Breaking News


தமிழ் மக்கள் கூட்டணி தலைமையிலான கூட்டணி முயற்சிகள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன. வடக்கு முன்னாள் முதலமைச்சரின் கறார் நிபந்தனைகளால், அதன் பங்காளிகள் பெரும் அதிருப்தியில் இருப்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

தமிழ் பக்கத்துடன் பேசிய பிரமுகர் ஒருவர்- “இதுதான் நிலைமையென்றால், நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே இருந்திருக்கலாம்“ என விசனத்துடன் தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு செல்வதற்கு முன்னதாக, கூட்டணி பேச்சுக்கள் நடந்தன. அதில் தெளிவான இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்பட்டிருக்கவில்லை. அவர் மீள இலங்கைக்கு வந்ததன் பின்னரே அடுத்த கட்ட பேச்சுக்கள் நடைபெறும்.

முன்னர் குறிப்பிட்டதை போல, பொங்கல் முடிந்த அடுத்தடுத்த நாட்களில் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைய வாய்ப்பில்லையென தெரிகிறது.

விக்னேஸ்வரன் அணி தனி அணி ஆரம்பித்தாலும், இன்னும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியெதுவும் அவரிடமில்லை. அந்த கூட்டணியிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டும்தான் பதிவு செய்யப்பட்ட கட்சி. எனினும், ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற அடையாளத்தில் அல்லாமல், வேறு அடையாளத்தில் களமிறங்க அனைவரும் விரும்பியதால், அந்த கட்சியின் பெயர் மாற்ற முயற்சிகள் நடக்கிறது. தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரும், நிறைகுடம் சின்னமும் தேர்தல் ஆணையாளரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டாக களமிறங்கலாமென சுரேஷ் பிரேமச்சந்திரன் விரும்பினாலும், விக்னேஸ்வரன் அதைவிரும்பவில்லை.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் களமிறங்கலாமென அவர் கடந்த கூட்டத்தில் யோசனை தெரிவித்தார். எனினும், புதிதாக உருவாகும் இந்த கூட்டணியின் வாழ்நாள் பொதுச்செயலாளராக தானே செயற்படுவேன் என நிபந்தனை விதித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பு அதை இரசிக்கவில்லையென தமிழ்பக்கம் அறிந்தது.

இதேவேளை, எதிர்காலத்தில் கூட்டணியின் தீர்மானங்களை எடுக்கும் அரசியல் குழுவொன்று உருவாக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. எனினும், அதில் கட்சிகளிற்கான இடஒதுக்கீட்டில் சர்ச்சை உள்ளது.

11 உறுப்பினர்களை கொண்ட அரசியல் குழுவில், தமிழ் மக்கள் கூட்டணி 6 இடங்களை பெறுமென்றும், ஈ.பி.ஆர்.எல்.எவ் 3, தமிழ் தேசிய கட்சி (சிறிகாந்தா- சிவாஜிலிங்கம் தரப்பு) 1, அனந்தி தரப்பு 1 இடங்களை பெற்றுக்கொள்ளுங்கள் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கூட்டணியிலுள்ள ஒரு கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இடங்களை வழங்கினால், முடிவெடுக்க இந்த சபை எதற்கு என மற்றவர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் விக்னேஸ்வரன் அதை கணக்கெடுக்கவில்லை.

இது குறித்து பேசியபோதே, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ஒரு பிரமுகர், “இதுதான் நிலைமையெனில் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே இருந்திருக்கலாம். அங்கு குறைந்த பட்சம் பேசவாவது முடியும். ஒரு தரப்பிற்கு அறுதிப் பெரும்பான்மை வழங்கினால், இந்த அரசியல் குழு எதற்கு?. சம்பந்தனை விட 100 மடங்கு ஜனநாயக விழுமியத்தை மதிக்காதவராக விக்னேஸ்வரன் இருக்கிறார்“ என தமிழ்பக்கத்திடம் விசனம் தெரிவித்தார்.

இழுபறி நீடித்ததால், தற்காலிகமான குழுவொன்று அமைத்து, தேர்தலை சந்தித்த பின்னர் யாப்பு விவகாரங்களை இறுதி செய்து கொள்ளலாமென மற்றைய கட்சிகள் யோசனை தெரிவித்துள்ளன. இது குறித்த இறுதி முடிவு விக்னேஸ்வரன் நாடு திரும்பிய பின்னர் எடுக்கப்படும்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் தமது தரப்பில் 5 வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன், அருந்தவபாலன், பேராசிரியர் சிவநாதன், சிற்பரன் உள்ளிட்ட ஐவர் களமிறங்கவுள்ளனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் 3, தமிழ் தேசிய கட்சி, அனந்தி தரப்பு தலா ஒவ்வொரு வேட்பாளர் என்பது விக்னேஸ்வரனின் கணக்கு. இதில் தமிழ் தேசிய கட்சி அதிருப்தியில் உள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.