Breaking News


நாங்கள் நாடாளுமன்றத்திற்கு போய் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்போம் என ஒரு போதும் சொன்னதில்லை. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையிருப்பதாகவும் சொன்னதில்லை. ஆனால் துரதிஸ்டவசமாக- அது நல்லதோ, இல்லையோ- மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கருத்தை சர்வதேச பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த அரசு, நாடாளுமன்றம் எதையும் கருத்திலெடுக்காது. மக்கள் பிரதிநிதிகளின் கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பதாக சர்வதேச சமூகம் கூறி வருகிறது. அதனடிப்படையிலேயே எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அமையும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன்.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியபோது, கூட்டாக சேர்ந்து போட்டியிடுவதென்ற எந்த திட்டமும் எம்மிடமிருக்கவில்லை. கூட்டமைப்பு பிழை என கூறி வெளியேறினால், மக்களிற்கு மாற்று தெரிவு என்ன என்ற கேள்வியெழுகிறது. ஒரு பக்கம் கூட்டமைப்பு. மறுபக்கம் ஈ.பி.டி.பி போன்ற ஆயுத இயக்கங்கள். அதனால் மக்களிற்கு மாற்றுத் தெரிவை வழங்க தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தோம்.

நாங்கள் கூட்டமைப்பில் 2004 இல் போட்டியிட்டபோது அகில இலங்கை தமிழ் காங்கிரஸாக போட்டியிடவில்லை. தமிழ் காங்கிரசிலிருந்து கஜேந்திரகுமார் போட்டியிட்டார். நான் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் பொதுஅமைப்புக்கள் சார்பிலேயே களமிறங்கியிருந்தோம்.

கூட்டமைப்பிலிருந்த வெளியேறிய பின்னரும் அதே அடிப்படையிலேயே செயற்பட  முடிவெடுத்தோம்.

ஆரம்பத்தில் கலாநிதி கெனடியினால் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியென்ற பெயரில் சிபாரிசு செய்யப்பட்ட அமைப்பின் பெயரில் போட்டியிட தீர்மானித்தோம்.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஒரு அரசியல் இயக்கமாக இருக்க வேண்டும். ஒரு மக்கள் இயக்கமாக செயற்ட தீர்மானித்தோம். 2009 வரை புலிகள் உறுதியான கொள்கைளை முன்னெடுத்ததால், அவர்களை சிதைக்க பல முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது முடியாமல் போகவே, இனஅழிப்பின் மூலம் அந்த இயக்கம் அழிக்கப்பட்டது.

பேச்சு மேசையில் புலிகள் வலியுறுத்தி வந்த கொள்கையை நாங்கள் ஜனநாயக அடிப்படையில் முன்கொண்டு செல்லும்போது, ஒரு மக்கள் இயக்கமாக பயணிப்பதுதான் எங்களிற்கு பாதுகாப்பானதாக இருக்கும். அந்த அடிப்படையில் மக்கள் இயக்கமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

எமது அமைப்பை சிதைக்க ஆரம்பத்திலிருந்தே பல முயற்சிகள் நடந்தது. இலங்கை அரசு, இந்திய மேற்குலக இராஜதந்திர தரப்புக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆட்களை பிரிப்பது, குழப்பம், பிளவு, நம்பிக்கையீனம், சோர்வு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அதைத்தாண்டித்தான் பயணிக்கிறோம்.

கட்சி பதிவு செய்யப்படுகிறதா இல்லையா என்பதல்ல முக்கியம். மக்களின் இலட்சம் முன்கொண்டு செல்லப்பட வேண்டும். மக்களிற்கு நேர்மையாக செயற்பட வேண்டும். இது மட்டுமே இன்று தேவையான விடயம்.

அனுபவத்திலிருந்துதான் அந்த முடிவிற்கு வருகிறோம். தமிழ் அரசு கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சி. தமிழர் விடுதலை கூட்டணி பதிவு செய்யப்பட்ட கட்சி. அவர்கள் மக்களின் அபிலாசைக்கு எதிராக செயற்பட்டதால்தான் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆகவே பதிவை முன்னிலைப்படுத்தாமல் மக்களிற்கு தேவையான அமைப்பைத்தான் உருவாக்க வேண்டுமே தவிர, இருக்கிற கட்சிகள் பதிவு செய்யப்பட வெண்டுமென்ற அவசியம் எதுவுமில்லை.

கட்சியை பதிவு செய்ய வேண்டுமென வெளியிலிருந்து பலர் கேட்டனர். அப்போது கட்சிக்குள்ளிருந்த பெரும்பாலானவர்கள் பதிவு செய்ய வேண்டாமென்றனர். கஜேந்திரகுமார் மட்டும் பதிவு செய்ய வேண்டுமென்றார்.

1983இலிருந்து இந்த கட்சிகள் செய்து வரும் விடயங்களை நன்றாக கவனித்தால், கட்சியை பதிவு செய்வது ஆபத்தான விடயம்.

No comments

Note: Only a member of this blog may post a comment.