Breaking News

மாற்றுத் திறனாளி ஊடகவியளாளரை வதைத்த யாழ் வைத்தியசாலை! "வேலைப்பளு மிக்க துறை என்று கூறி நழுவ முடியுமா?"


எனக்கு இப்போது தனிப்பலமாக எனது கைகள் மட்டுமே இருக்கின்றது. கைகளும் இயங்கவில்லை என்றால் எனது வாழ்வும் முடிந்து விட்டது போல் ஆகிவிடும். இவ்வாறான நிலையில் கடந்த 3ம் திகதி அம்மா தூக்கும் போது என்னுடன் தடுமாறி வீழ்ந்ததில் எனது இடது கை மணிக்கட்டு கால்களுக்குள் அகப்பட்டு மடங்கியது.

கை மணிக்கட்டு மடங்கியதால் பலமாக பாதிக்கப்பட்டு வலியேற்பட்டது. அந்த வலி கை முறிந்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. கை மடங்கிய உடன் பாதிப்பினால் எனது பார்வை மங்கிப் போனது. மயக்கமடையவில்லை. ஆனால் சிறிது நேரம் எனக்கு எல்லாமே இருட்டாக தெரிந்தது. அம்மா கை முறிந்திருக்காது என்று கூறினார். நான் இல்லை முறிந்தது போல் வலிக்குது. கையின் உள்ளே எலும்பு ஆடுவது போலும் உணர்கிறேன். இனி செய்திகளும் பதிவிட முடியாது என்று அழுது கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டுபோகுமாறு கூறினேன்.

தனியார் வைத்தியசாலைக்கு சென்று வருவது என்று தான் நான் நினைத்தேன். எனினும் யாழ்ப்பாணம் கொண்டு சென்று எனது கைகளில் முன்னதாக ஏற்பட்ட சில பாதிப்புக்களையும் குறிப்பிட்டால் கவனிப்பார்கள் என்று எண்ணிய அப்பா நேரடியாக அங்கேயே கொண்டு சென்றார். அங்கு ஆரம்பத்தில் ஒரு வைத்தியர் எனது கையை பரிசோதித்தார். இதன்போது அப்பா முன்னர் இருந்த பிரச்சினையை சொல்ல முயன்றார் எனினும் வைத்தியர் அது பற்றி பெரிதாக எடுக்கவில்லை. எனவே நானும் எதுவும் கூறவில்லை. கை முறிவு பற்றி மட்டுமே விசாரித்து, கூடவே தசை திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவன் என்பதையும் குறிப்பெடுத்தார். அப்போது மதியம் 12 மணியிருக்கும் பெரிய வைத்தியர் 2 மணிக்கு பின்னர் வருவார் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கலாம் எனக் கூறி 24ம் வார்ட்டுக்கு அனுப்பி விட்டனர்.

2 மணிக்கு பெரியவர் வந்தார். விடையத்தை கேட்டுவிட்டு அறிக்கைகளை பார்த்து, எக்ஸ்ரேக்கு அனுப்பலாம் என்றார். பின்னர் வலி மருந்துகள் தரப்பட்டன. எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ஒரு மணித்தியாளத்தின் பின்னர் எக்ஸ்ரேயும் வந்தது. அதுவரை அனைத்தும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் எக்ஸ்ரே வந்த பின்னர் மாலை வேளை பெரியவர் வரவில்லை. அங்கிருந்த வைத்தியர்களும் பார்க்கவில்லை.

எக்ஸ்ரே வந்ததும் அதனை பார்த்துவிட்டு உடன் சிகிச்சையளித்து விட்டுவிடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் இரவு 8 மணிக்கு தான் பெரியவர் வருவார் என்று சொல்லப்பட்டது. ஒரு பக்கம் கை வலி, மறுபக்கம் சக்கர நாட்காலியில் தொடர்ந்து இருப்பதால் வலி என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். எனினும் பெரியவர் 9 மணியின் பின்னரே வந்தார். எக்ஸ்ரேயை பார்த்து விட்டுச் சென்றார்.

சிகிச்சையும் இல்லை. முறிவு ஏற்படவில்லை என்றால் நடைமுறையை பாராது எனது நிலையை உணர்ந்து இரவு வேளையிலேனும் டிக்கட் வெட்டி வீட்டுக்கு விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. வெறுப்பு நிலை ஆரம்பித்தது. மறுநாள் நடந்தது தான் என்னை முழுமையான வெறுப்புக்கு உள்ளாக்கியது. மறுநாள் காலையில் விட்டுவிடுவார்கள் என்று நம்பியிருந்த போது, காலை 8 மணிக்கு பெரியவர் பார்வையிட்டு டிக்கெட்டை வெட்டி கையெழுத்திட்டார்.

