Breaking News

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களை ஒப்பிடும் போது ஒரே வீதம் போல் தெரிந்தாலும் அதனால் ஏற்படக் கூடிய நிலைமை மிகவும் பாரதூரமானது என ஹொங்கொங் அரச சுகாதார பிரிவின் தலைவர் பேராசிரியர் Gabriel Leung எச்சரித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகி இதுவரை ஆயிரத்திற்கும் அதிகளவிலான உயிர்கள் பறியோகியிருக்கின்றன. இது தொடர்பில் பல சுகாதார அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றன.
மறுபுறத்தில் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிராக களமிறங்கிப் போராடுகிறது சீன அரசு. மருத்துவர்களோ 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், பலியாகிக் கொண்டிருப்பவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் திணறுகின்றார்கள்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொடர்பில் ஹொங்கொங் அரச சுகாதார பிரிவின் தலைவர் பேராசிரியர் Gabriel Leung எச்சரித்துள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
“கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முறைகள் தவறினால், உலக சனத்தொகையில் 60 வீதமானவர்களுக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து இருக்கின்றது.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றுக்கு உள்ளானவர்களை ஒப்பிடும் போது ஒரே வீதம் போல் தெரிந்தாலும் அதனால் ஏற்படக் கூடிய நிலைமை மிகவும் பாரதூரமானது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் தோல்வியடைந்தால், அது உலகம் முழுவதும் 60 வீதமானவர்களுக்கு தொற்றக் கூடும். அப்படியான நிலைமை ஏற்பட்டால், ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள் எனவும் Gabriel Leung எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் நாடுகள் பல்வேறு வழிகளை கையாண்டாலும் இது பனிப்பாறை போன்ற வைரஸ். நீருக்கு மேல் காணப்படும் பகுதி மாத்திரமே எமக்கு தென்படுகிறது. எனினும் தென்படாத பகுதி மிகவும் பயங்கரமானது. இந்த வைரஸ் நிற்காத அலையாக உலகம் முழுவதும் பரவலாம்.
அத்துடன் சீனா தமது நாட்டில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை சம்பந்தமாக சரியான தகவல்களை வழங்கவில்லை. இது ஒரு விதத்தில் சிக்கலுக்குரிய நிலைமையாகும்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக பெருமளவிலான நோயாளிகள் உயிரிழப்பதாகவும் பெயரை குறிப்பிட விரும்பாத சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் வைத்தியாசாலை ஒன்றில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நேற்று மட்டும் கொரோனாவிற்கு 242 பேர் பலியாகியுள்ளதாக சீன அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.