Breaking News


ஈரானின் உயர்மட்ட ஜெனரல் கஸ்ஸெம் சொலைமானியை ஜனவரி தொடக்கத்தில் அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கையை ஈரானிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) தளபதி சனிக்கிழமையன்று உறுதிசெய்துள்ளார்.

“எங்கள் மாபெரும் ஜெனரலின் தியாகத்திற்கு நாங்கள் பழிவாங்குவது உறுதி. அது தீவிரமானது, அது உண்மையானது” என்று மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி ஒரு உரையில் குறிப்பிட்டார்.

ஈரானின் எந்த நடவடிக்கைக்கும் கடுமையான பதிலடி வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ள பின்னணியில், ட்ரம்பின் பெயரை குறிப்பிட்டு ஈரானிய தளபதி எச்சரிக்கை விடுத்தார்.

“இந்த பெரிய மனிதனின் தியாகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டவர்களை நாங்கள் அடிப்போம்.” என்றார்.

ஈரானில் இரண்டாவது சக்திவாய்ந்த மனிதர் என்று பரவலாக நம்பப்படும் சொலைமாணி, ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் மூத்த ஈராக்கிய தளபதியும் பல ஐ.ஆர்.ஜி.சி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

தாக்குதலுக்குப் பின்னர், ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றவாளிகளை “கடுமையான பழிவாங்க” போவதாக சபதமிட்டிருந்தார். இதை ஈரானிய அதிகாரிகள் மீண்டும் உறுதிசெய்துள்ளனர்.

அந்த தாக்குதலின் சில நாட்களுக்குப் பிறகு, ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்புக்களை இலக்கு வைத்து ஒரு டஜன் ரொக்கெட்டுகளை வீசியதன் மூலம் ஈரான் பதிலடி கொடுத்தது.

சலாமி தனது சனிக்கிழமை கருத்துக்களில் சுட்டிக்காட்டியபடி, தாக்குதலின் போது அமெரிக்க வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை.

எவ்வாறாயினும், அமெரிக்க இராணுவம் வெளிப்படுத்தியபடி, ஏவுகணைத் தாக்குதலில் இருந்து உருவான அதிர்ச்சிகரமான மூளைக் காயங்கள் 100 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கண்டறியப்பட்டன..

பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்காவின் செய்தி ஊடகமான பொலிடிகோ ஒரு செய்தியை வெளியிட்டதையடுத்து, சொலைமானி கொலை பழிவாங்கல் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கான அமெரிக்க தூதர் லானா மார்க்ஸை படுகொலை செய்வதற்கான சதியை ஈரான் மேற்கொள்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெனரலின் மரணத்திற்கு பழிவாங்க எந்த ஈரானிய முயற்சிகளுக்கும் வாஷிங்டன் கடுமையாக பதிலளிக்கும் என்று டிரம்ப் இந்த வாரம் எச்சரித்தார், “அவர்கள் எங்களை எந்த வகையிலும் தாக்கினால் … நாங்கள் அவர்களை 1,000 மடங்கு கடுமையாக தாக்கப் போகிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதுபோன்ற அறிக்கைகளை நம்புவதன் மூலம் ஒரு புதிய “மூலோபாய தவறு” செய்யக்கூடாது என்று ஈரானிய அதிகாரிகள் இந்த வாரம் டிரம்பை எச்சரித்தனர்.

முன்னாள் ஆடம்பர பேஷன் மற்றும் ஹேண்ட்பேக் வடிவமைப்பாளரான 66 வயதான மார்க்ஸ் தமது இலக்காக இருக்க மாட்டார் என்றும் ஐ.ஆர்.ஜி.சி தலைவர் சனிக்கிழமை சுட்டிக்காட்டினார்.

“எங்கள் தியாக சகோதரருக்கு ஈடாக ஒரு பெண் தூதரை அடித்தோம் என்று நினைக்கிறீர்களா?” ஜெனரல் கேள்வியெழுப்பினார்.

ஈரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் ஒருதலைப்பட்சமாக விலகியதிலிருந்து ஈரான்-அமெரிக்க உறவுகள் சீராக மோசமடைந்து வருகின்றன.

அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன், ஒருதலைப்பட்சமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை மீண்டும் நிலைநாட்ட விரும்புகிறது, இது வழக்கமான ஆயுதத் தடையை துப்பிக்கும் என கருதப்படுகிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.