Breaking Newsஇனப்படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். 

இந்த விடயங்களில் இதய சுத்தியுடன் செயற்படும் எந்தக் கட்சியுடனும் ஒத்துழைத்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராக இருக்கின்றது. சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுபற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடாதுவிட்டாலும், அதில் வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது இதுபற்றி வலியுறுத்தி இருந்தார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும். தமது செயலில்களில் நம்பிக்கை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகளை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

இன்று அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை-
01. கேள்வி – தனிப்பட்ட முறையில் உங்கள் இந்தத் தேர்தல் வெற்றி உங்களுக்குத் திருப்தியைத் தருகின்றதா?
பதில் – நிச்சயமாக ! எத்தனை தடைகளைத் தாண்டி வந்து வென்றுள்ளேன்?

பண பலம் இல்லாமல், பதவி பலம் இல்லாமல், போதுமான ஆட்பலம் இல்லாமல், அரசியல் பின்னல் வலையமைப்பு இல்லாமல், அண்மை வரையில் ஒருவருக்கொருவர் பரீட்சயமில்லாத ஐந்து கட்சியினரை ஒன்று சேர்த்துக் கொண்டு, ஒவ்வொருவருக்கு அடுத்தவர் மேலான அவர்களின் நம்பிக்கையின்மையை சமாளித்துக் கொண்டு, எனக்கு எதிரான பொய்யான பரப்புரைகளை எதிர்கொண்டு மிகவும் குறுகிய ஒரு காலப்பகுதியில் எனது 81வது வயதில் பெற்ற இந்த வெற்றி குறித்து திருப்தி அடையாமல் இருக்க முடியுமா? அரசியலில் எனது இருப்புக்கும் எனது நடவடிக்கைகளுக்கும் எனது கொள்கைகளுக்கும் இந்த தேர்தலில் உடனடியாகவே மக்கள் அங்கீகாரம் தந்துவிட்டார்கள். எனக்கு வாக்களித்தவர்கள் எவ்வித கையூட்டும் பெறாமல் எவ்வித உத்தரவாதங்களையும் என்னிடம் எதிர்பார்க்காமல் வாக்களித்தவர்கள். அவர்கள் போற்றிப் புகழ வேண்டிய வாக்காளர்கள்.

இவையாவும் தனிப்பட்ட முறையில்.
ஆனால் இன்றைய கால தமிழ் மக்களின் தேர்தல் சிந்தனையையும் நடந்த தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மனம் வருந்துகின்றது. எமது வடகிழக்கு மாகாண மக்களின் எதிர்காலம் பற்றி பாரிய கரிசனை எழுகின்றது.
யாருடைய பணிப்பின் பேரில் அல்லது அறிவுரையின் பேரில் தமிழ் மக்களை “வாங்கும்” தந்திரோபாயம் உருவாக்கப்பட்டதோ நான் அறியேன். பணத்தை தண்ணீராக இறைத்திருக்கிறார்கள். இந்த பணம் தெற்கில் இருந்துதான் நிச்சயம் வந்திருக்க வேண்டும். இதன் பின்னணியில் நான் காண்பது தெற்கு எமக்கு ஒரு பாடம் புகட்டியுள்ளார்கள் என்பதையே. தமது கைப் பொம்மைகள் ஊடாக இதைச் செய்துள்ளார்கள்.

“விக்னேஸ்வரன்மார்களும் கஜேந்திரகுமார்மார்களும் கொள்கைகள் பற்றி பேசுகின்றார்கள். அவர்களுக்கு அவர்கள் மக்கள் பற்றி எதுவுமே தெரியவில்லை போல்த் தெரிகிறது. ஆகவே இந்தத் தேர்தலில் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்” என்ற ரீதியில் பதவி நிலைகளில் இருந்து பணம் அரசாங்க அடிவருடிகளிடம் பறந்து வந்ததோ என்று எண்ண வேண்டியுள்ளது.

ஆனால், கடந்த 10 வருடகால செயற்பாடுகளை பார்க்கின்றபோது மக்கள் மீது நாம் குற்றம் சொல்ல முடியாது. தமிழ் தேசிய சிந்தனையில் இருந்து சலுகைகளை நோக்கி அடிப்படையான ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று கூறமுடியாது. இன்றுள்ள நிலையைவிட யுத்தம் முடிவடைந்த பின்னர் மிக மோசமான கஷ்ட நிலையில் இருந்தபோது எமது மக்கள் தமது கஷ்டங்களை முன்னிலைப்படுத்தி சலுகைகளுக்காக சிந்திக்காமல் தமிழ் தேசிய உணர்வுடனேயே வாக்களித்தனர்.

