Breaking News


நாட்டைப் பற்றியும், நாட்டின் எதிர்காலம் பற்றியும் பற்றுள்ளவர்கள் என்னுடைய போராட்டத்தில் இணைந்துகொள்ள முடியும் எனவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் ஆரம்பித்தது முதல் எனது போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது முதல் அரசியலமைப்பின் 15 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றும் 21 ஆவது திருத்தச் சட்டம் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய சகோதர வார இதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நீண்ட செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனது கடமையைப் போன்றே எனது பொறுப்பை நான் நிறைவேற்றுவேன். நாட்டைப் பற்றியும், எமது எதிர்காலம் பற்றியும் அக்கறையுள்ளவர்கள் என்னுடன் இணைந்துகொள்ளலாம். இதற்கு கிடைக்கும் தீர்வின் மூலம் ஜனநாயகத்தையும், சிறந்த நிருவாகத்தையும் கட்டியெழுப்பலாம்.

நாட்டில் பெரும் கட்சி, சிறு கட்சி என வகைப்படுத்த முடியாது. எல்லாம் ஒரே மாதிரியான கட்சி. இந்தக் கட்சிகள் கொள்கையொன்றை அடிப்படையாக வைத்து உருவாக வேண்டும். மதம் ஒன்றையும், இனம் ஒன்றையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகுமாக இருந்தால், அங்கு பிரிவினை உருவாகும். இந்தக் கட்சிகளுக்கு வளர இடமளித்தால், அது அடிப்படைவாதத்தையே உருவாக்கும். இது எமது நாட்டை அழிக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்

No comments

Note: Only a member of this blog may post a comment.