Breaking News


தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் ஓட்டை பிரித்து பெற்றோல் ஊற்றி தீமூட்டப்பட்ட சம்பவத்தில், யுவதி உயிரிழந்தார்.

கேகாலை, அலபாலவல கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

கடந்த 15ஆம் திகதி, யுவதியின் முன்னாள் காதலரால் யுவதி தீமூட்டப்பட்டார். நிரோஷிகா ராஜபக்ச (20) என்ற யுவதியே உயிரிழந்தார்.

சுமார் 5 வருடங்களின் முன்னர் தனது 15 வயதில் ஏற்பட்ட காதல் தொடர்பினால், இந்த விபரீதத்தை யுவதி சந்தித்தார்.

நிரோஷிகாவின் பெற்றோர் ஏழ்மையானவர்கள். விவசாயம் மற்றும் பீடித் தொழிலால் அவர்கள் ஜீவனோபாயத்தை நடத்தி வந்தார்கள். நிரோஷிகாவும், தம்பியும் குடும்பத்தில் பிள்ளைகள்.

2015ஆம் ஆண்டு கேகாலையின் அலபலவெல பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நிரோஷிகாவின் வீடும் தரைமட்டமானது. வீடுகளை இழந்தவர்களிற்கு வீடுகளை அமைக்கும் பணியை இராணுவம் மேற்கொண்டது.

இந்த குழுவில்  ஹேரத் குமார ரணசிங்க என்ற ராணுவ வீரரும் இடம்பெற்றிருந்தார்.

மாத்தளையின், பல்லேவேல பகுதியை சேர்ந்த 28 வயதான ஹேரத் குமார ரணசிங்க, நிரோஷிகாவின் வீட்டை அமைக்கும் போது, நிரோஷிகாவில் காதல் வசப்பட்டார்.

ஒரு நாள் குமார தனது காதலை  நிரோஷிகாவிடம் கூறினார். நிரோஷிகா காதலை ஏற்றுக்கொண்டார். அவர்கள் வயது வித்தியாசம் அல்லது இருவருக்கும் இடையிலான வேறு எந்த தடைகளையும் பற்றி சிந்திக்காமல் காதலித்தனர். ஆனால் 15 வயதான பாடசாலை மாணவியும், 28 வயதான இராணுவ சிப்பாயும் திருமண பந்தத்தில் இணைவதில் உள்ள சிக்கலையும் உணர்ந்திருந்தனர்.

தன்னுடன் கடமையாற்றிய சார்ஜென்ட் லால் என்பவரின் உதவியை குமார நாடினார். தனக்காக, நிரோஷிகாவின் வீட்டிற்கு தூது செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி, ஒரு நாள் நிரோஷிகாவின் பெற்றோரை லால் சந்தித்து, அவர்களின் மகள் மற்றும் குமார இடையேயான உறவு குறித்து சொன்னார். ஆனால் நிரோஷிகா பாடசாலை மாணவி என்பதால் அவரது பெற்றோர் கடுமையாக ஆட்சேபித்தனர். ஆனால், குமாரவும் நிரோஷிகாவும் என்ன தடைகள் இணைவதில் உறுதியாக இருந்தனர்.

ஒருநாள் வீட்டில் யாருமில்லாத சமயத்தில், வீட்டிலிருந்து வெளியேறிய நிரோஷிகா, காதலன் குமாரவுடன் சென்றார். மாத்தளை பல்லேவெலவிலுள்ள குமாரவின் வீட்டிற்கு இருவரும் சென்றனர்.

குமாரவின் குடும்பத்தில், அவர் மூத்தவர். இரண்டு உடன்பிறப்புக்கள்.

நிரோஷிகாவின் வயது 15 என்பதால் அந்த ஜோடி சட்டப்படி திருமணம் செய்ய முடியவில்லை. ஆனால், திருமண ஆடைகள் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சில காலத்தில் இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. குமார விடுமுறையில் வீடு திரும்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நிரோஷிகாவுடன் முரண்பாடு ஏற்பட்டது. தனது உறவினர் ஒருவருடன் நிரோஷிகாவிற்கு முறையற்ற உறவு இருப்பதாக குமார  சந்தேகித்ததே காரணம். இதனால்- 3 வருடங்களின் பின்னர், குமாரவை பிரிந்து சென்றார் நிரோஷிகா. தம்புள்ளையிலுள்ள குமாரவின் உறவினர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்தார்.

தான் மிகவும் நேசித்த நிரோஷிகா இல்லாமல் வாழ்ந்து வந்த குமார, சில மாதங்களுக்கு முன்பு நிரோஷிகாவைத் தேடி தம்புள்ளையிலுள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, குமார நிரோஷிகாவை கத்தியால் குத்தினார்.

இதையடுத்து, நிரோஷிகா தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மகளிற்கு ஏற்பட்ட நிலைமையை அறிந்த பெற்றோர், தம்புள்ளை வைத்தியசாலையிலிருந்து நிரோஷிகாவை கேகாலை, அலபலவெலவிலுள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். காயத்திலிருந்து குணமடைந்த நிரோஷிகா, தாயின் பீடி சுற்றும் தொழிலிற்கு உதவி செய்து வந்தார்.

