Breaking News

சிங்கள பெளத்த ராஜியமாகவா அல்லது இலங்கை ராஜியமாகவா கட்டியெழுப்ப போகின்றீர்கள்?: விஜேதாசவை வாயடைக்க வைத்த மனோ!


எனக்கு சிங்கள ராஜ்யமோ, தமிழ் ராஜ்யமோ, முஸ்லிம் ராஜ்யமோ வேண்டாம். இலங்கை ராஜ்யமே வேண்டும். நான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம்தான் தமிழன்.

ஆனால், நீங்கள் முதலில் யார்? நீங்கள் இந்த நாட்டில் ஒரு சிங்கள பெளத்த ராஜ்யத்தை கட்டி எழுப்ப முயல்கிறீர்கள் என்ற அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை ராஜ்யத்தையா அல்லது சிங்கள பெளத்த ராஜ்யத்தையா நீங்கள் இந்த நாட்டில் உருவாக்க விளைகிறீர்கள் என்று எனக்கு பதில் கூறுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் நேற்றிரவு நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி அரசியல் விவாதத்தில், தனிநபர் பிரேரணை மூலம் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் அரசியலமைப்புக்கான 21ம் திருத்தத்தை கொண்டுவந்துள்ள அரசாங்க எம்பி விஜேதாச ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினார்.

நேற்று நள்ளிரவு கடந்து, சிங்கள மொழியில் நடைபெற்ற இந்த விவாதத்தில் ஜேவிபி எம்பி நளின்த ஜயதிஸ்ஸ, ஐதேக எம்பி முஜிபுர் ரகுமான், பொதுஜன பெரமுன எம்பி விஜேதாச ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நாட்டில் இனங்கள் மத்தியில் நல்லிணக்கம் இல்லாமல் இருப்பதற்கு சிறுபான்மை கட்சிகள் இருப்பதே காரணம் என்று கூறுகிறீர்கள். ஆகவே தேர்தல் வெட்டுபுள்ளியை உயர்த்தி சிறு கட்சிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்கிறீர்கள்.

இன்று இந்நாட்டில் நல்லிணக்கம் இல்லை என்பது மெத்த சரி. அது ஒரு நோய். ஆனால், அந்த நோய்க்கு நீங்கள் சொல்லும் மருந்துதான் பிழையானது.

நல்லிணக்கம் இல்லாமல் போனதற்கு இந்நாட்டு பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மை மக்களை அரவணைக்க தவறியதே காரணம். அதனால்தான் வேறு வழிகள் இல்லாமல், சிறுபான்மை கட்சிகள் உருவாகின.

சிங்களம் மட்டும் என்று 1950களில் இனவாதத்தை மையமாக கொண்டு பெரும்பான்மை அரசியல்வாதிகள் அரசியல் செய்ய புறப்பட்டதாலேயே, சிறுபான்மை கட்சிகள் உருவாக வழி ஏற்பட்டது.

இதனால், சுமார் 70 வருடங்கள் இந்நாடு இருளில் இருந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு அதை மாற்ற நாம் முயன்று வரும் போது, மீண்டும் அதே பழைய இருளை நோக்கி நீங்கள் இந்நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல முயல்கிறீர்கள்.

அதாவது வரலாற்றில் இருந்து இன்னமும் நீங்கள் பாடம் படிக்கவில்லை என்று எனக்கு புலனாகிறது.

இந்நாட்டில் இப்போது, தமிழ் பேசும் மக்கள் தமது தாய்மொழியில் தமது தாய்நாட்டை உணர்வோடு, “தாயே” என தேசிய கீதமாக பாட முடியாத நிலைமைக்கு நீங்கள் கொண்டுவர முயல்கிறீர்கள். இதுதான் இன்றைய யதார்த்தம்.

இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கும், இந்நாட்டின் இன்றைய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அரச எம்பீக்கள் ஆகியோர் இதையிட்டு வெட்கி தலை குனிய வேண்டும்.

இதுதான் பிரிவினை. சிறுபான்மை இனங்களை ஒதுக்கி வைப்பதுதான் பிரிவினை. ஒரே நாட்டை உருவாக்க வேண்டும் என்றால், இந்நாட்டில் வாழும் எல்லா இனங்களுக்கும், மொழிகளுக்கும், மதங்களுக்கும் அங்கீகாரம் தருவதன் மூலமே அதை செய்ய முடியும் என்பதை உணருங்கள்.

இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய இனத்தை சேர்ந்த மன்மோகன் சிங் பிரதமர் ஆக முடியும். அப்துல் கலாம் என்ற முஸ்லிம் ஜனாதிபதி ஆக முடியும். இங்கே லக்சமன் கதிர்காமர் கூட பிரதமராக முடியாது. இங்கே இனவாதம் உள்ளத்தில் ஆழமாக ஊறி விட்டது. அதை நீங்கள் இன்னமும் வளர்க்கிறீர்கள்.

இன்று உள்ள தேர்தல் சட்டத்தை திருத்த நாமும் தயார். ஆனால், எப்படி திருத்துவது?

இப்படி வெட்டுப்புள்ளியை உயர்த்தி சிறு கட்சிகளை ஒழிப்பதன் மூலம் அல்ல. அது இருக்கும் நிலைமையை இன்னமும் மோசமாக்கி விடும். இது சிறுபான்மை கட்சிகளை மட்டுமல்ல, அனைத்து சிறு கட்சிகளையும் பாதிக்கும்.

எம்மை விட ஜேவிபியை அதிகம் பாதிக்கும். அரசில் உள்ள ஈபீடீபியை பாதிக்கும். கடந்த காலங்களில் ஆயுதம் தூக்கி விட்டு, பின் அவற்றை கைவிட்டு, பாராளுமன்ற பாதையை தெரிவு செய்தவர்களை பார்த்து மீண்டும் ஆயுத போருக்கு போங்கள். காட்டுக்குள் போங்கள். பங்கருக்குள் போங்கள் என்று சொல்லுகிறீர்கள்.

வரலாற்றில் இருந்து பாடம் படிக்கவும் மாட்டீர்கள். இலங்கை ராஜ்ஜியம் என்ற அனைவாராலும் ஏற்றுக்கொள்ள கூடிய இலக்கையும் நிராகரிப்பீர்கள். ஆனால், நாம் எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்த எமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமையையும் கைவிட வேண்டும். இது என்னய்யா நியாயம்?

No comments

Note: Only a member of this blog may post a comment.