அப்பாவையும் 9.30கு அங்கு நிப்பது போல் வருமாறு கூறிவிட்டோம். 10.30 மணிக்குள் வீட்டுக் சென்று விடலாம் என்று காலை சாப்பாடும் இல்லாமல் இருந்தேன். ஆனால் டிக்கெட்டை கொண்டு சென்று விட்டார்கள். பல தடவை கேட்டும் எதுவும் நடக்கவில்லை. 1 மணிக்கு பின்னர் தான் என்றார்கள். ஆனால் 1 மணி கடந்தும் விடுப்பு அட்டை கிடைக்கவில்லை. ஏனையவர்களை வார்டுக்கு வெளியில் நின்றால் சற்று நேரத்தில் பெயர் அழைக்கப்படும் என்றார்கள். நாமும் அவர்களுடன் வெளியில் சென்று காத்திருந்தோம். அப்படியிருந்தும் 4 மணிக்கு பின்னரே அங்கிருந்த வைத்தியர்களும் வெளியேறிச் சென்றதை தொடர்ந்து விடுப்பு அட்டை தந்தனர்.

இதேவேளை, முதல் நாள் என்னால் கட்டிலில் அதிகம் இருக்கவோ அல்லது படுக்கவோ முடியாது. எனவே எனது சகோதரர் வெளி நோயாளர் பிரிவில் இருந்து ஏற்றிவந்த சக்கர நாட்காலியிலேயே என்னை அமர வைத்தார். இதன்போது அங்கு வந்த அட்டன்டன் மாஸ்டர் ஒருவர், டொக்டர் வரப்போறார். கட்டிலில் இருத்துங்கள். இதில் இருக்க முடியாது என்றார் எனினும் விடையத்தை கூறிய போது அவர் சம்மதித்தார். ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த அட்டன்டன் ஒருவர், கட்டிலில் அமருங்கள், சக்கர நாட்காலியில் இருக்க இது உங்கட சொத்து இல்லை. என்று அதட்டினார். மாஸ்டருடன் பேசிவிட்டோம். என்று சற்று அதட்டலாக சகோதரர் பதிலளித்த போது அமைதியாகச் சென்றார்.

இந்தச் செயற்பாடுகள் கை முறிந்து விட்டது என்று வந்த எனக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. இது வைத்தியசாலைகளில் புதிதாக நடக்கும் விசயம் கிடையாது. தாமதமான இந்த நிர்வாகச் செயற்பாடுகளை நோயாளிகள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.

சமூகம் பற்றி சிந்திக்க தொடங்கிய பின்னர் நான் அன்று தான் யாழ் வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன். அதன்படி இந்த தாமதமான செயற்பாட்டால் பாதிக்கப்பட்டதுடன், அதனை சரியாக அவதானிக்க முடிந்தது. இதனை விமர்சிக்க முற்படும் போது வைத்தியரை குற்றம் சாட்டுகிறேன். வேலைப்பளு மிக்க வைத்தியசாலை நிர்வாகம் பற்றி தெரியுமா என்று வைத்தியத் துறைக்குள் இருப்பவர்கள் நிச்சயம் கேள்வி கேட்க முற்படுவார்கள். ஆனால் வேலைப்பளு மிக்க நிர்வாகம் என்று மட்டும் கூறி இத்தகைய தாமதமான செயற்பாடுகளை குறித்து நழுவல் போக்கில் செயற்பட முடியாது.

நோய் தீரும் என்று வரும் நோயாளிகளின் நிலைமைகளை கூட கவனத்தில் கொள்ளாமல் உரிய பதிலும் அளிக்காமல் விடுப்பு அட்டை வழங்கத் தாமதப்படுத்துவது ஏற்புடைய செயல் கிடையாது. இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு அரச வைத்தியசாலைகளை புறக்கணிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

அன்றைய தினம் காலையில் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி டிக்கெட் வெட்டப்பட்டதும், வீட்டுக்கு செல்லவென்று அப்பாவை முச்சக்கர வண்டியுடன் அழைத்துவிட்டோம். இதனால் அப்பாவின் ஒருநாள் உழைப்பு முற்றாக பாதிக்கப்பட்டது. நான் கடுமையாக சிரமப்பட்டேன். இதோ இப்போது வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று காத்திருந்து உணவைக்கூட வாங்கி உண்ணாமல் இருக்க நேரிட்டது.

