Breaking News


தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து முன்னர் வியாழேந்திரன் தானே கட்சி மாறி சென்று, அமைச்சு பதவியேற்றார். இது பழைய கதை. தமிழ் தேசிய கூட்டமைப்பே புதிய வியாழேந்திரன் ஒருவரை உருவாக்கும் பக்கா பிளான் போட்டு வருவது புதிய கதை.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கி, அவர் வெற்றி பெற்றதும், அரச தரப்பிற்கு தாவுவதை போல தாவி அமைச்சு பதவியேற்கும் ஆலோசனையொன்று நடந்து வருவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து தற்போதைய எம்.பி, சரவணபவனை நீக்க வேண்டுமென, மாவை சேனாதிராசாவிடம், எம்.ஏ.சுமந்திரன் விடுத்த வேண்டுகோளை தமிழ்பக்கம் முதன்முதலில் வெளியிட்டது. இந்த விவகாரம் தமிழ் அரசு கட்சியை ஒரு உலுக்கு உலுக்கியது.

மாவை சேனாதிராசாவும், எம்.ஏ.சுமந்திரனும் மூடிய அறைக்குள் பேசிய விவகாரத்தை எப்படி தமிழ்பக்கம் பெற்றது என்பது கட்சிக்குள் இன்றுவரை பெரிய விவகாரமாக உள்ளது.

இந்தநிலையில், இன்னொரு “டீல்“ விவகாரத்தை வெளிப்படுத்துகிறோம்.

தமிழ் அரசு கட்சியில் இப்போது பல குழுக்கள் உள்ளன. அதில் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவில் உள்ளவர்கள், அரசில் இணைந்து அமைச்சு பதவியேற்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக நிற்கிறார்கள். தமிழ் மக்களின் சாபமாகவே உருவாகி வரும், கனடா கிளையும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். இப்படியான நிலைப்பாடுகளாலேயே இரண்டு தரப்பினரும், ஒரே அலைவரிசையில் சிந்தித்து, இணைந்து செயற்படுகிறார்கள்.

சில மாதங்களின் முன்னர், தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்றில், அமைச்சு பதவியை ஏற்க வேண்டும், கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் வலியுறுத்த ஆரம்பிக்க, அதை பலர் எதிர்த்து, வாயை மூட வைத்தனர்.

இறுதியாக, சில வாரங்களின் முன்னர் திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வீட்டில், கட்சியின் அரசியல்குழு கூட்டம் நடந்தது. இதன்போதும், செயலாளர் கி.துரைராசசிங்கம் அமைச்சு பதவியேற்கும் ஆசையை வெளிப்படுத்தினார். அவர் இந்த பேச்சை ஆரம்பித்ததும், மாவை சேனாதிராசா மற்றும் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். தமிழ் அரசு கட்சி ஆரம்பித்த நோக்கம் நிறைவேறி விட்டதா என அவர்கள் கேள்வியெழுப்ப, “ம்.. சொல்லுங்கள். எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விட்டதா?“ என சம்பந்தனும் பதில் கேள்வியெழுப்ப, துரைராசசிங்கம் வாயடைத்து இருந்து விட்டார்.

எனினும், அமைச்சு பதவியை ஏற்கும் முடிவை அந்த அணி கைவிடவில்லை.

அமைச்சு பதவியை ஏற்க கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு உருவாகிறது. ஆனாலும், அமைச்சு ஆசையையும் கைவிட முடியவில்லை. அதை சமாளிக்க உருவாக்கியுள்ளதே- அடுத்த வியாழேந்திரன் செற் அப்!

அண்மையில், இரா.சம்பந்தனை சந்தித்த கட்சியின் “செயல் தலைவர்“ இந்த யோசனையை முன்வைத்ததை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம்- கிழக்கில் தமிழ் அமைச்சர் ஒருவராவது உருவாக வேண்டும். கிழக்கில் முஸ்லிம் பகுதிகள் அபிவிருத்தியடைந்து விட்டன. தமிழ் பகுதிகள் அபிவிருத்தியில்லாமல் உள்ளன. அந்த பகுதிகளை அவதானித்தால் மலைக்கும், மடுவிற்குமான இடைவெளியாக அது தெரியும். தமிழ் மக்களும் அமைச்சு பதவியொன்றை எதிர்பார்க்கிறார்கள். நாம் அமைச்சு பதவியேற்க வேண்டுமென கிழக்கில் யோகேஸ்வரன், அரியநேத்திரன் தவிர்ந்த மற்றவர்கள், கனடா கிளையினர் ஆர்வமாக இருந்தாலும், கட்சிக்குள் பலர் விரும்பவில்லை. மக்களும் அதை ஏற்கவில்லையென்று சொல்லப்படுகிறது. இந்த காரணத்தை கூறி நாம் அமைச்சு பதவியை ஏற்காமல் விட்டால், கிழக்கில் ஏனைய தரப்பினர் அமைச்சு பதவியை பெற்று அசைக்க முடியாத இடத்தை பெற்று விடுவார்கள். அதன் பின்னர் எம்மால் சமாளிக்க முடியாது. நாம் அமைச்சு பதவியை பெறாவிட்டாலும், எதிர்தரப்பினர் பெறாமல் தடுக்க, எமது ஒருவரையே அரச தரப்பில் இணைய வைத்து அமைச்சு பதவியை பெற வைக்கலாம். தேர்தலில் எம்முடன் கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும், அவர் தானே கட்சி மாறிச் செல்வதை போல, அரச தரப்பிற்கு சென்று அமைச்சு பதவியேற்கலாம். இதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்“ என தெரிவித்துள்ளார்.

எனினும், இரா.சம்பந்தன் இதற்கு சாதகமான பதிலளிக்கவில்லை. அமைச்சு பதவியேற்பதில் அவருக்கு உடன்பாடில்லையென்பதால், “பார்க்கலாம் தம்பி. இதைப்பற்றி நாம் பேசுவோம்“ எனக் கூறி, இந்த பேச்சை ஆரம்பத்திலேயே நிறுத்தி வைத்துள்ளார்.

எனினும், “செயல் தலைவரை“ மீறி இரா.சம்பந்தனால் இந்த திட்டத்தை நிறுத்த முடியுமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி.

அரச தரப்பிற்கு அனுப்ப தயாராக்கப்படும் அந்த “சிலிப்பர் செல்“ வேட்பாளர் யார் என்பதை பற்றி, அன்று கலந்துரையாடப்படவில்லை.

எனினும், இரா.சாணக்கியனை இந்த தேர்தலில் களமிறக்க வேண்டுமென கனடா கிளையினர் அண்மையில் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். “செயல் தலைவர்“ தரப்பினரும், சாணக்கியனை களமிறக்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.