Breaking News


கொரோனா வைரஸின் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இராஜகிரியவிலுள்ள கொரோனா கட்டுப்படுத்தல் தேசிய செயற்பாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் சமூகத்தினுள் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெரும்பாலானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்படுகிறது.

எனினும் சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது மக்கள் இந்த நிலைவரத்தை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சுதத் சமரவீர ,

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கை சிறந்த மட்டத்திலுள்ளது. மக்களின் ஒத்துழைப்பினாலேயே இதனை எம்மால் பேண முடிந்தது.

இந்த நிலைமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடந்த மாதங்களில் சமூகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டார்கள் என்பதை மறக்காமல் அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.