இதனை நான் ஏன் கூறுகிறேன் என்றால் அன்று பெரிய வைத்தியர் டிக்கெட் வெட்ட கையெழுத்திட்டாலும். நீங்கள் வீட்டுக்கு செல்வது மாலையிலேயே முடியும் என்று சரியான பதில் வழங்கப்பட்டிருக்குமாயின் அதுவரை இருப்பதற்கான ஆயத்தங்களை செய்திருக்க முடியும். அப்பாவின் உழைப்பு பாதிக்கப்படாமல் இருந்திருக்கும். வெறுப்படைந்து போகும் அளவுக்கு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது.

இதில் பெரிய வைத்தியரின் தவறு கிடையாது. அவர் கையெழுத்திட்டுவிட்டார். விடுப்பு அட்டையை பதிவு செய்து தரவே அவ்வளவு மணி நேரம் எம்மை காத்திருக்க வைத்திருந்தனர். எனவே நிர்வாகத்திலேயே பெரும் தவறு இருக்கின்றது. அதனை வேலைபழு மிக்க துறையில் இது சகயம், இதனை கேள்விக்குட்படுத்த முடியாது என்று சொல்வார்களாயின் அது தமது தவறை "தவறு இல்லை" என்று வாதிடுவதற்கு ஒப்பானதாகும்.

இதுவரை நான் சமூகத்திற்காக குரல் எழுப்பினாலும் என் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பொதுச் சேவைகளில் உள்ள சிக்கல்களுக்காக குரல் கொடுத்திருக்கவில்லை. அன்று நான் பாதிக்கப்பட்ட பின்னர் அது குறித்து எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. சக்கர நாட்காலி விடையத்தில் நடந்து கொண்ட விதம், வைத்தியசாலையில் குறைந்தது ஒரு மாற்றுத் திறனாளியின் வசதி கருத்தில் கொள்ளப்படாது என்பதை காட்டியது. கைகள் முறியாதபடியால் மாற்றுத் திறனாளி என்று முன்னுரிமை கொடுத்து 3ம் திகதி மதியமோ அல்லது இரவோ எனக்கு விடுப்பு வழங்கியிருக்கலாம், ஆனால் அத்தகைய சலுகைக்கும் இடமில்லை என்பதை மறு நாள் ஆறு மணி நேரம் நடந்த சம்பவத்தின் பின்னர் உணர முடிந்தது.

இதில் எனக்கு ஒரேயொரு கவலை தான். வளர்ச்சியடைந்த நாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவமாக சகல வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படும். அது வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆனால் அபிவிருத்தி அரும்பும் நிலையில் இருக்கும் எமது நாட்டில் மனிதாபிமான அடிப்படையிலான சாதாரண சலுகைகள் கூட இல்லையா என்பதே எனது கவலை.

ஒரு நோயால் அரச வைத்தியசாலைக்கு சென்று தனக்கு உள்ள அத்தனை பிரச்சினைகளையும் குறிப்பிட்டு வைத்தியம் பெறும் நிலைமை எமது நாட்டில் இல்லை. உதவியின்றி இயங்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து விரைவாக சிகிச்சையளித்து வீட்டுக்கு அனுப்பும் மனம் எமது நாட்டு வைத்தியத் துறையிடம் இல்லை. அது தான் முடியவில்லை என்று பார்த்தால், குறைந்தது டிக்கெட் வெட்டியவுடன் வீட்டுக் செல்லும் நிலைமையும் எமது வைத்தியசாலைகளில் இல்லையென்றாகிவிட்டிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகையளிக்கும் வேறு போதனா வைத்தியசாலைகள் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அனைவருக்குமான விரைந்த சேவை வழங்க முடியாது எனில் குறைந்தது மாற்றுத் திறனாளிகளுக்கேனும் விரைந்த சேவையை அல்லது சலுகைகளை வழங்க போதனா வைத்தியசாலைகள் முன்வர வேண்டும். சம்பந்தப்பட்ட யாரேனும் இதை படித்தால் யாழ் போதனா வைத்தியசாலையை இதற்கு முன்னுதாரணமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுப்பார்களாயின் வரவேற்கத்தக்கது.

11.01.2020
#பிரகாஸ்
(குறிப்பு-இந்த பதிவு ஊடகவியளாளர் பிரகாஸ் அவர்களின் முகநூலில் இருந்து பெறப்பட்டது)

No comments

Note: Only a member of this blog may post a comment.