Breaking News

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவேயில்லை; சுமந்திரனின் கருத்து ஐ.நாவில் எப்படி முறியடிக்கப்பட்டது?: சிவாஜிலிங்கம் வெளியிடும் தகவல்கள்!


ஜெனீவாவிற்கு போகும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் எந்த பலனுமில்லை. அது படம் காட்டும் செயற்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட பொறுப்பற்ற கருத்தை பலரும் கண்டித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கமும் கண்டித்துள்ளார்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசின் இணை அனுசரணையில் 301 தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதை நிறைவேற்ற மாட்டோம் என அரசு பின்னர் கூறி விட்டது. அதை நிறைவேற்றுவோம் என அரசு கூறினால், அவர்களிற்கு காலநீடிப்பு வழங்கலாம். ஆனால் நிறைவேற்ற மாட்டோம் என கசபோக்கிரி தனமாக அரசு செயற்படும்போது, அவர்களிற்கு காலநீடிப்பு வழங்க வேண்டாம் என்றுதான் நாம் வலியுறுத்தினோம்.

வாங்கிய கடனை திருப்பி தரமட்டோம் என ஒருவன் சொன்ன பின்னர், அவனிற்கு காலஅவகாசம் வழங்குவது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை குப்பைக்கூடைக்குள் போடப் போவதாக அரசு சொல்கிறது. உங்களிற்கு தில் இருந்தால், அதை மனித உரிமைப் பேரவையில் வந்து சொல்லுங்கள் பார்க்கலாம். முடியுமானால், அமெரிக்காவை போல மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுங்கள் பார்க்கலாம். இங்கு ஒரு கதை, அங்கு ஒரு கதை கதைக்காமல் நான் இந்த சவாலை விடுகிறேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பேசப்படுபவை ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு சென்று உரையற்றுவது தேவையற்ற வேலை என சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் இருந்து சிறிதரனும் உரையாற்ற ஆரம்பித்துள்ளார். அவர் செல்வதும் தேவையற்ற வேலையா?

நான் சுமந்திரனுக்கு சவால் விடுகிறேன். மனித உரிமைகள் பேரவை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு என்னுடன் வர தயாரா? நான் தயார்.

நாங்கள் ஐ.நாவில் எதை சாதித்தோம் என்பதை மக்கள் அறியட்டும்.

இனப்படுகொலை என்பதே இல்லையென நீங்கள் கூறினீர்கள். நாம் இனப்படுகொலை நடந்தது என்பதை தீர்மானமாக நிறைவேற்றி சாதித்தோம். இனப்படுகொலை இல்லையென சுமந்திரன் கூறியதை, வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் எழுத்தில் எமக்கு அறிவித்தார். அதை நாங்கள் நிராகரித்து, இனப்படுகொலை நடந்ததென்பதை ஐ.நாவில் முன்வைக்கும் தகுதி ஈழத்தமிழர்களிற்கு உள்ளது என்பதை நிரூபித்து, ஐ.நா ஆணையாளரே அதை குறிப்பிட்டார். தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களின் முன்பாகவே இதை சுமந்திரன் ஏற்றுக்கொண்டார்.

2 ஆண்டுகள் படி இரண்டு முறை காலநீடிப்பு வழங்கி, தமிழர்களை இக்கட்டுக்குள் தள்ளியுள்ளனர். அதிலிருந்து நாங்கள் மீண்டு வருவோம் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.