Breaking News


இந்த அரசிலுள்ளவர்கள் சிங்கப்பூரை உதாரணம் காண்பிக்கிறார்கள். நமக்கு விரும்பியதை மட்டும் எடுப்போமாகில் சிங்கப்பூர் ஒரு சிறந்த உதாரணம். சிங்கப்பூர் நான்கு தேசிய இனங்களை கொண்ட நாடு. அவர்களின் தேசிய கீதம் மாத்த சனத்தொகையில் 15 வீதத்திற்கும் குறைவான மக்களை கொண்ட மலே மொழியில் அமைந்துள்ளது. நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான்யூவின் அறிவுரைக்கு செவி கொடுப்பது சிறந்தது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான இரண்டு நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நவம்பர் 16ம் திகதி தேர்தலில் ஜனாதிபதி வெற்றிபெற்றார். இதிலுள்ள பிரச்சனைக்குரிய விடயம் என்னவென்றால், பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களை தவிர ஏனைய மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கவில்லை. இதை அவதூறாக நான் கூறவில்லை. தேசிய நல்லிணக்கம், ஒன்றிணைந்த நாடாக நாம் இருக்க வேண்டுமென்ற கரிசனை இருந்தால் இந்தகைய கருத்தை புறக்கணிக்க முடியாது.

ஒரு நாட்டின் செலவாக்கு மிக்க தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் அவரது சொந்த மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கிறார்களா என்பது முக்கியமல்ல. ஏனைய மக்களும் அவரில் நம்பிக்கை வைக்கிறார்களா என்பதே முக்கியமானது. துரதிஷ்டவசமாக இது இன்னும் நடைபெறாமலேயே உள்ளது.

ஜனாதிபதி பதவியேற்பின்போது, அனைத்து நாட்டு மக்களிற்கும் தானே ஜனாதிபதி என்றார். எமது நாடு பல கலாச்சரங்கள், மொழிகள், சமயங்கள், இனங்களை பிரதிபலிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மக்களை கொண்ட நாடு என்பதை புரிந்து கொண்டு, இந்த இடைவெளியை புரிந்து கொள்வார் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்தில் தங்கியிருக்கவில்லை. ஜனநாயகம் தப்பிப்பிழைக்கவும், செழிப்படையவும் வேண்டுமேயன்றி, வெளிப்படையாக பேரினவாதத்தை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டுமென்றால், இந்த கொள்ளை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் ஜனவரி3ம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை, அத்தகைய பின்னடைவான நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுத்திருந்தார். பிரச்சனை உருவாக வழிசமைத்து, அது ஆயுதப் போராட்டமாக உருவாகி, மூன்று தசாப்த காலமாக பல தீமைகளை கொண்டு வருவதற்கு காரணமான எமது நாட்டின் தலைவர்களின் பின்னடைவான சிந்தனைக்கு ஒப்பானதாக அந்த சிந்தனை காணப்பட்டது.

எமது மக்கள் அனைத்து மக்களின் பன்முகத்தன்மையினையும், சமத்துவத்தையும் அங்கீகரிக்கும் ஒன்றிணைந்த, பிரிக்க முடியாத, பிரிக்கப்படாத நாட்டிற்குள்  தீர்வொன்றை எட்ட இன்னமும் தயாராக இருக்கிறார்கள். புதிய அரசிலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டுன் ஒத்த கருத்துடன் இருக்கிறார்கள்.

இந்த அரசாங்கத்தில் உள்ள பலரும் சிங்கப்பூர் எப்படி செழிப்பையும் தேசிய நல்லிணக்கத்தையும் அடைந்தது என பேசுகிறார்கள். நமக்கு விரும்பியதை மட்டும் எடுப்போமாகில் சிங்கப்பூர் ஒரு சிறந்த உதாரணம். சிங்கப்பூர் நான்கு தேசிய இனங்களை கொண்ட நாடு. அவர்களின் தேசிய கீதம் மாத்த சனத்தொகையில் 15 வீதத்திற்கும் குறைவான மக்களை கொண்ட மலே மொழியில் அமைந்துள்ளது. நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான்யூவின் அறிவுரைக்கு செவி கொடுப்பது சிறந்தது என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.