Breaking Newsஅண்மையில் திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள திரியாய் என்ற இடத்தில் கிழக்கு மாகாணத் தொல்பொருள் செயலணியைச் சேர்ந்த பிக்கு ஒருவர் 1000 ஏக்கர் காணிகளில் இதுவரை காலமும் பயிர் செய்து வந்த விவசாயிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் கடுமையாக விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இடைக்கால கணக்கு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு விக்னேஸ்வரன் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைக்கு காணி அதிகாரங்கள் கொடுக்கக் கூடாது என்று எம்மவர் சிலர் கூறி வருகின்றார்கள். இந்த விடயத்தை அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும். எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா?

எமது நாட்டின் சகல இனங்களையும் ஒன்று கூட்டி பொருளாதார புனரமைப்புக்கு வித்திடுவது சிறந்ததா, அல்லது தொல்பொருள் காரணத்தைக் காட்டி ஒரு இனத்தை அமிழ்த்தி வைத்து அவர்களை எழும்பவிடாமல் செய்வது உகந்ததா? இந்த தொல்பொருள் ஆராய்விடங்கள் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடமா சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடமா என்று கூட இதுவரையில் ஊர்ஜிதப்படுத்தவில்லை.

இவை தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களென்றால் அவற்றைப் பாதுகாக்கும் கோரிக்கை தமிழ் மக்களிடம் இருந்து வரவேண்டுமேயொழிய சிங்களவரை மட்டும் உள்ளடக்கிய செயலணியில் இருந்து வரக்கூடாது. ஆகவே தான் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் வேற்றுநாட்டு தென்னாசிய வரலாற்று வல்லுநர்களைச் சேர்த்து ஆணைக்குழுவொன்றை கூட்டி சிங்கள மொழி பேசுவோர் பற்றிய முழுவிபரங்களைச் சேகரிக்கச் சொல்லிக் கேட்டுள்ளோம். பௌத்தர்கள் என்றவுடன் அவர்கள் சிங்களவர்களே என்று எண்ணுவது மடமை.

தமது காணிகளில் பயிர் செய்யாது தடுக்கப்பட்ட திருகோணமலை குச்சவெளி மக்களுக்கு திரும்பவும் தமது காணிகளுக்குள் இறங்கி விவசாயம் செய்ய ஆவன செய்யப்பட வேண்டும். கௌரவ பிரதம மந்திரி இது பற்றிய நடவடிக்கைகளை தயவு செய்து உடனே எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக எதனையும் நான் ஆவணங்களில் காணவில்லை. ஆனால் அவர்களின் நலவுரித்துகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை மேம்படுத்தத் தேவையான நிதியத்தை முன்னர் எமக்கு உதவி புரிய முன்வந்த ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்து பெற ஆவன செய்ய வேண்டும் இவ்வாறு நிதியங்களைப் பெறுவது பாதிக்கப்பட்டோருக்கும் நன்மை பயக்கும். நாட்டுக்கும் அந்நிய செலாவணியை தருவித்து நிற்கும்.

நாம் தற்போது வடக்கு கிழக்கில் இருவிதமான சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். ஒன்று நிர்வாகம் ரீதியானது. மற்றையது யதார்த்த பூர்வமானது. நிர்வாகமானது இதுவரையில் மேலிருந்து கீழ் நோக்கி ஆணையிடுவது போன்றே நடந்தேறி வந்துள்ளது. எமக்கு எவை எவை நன்மை பயப்பன என்பதைக் கொழும்பே தீர்மானித்து வந்துள்ளது. பொருளாதார திட்டங்கள் யாவும் கொழும்பில் இருந்தே தயாரித்து வரப்படுகின்றன.

அதன் பின் அவை எம்மேல் பலாத்காரமாகப் திணிக்கப்பட்டு வருகின்றன. எமது அடையாளங்கள், எமது நிலம், எமது பாரம்பரியம், எமது காலநிலை, எமது கலாச்சாரம் எமது வாழ்க்கை முறை போன்றவை இதுவரை காலமும் கணக்கில், எடுக்கப்பட்டு வந்ததாகத் தெரியவில்லை. திட்டங்கள் தீட்டும் போது எமது அலுவலர்கள், நிபுணர்கள் உடன் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. எமது மாகாணத்திற்கு எவை நன்மை பயக்கும் என்று நாமே சிந்தித்து செயலாற்ற நாம் அனுமதிக்கப்படவில்லை. அதற்கான அதிகாரமும் பலமும் எமக்குத் தரப்படவில்லை. இதை நான் வடக்கின் முதலமைச்சராக இருந்த காலத்தில் உணர்ந்து கொண்டேன்.

அடுத்து யதார்த்த பூர்வமான சவால்கள். எமது மின்சார மீற்றர்களை வாசித்து வரும் சிற்றூழியர்கள் தற்போது தெற்கில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் உள்ளூரில் வேலையின்மை அதிகமாகி வருகின்றது. அடுத்து படையினர் தம் வசம் வைத்திருக்கும் காணிகள். எமது மக்களின் வழமையான வாழ்க்கை முறை இவர்களின் பிரசன்னத்தால் மாற்றமடைந்து வருகின்றது.

சிங்களத்தில் ஒரு சொல் அதுர “அங்கிலி கஹனவா” என்பது அது. தேவையில்லாமல் விரலை உள்நுழைப்பதாக குறித்த சொல் பொருள்பட்டாலும். தமிழில் மூக்கை உள்நுழைப்பதையே குறிக்கும். நாம் விருத்தியடைவதைத் தடுக்க அடுத்தவர் தமது மூக்கை உள்நுழைப்பதையே அச் சொற்றொடர் குறிப்பிடுகிறது.

பொருளாதாரத் துறையில் தன்னிறைவு, தற்சார்பு சம்பந்தமாக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். அதே நேரம் ஒரே நாட்டினுள் எமது வடகிழக்கு மக்கள் தமது நடவடிக்கைகளை பிறரின் உள்நுழைவின்றி தாமே கொண்டு நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.