இதற்கிடையில், குமார இராணுவத்தை விட்டு விலகியிருந்தார். என்னதான் பிரச்சினை வந்தாலும், நிரோஷிகாவை அவர் வெறித்தனமாக காதலித்தார். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை நிரோஷிகாவை தொலைபேசியில் அழைத்து பேச முயன்றார். ஆனால் ஒரு அழைப்பிற்கும் நிரோஷிகா பதிலளிக்கவில்லை.

ஒரு நாள் நிரோஷிகாவின் தந்தை குமாரவின் அழைப்புக்கு பதிலளித்தார். அதன்போது, குமாரவுடன் வாழ தமது மகள் விரும்பவில்லையென்பதை தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த குமார, நிரோஷிகாவை கொல்வேன் என மிரட்டினார்.

இதன் பின்னர், நிரோஷிகாவை கொல்வது குறித்து அவர் சிந்திக்க தொடங்கினார்.

கடந்த 14ஆம் திகதி காலையில் மாத்தளையிலிருந்து கேகாலைக்கு பேருந்தில் சென்றார் குமார. தன்னுடன் சில பழைய ஆடைகளையும் எடுத்துச் சென்றார்.

காலையிலேயே கேகாலையை வந்தடைந்த குமார, ஒரு கடைக்கு சென்று பிளாஸ்டிக் கான் ஒன்றை பெற்றார். பின்னர், புலத்கோஹுபிட்டி வீதியில் ஹெட்டிமுல்ல,
மகுரேவில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்றார். ஆனால், அங்கு பெற்றோல் இருக்கவில்லை.

பின்னர், அவர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெட்டிமுல்லவுக்கு பஸ்ஸில் சென்று, கடையொன்றில் பெற்றோல் வாங்கினார்.

அன்றைய தினம் மாலை, நிரோஷிகாவின் வீட்டின் அருகே வந்து பதுங்கியிருந்தார் குமார.

15 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் நிரோஷிகாவின் வீட்டின் அருகே வந்து, வீட்டிற்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தார். பின்னர், வீட்டிற்கு மேலே ஏறினார். வீட்டிற்குள் அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.

நிரோஷிகாவின் படுக்கையறையின் கூரையில் இருந்து ஒரு ஓட்டை அகற்றி உள்ளே எட்டிப்பார்த்தார். கட்டிலில் நிரோஷிகா தூக்கிக் கொண்டிருந்தார். பெட்சீற்றினால் போர்த்திருந்தார். கட்டிலிற்கு அருகில் சுற்றப்பட்ட பீடிகள் அடுக்கப்பட்டிருந்தன.

நிரோஷிகா மீது பெற்றோலை ஊற்றி, தீ மூட்டினார்.

இதேவேளை, எதேச்சையாக அந்த நேரம் விழித்த தந்தையார் வீட்டில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததை பார்த்தார். அதேநேரம் திடீரென தீப்பற்றியதையும் கண்டார்.

நிரோஷிகாவின் அலறல் சத்தம் கேட்டு, சகோதரனும் எழுந்து வெளியில் வந்தார். வீட்டிலிருந்து குதித்து ஒருவன் ஓடுவதை அவர் கண்டார். அந்த நபர் குமார என்பதை அடையாளம் கண்டார்.

தந்தையும், சகோதரனும் தீப்பற்றிய அறையிலிருந்து நிரோஷிகாவை வெளியே கொண்டு வந்தனர். அவர்களும் தீக்காயங்களிற்குள்ளாகியிருந்தனர்.

கடுமையான தீக்காயங்களிற்குள்ளான நிரோஷிகாவை கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலை பொலிசார் குற்றம் குறித்து கேகாலை பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். கேகாலை ஓ.ஐ.சி தலைமை ஆய்வாளர் எச்.பி.என்.குலதுங்கா அந்த பகுதிக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விசாரணைகளைத் தொடங்கினார்.

குமார இந்த குற்றத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன்படி, கேகாலை பொலிஸ் அதிகாரிகளும், பல்லேவெல பொலிஸ் அதிகாரிகளும் குமாரவின் வீட்டில் சோதனையிட்டபோதும், அவர் தப்பித்து விட்டார். ஆனால், தொடர் தேடுதலின் முடிவில், 16 ஆம் திகதி மாலை குமார சிக்கினார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,

“அவர் என்னை விட்டு எங்களுடைய உறவினருடன் சென்றார். அதனால்தான் நான் இதைச் செய்தேன்” என்றார்.

சந்தேகநபர் கேகாலை நீதிவான் சாமர விக்ரமநாயக்க முன் ஆஜர்படுத்தப்பட்டு இந்த மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கேகாலை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிரோஷிகா, கடந்த 20ஆம் திகதி உயிரிழந்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.