ஆனால்,கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியே வாக்களிப்பில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட காரணமாகும். ஆகவே, தமிழ் தேசியத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம் கொள்ள முடியாது. பரவலாக வாக்குகள் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையே பிரிந்து சென்றுள்ளன. எம்மக்களை தொடர்ச்சியாக வறுமை, 

வேலையின்மை, அபிவிருத்தியின்மை என்று திட்டமிட்டு வைத்திருப்பதனுடாக முகவர்களை அல்லது தமது அடிவருடிகளை பயன்படுத்தி சலுகை அரசியலை அரசாங்கம் நகர்த்துகின்றது.
இது ஓரளவு தாக்கத்தை செலுத்தியுள்ளது. ஆனால், இத்தகைய சிந்தனைக்குள் அகப்பட்டவர்கள் சிலவற்றை சிந்திக்க வேண்டும்:
1.இதுவரை அரச அடிவருடிகள் எதனைப் பெரிதாகப் பெற்றுத் தந்துள்ளார்கள்?

2. இனிமேல் பெற்றுத்தந்தாலும் எந்தளவுக்கு அவை எம் மக்களுக்கு நன்மை தருவன? வடக்கு கிழக்கு வளங்களைச் சூறையாடிச் செல்லத் துடிக்கும் மத்திய அரசாங்கத்தினர் தமது அடிவருடிகளைச் சுதந்திரமாகத் தமது மக்கள் சார்பில் செயற்படவிடுவார்களா?
3. இவர்களுக்கு நெத்தலியைப் போட்டுவிட்டு அவர்கள் சுறா பிடித்துச் சென்றால் இவர்கள் என்ன செய்யப் போகின்றர்கள்?

அத்துடன் கீழ்வரும் முக்கியமான சில விடயங்களையும் எம் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
1. 2009ம் ஆண்டு மே மாதம் வரையில் வடகிழக்கில் புழக்கத்தில் இல்லாத போதைப் பொருட்கள் கடந்த 11 வருடங்கள் இராணுவம், கடற்படை, பொலிசார், அரச அலுவலர்கள் என்று பலர் இருந்தும் வடமாகாணத்தில் கடத்தப்பட்டும், விநியோகிக்கப்பட்டும், பாவிக்கப்பட்டும் வருவது எவ்வாறு?

2. களியாட்ட நிகழ்வுகள் பல வடகிழக்கில் அரச அனுசரணையுடன் நடைபெறுவது எதற்காக?

3. வடமாகாணசபை எமது மக்களுக்கு நன்மை தரும் பாரிய செயற்றிட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த விழைந்த போது அரச அலுவலர்கள் அவற்றைத் தடுத்து செயலற்றுப் போகச் செய்தது எதற்காக?

4. வடமாகாண முதலமைச்சரின் நிதியத்தை காலம் கடத்தித் தராது விட்டது எதற்காக?

5. தற்போது பணத்தைக் கொடுத்து, சாராயத்தைக் கொடுத்து, களியாட்டங்களுக்கான கைங்கரியங்களைச் செய்து மக்கள் வாக்கை, முக்கியமாக இளைய சமுதாயத்தினரிடம் இருந்து பெறுவது எதற்காக?

இவற்றில் ஈடுபடுபவர்களுக்குக் கூட இவற்றிற்கான காரணங்கள் புரிந்திருக்குமோ தெரியாது. பதவி மோகத்தின் நிமித்தம் அவர்கள் பிறரின் சொற்படி நடந்திருக்கக்கூடும். ஆனால் வரப்போகும் விளைவுகள் என்ன? ஆகவே மக்களின் எதிர்காலத்தை நினைத்தால் எனக்கு அது திருப்தியளிப்பதாக இல்லை.
02. நீங்கள் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கு தயார் என்று சொன்னதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியிருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறதே. அது உண்மையா?

பதில்: அப்படி நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. சில தினங்களுக்கு முன்னர் நான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பின்வருமாறுதான் கூறியிருந்தேன்: 

“எமது இனத்தின் நன்மை கருதி, தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. இதற்கு ஒத்துழைப்பு வழங்க நானும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருக்கின்றோம்.”


இங்கு நான் அழுத்தம் திருத்தமாக கொள்கை அடிப்படையில் என்று குறிப்பிட்டிருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கை என்னவென்று குறிப்பிடவேண்டும். இணைந்த வடக்கு-கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வு தரப்பட வேண்டும். இன்றேல் இறுதித் தீர்வு தொடர்பில் சர்வதேச மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பும் அதன் அடிப்படையில் செயற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இங்கு நடந்த இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விடயங்களில் இதய சுத்தியுடன் செயற்படும் எந்தக் கட்சியுடனும் ஒத்துழைத்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராக இருக்கின்றது.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுபற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடாதுவிட்டாலும், அதில் வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தின்போது இதுபற்றி வலியுறுத்தி இருந்தார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும். தமது செயலில்களில் நம்பிக்கை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகளை செய்யவேண்டும். அதை செல்வம் முதலில் செய்யட்டும்.

No comments

Note: Only a member of this blog may post a comment.