே 38 கடல் மைல்கள் தொலைவில் தீப்பிடித்த, பெரும் எண்ணெய் தாங்கி கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, இந்திய கடற்படை, இந்திய கடலோர பாதுகாப்புப்படை ஆகியன தற்போது இணைந்து செயற்பட்டு வருகின்றன.

நேற்று (செப்.3) வியாழக்கிழமை காலை 8 மணியளவில் அம்பாறை, சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த, எம்டி நியூ டயமண்ட் (MT New Diamond) கப்பலின் பிரதான இயந்திர அறையில் கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து அதில் தீ பரவியிருந்தது.

அந்த எண்ணெய்க் கப்பலில் இருந்த 23 பணியாளர்களில் 22 பேரை இலங்கை கடற்படை மீட்டுள்ளதோடு, கப்பல் குழுவினரின் ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், கப்பலின் கொதிகலன் வெடிப்பைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இலங்கை விமானப்படையின் MI17 ரக ஹெலிகொப்டர் நேற்று (03) மாலை வரை கப்பலில் நீரை விசிறுவது உள்ளிட்ட பல்வேறு வான்வழி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அத்துடன் விமானப்படையின் கடல் கண்காணிப்பு விமானமொன்று (beach craft), அவ்வப்போது விமான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. இந்திய கடலோர பாதுகாப்புப்படையின் டோர்னியர் விமானமும் (Dornier aircraft) வான் வழியாக நிலமையை கண்காணித்து வருகின்றது.

இதேவேளை, இந்த பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கையில் இலங்கை கடற்படைக் கப்பல்களான சயுரா, சிண்டுரலா, ரணரிசி (Sayura, Sindurala, Ranarisi) ஆகியவற்றுடன் இரண்டு துரித தாக்குதல் படகுகள் (Fast Attack Craft) பயன்படுத்தப்பட்டு வருவதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
நேற்று (03) மாலையளவில், குறித்த எண்ணெய் கப்பல் இடருக்கு உள்ளான பகுதிக்கு வந்த இந்திய கடலோர பாதுகாப்புப்படை கப்பல் ஷஉர்யா ‘Shaurya’, இலங்கை கடற்படைக் கப்பலான சிண்டுரலாவுடன் இணைந்து, தீப்பிடித்த கப்பலின் இருபுறமும் இருந்து குளிரூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இன்று (04) அதிகாலை முறையே ஒரு மணி மற்றும் அதிகாலை 3 மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வந்த ‘ராவணா’ மற்றும் ‘வசம்ப’ (Rawana’, ‘Wasamba) ஆகிய இரு இழுவைக் கப்பல்கள் மூலம் இந்த பணிகள் மேலும் மும்முரமாக்கப்பட்டது.

சுமார் 2 மணிநேரத்தின் பின்னர் விபத்திற்குள்ளான குறித்த வெளிநாட்டு கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஏ.எல்.பி ‘விங்கர்’ (ALP ‘Winger’) இந்த பணியில் இணைந்தது.
இது தவிர, இந்திய கடற்படை கப்பல் (INS) ‘சஹ்யாத்ரி’ (Sahyadri) இன்று அதிகாலை 2 மணியளவில் மீட்பு நடவடிக்கையில் இணைந்தன.

இதேவேளை, மேலும் இரண்டு இந்திய கடலோர பாதுகாப்புப்படை கப்பல்கள் இன்றையதினம் (04) பிற்பகலில் இந்நடவடிக்கையில் இணைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்நடவடிக்கையில் நேற்று (03) இணைந்த இரண்டு ரஷ்ய கப்பல்களும், தேவையான உதவிகளை வழங்கிய பின்னர் மாலையளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், எம்வி ஹெலன் எம் (MV Helen M) கப்பலினால் ஆரம்பத்தில் மீட்கப்பட்ட 19 பேர் உட்பட குறித்த எண்ணெய் கப்பலில் இருந்த கப்பல் பணியாளர்கள் 21 பேர் இலங்கை கடற்படை கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதோடு, உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இதில் காயங்களுக்குள்ளான கப்பலின் மூன்றாவது பொறியியல் அதிகாரி கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு எவ்வித உயிராபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எண்ணெய்க் கப்பலில் இருந்த 23 பணியாளர்களில் 22 பேரை இலங்கை கடற்படை மீட்டுள்ளதோடு, கப்பல் குழுவினரின் ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், கப்பலின் கொதிகலன் வெடிப்பைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக, தற்போதுவரை சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் தொன் கச்சா எண்ணய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கிற்கு தீ பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலிலிருந்து கடலில் எண்ணெய் கசியும் அபாயம் இன்னும் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த பேரழிவு காரணமாக எதிர்காலத்தில் எண்ணெய் கசிவு ஏற்படக்கூடிய அபாயத்தைத் தணிக்கவும் அதனை நிர்வகிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை கடற்படை, இலங்கை கடலோர பாதுகாப்புப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட ஏனைய பங்காளர்களும் தயாராக உள்ளதாக, கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் இலங்கை கரையிலிருந்து சுமார் 25 கடல் மைல் (அண்ணளவாக 50 கி.மீ) தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 3,100 மீற்றர் ஆழத்தில் குறித்த தீப்பிடித்த எண்ணெய் கப்பல் இழுத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

மேலும், இலங்கை கடற்படையின் 03 பிரதான கப்பல்கள், 02 இரண்டு துரித தாக்குதல் படகுகள் (Fast Attack Craft), இந்திய கடலோர பாதுகாப்புப்படையின் கப்பலொன்று, இந்திய கடற்படைக் கப்பல் மற்றும் 03 இழுவைக் கப்பல்கள் ஆகியன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குறித்த கப்பலுக்கு அருகில் உள்ளதாக, கடற்படை அறிவித்துள்ளது.
அத்துடன், இன்று அதிகாலை 5.30 மணி முதல் வான் வழியாக தீயணைக்கும் பணி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

கப்பலின் பின்புறத்தில் உள்ள சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த பகுதி இன்னும் தீப்பிடித்தவாறு காணப்படுவதாகவும், அது கப்பலின் கச்சா சேமிப்பு பகுதியை இதுவரை பாதிக்கவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் கட்டமைப்பை ஆய்வு செய்த பின்னர், கப்பலின் கிரேக்க கப்டனின் ஆலோசனையுடன் கடல் தீயணைப்பு நிபுணத்துவம் வாய்ந்த கடற்படை குழுக்களால் தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
No comments

Note: Only a member of this blog may post a comment.